போஸ்டர் செய்தி

காஷ்மீருக்காக எனது உயிரையும் கொடுப்பேன்: அமித்ஷா ஆவேசம்

Spread the love

புதுடெல்லி,ஆக.6–

எதிர்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை இன்று தாக்கல் செய்தார். மசோதா மீதான விவாதத்தின் போது, காஷ்மீருக்காக உயிரையும் கொடுப்பேன் என்று அமித்ஷா ஆவேசமாக கூறினார்.

ஜம்மு– காஷ்மீர் என்பது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் சீனா வசம் உள்ள காஷ்மீரின் பகுதிகள் இணைந்தது தான் என அவர் உறுதிப்பட கூறினார்.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே பாராளுமன்ற இரு அவைகளும் நேற்று கூடின. இதில் பேசிய மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா, ஜம்மு மற்றும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டபிரிவின் 370 வது சட்டபிரிவு ரத்து, காஷ்மீருக்கான 35 ஏ சட்ட பிரிவு ரத்து செய்யப்படுகிறது. இதற்கான குடியரசு தலைவர் ஒப்புதலும் பெறப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறினார். சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கான அறிவிப்பாணையையும் மத்திய அரசு வெளியிட்டது.

இந்த நிலையில், பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு மசோதாவை இன்று தாக்கல் செய்துள்ளார்.

எம்.பி.க்களின் கடும் எதிர்ப்புக்கு இடையில் இந்த மசோதாவை அமித்ஷா அறிமுகப்படுத்தினார். இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூச்சலிட்டனர். இதனை தொடர்ந்து மக்களவையில் விவாதம் நடைபெற்றது.

பாராளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று கூடுவதற்குமுன் பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாரதீய ஜனதாவின் செயல் தலைவர் ஜே.பி. நட்டா, பாராளுமன்ற விவகார அமைச்சர் பிரலாத் ஜோஷி மற்றும் மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர் மற்றும் நிதின் கட்காரி ஆகியோர் கலந்து கொண்டனர். காஷ்மீர் விவகாரம் பற்றி கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அமித்ஷா ஆவேசம்

காஷ்மீரை மீட்க எனது உயிரையும் கொடுக்க தயார் என மக்களவையில் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மீதான விவாதத்தின் போது உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆவேசமாக கூறினார். மக்களவை விவாதத்தில் அமித்ஷா பேசுகையில் கூறியதாவது:–

காஷ்மீர் இந்தியாவின் உள்ளடக்கிய பகுதி ஆகும். மாநிலத்தின் வளர்ச்சிக்காக பிரிக்கப்பட்டுள்ளது. 370 ரத்துக்கு மக்கள் ஆதரவு அளிக்கின்றனர். 370 ஐ மாற்றி அமைக்கலாம் என ஏற்கனவே சட்ட சரத்தில் கூறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒரே தேசிய கீதம் ஒலிக்க வேண்டும். நாடு முழுவதும் பொருந்தும் சட்டம் இனி காஷ்மீருக்கும் பொருந்தும். ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை மீட்கவும், காஷ்மீரில் இணைக்கவும் எனது உயிரையும் கொடுக்க தயார். ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்க காங்கிரஸ் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஐ.நா., நமது விவகாரத்தில் தலையிட வேண்டும் என காங்கிரஸ் விரும்புகிறதா? காஷ்மீர் தொடர்பாக சட்டம் இயற்றும் உரிமை பாராளுமன்றத்துக்கு உண்டு.

இவ்வாறு அவர் பேசினார்.

காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யின் ஆதீர் ரஞ்சன் சவுத்திரி பேசுகையில், காஷ்மீர் இந்தியாவின் உள்ளடக்கிய பகுதியா? இதில் விதிமீறல் நடந்துள்ளது. மாநில பிரிப்பு சரியில்லை என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய அமித்ஷா கூறுகையில்,

காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். ஜம்மு – காஷ்மீர் குறித்து நான் குறிப்பிடும்போது, அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் சீன வசம் உள்ள காஷ்மீரின் பகுதிகளை உள்ளடக்கியதே. யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்ற லடாக் மக்களின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *