ஸ்ரீநகர், மே 6–
ஜம்மு – காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
எல்லையில் தொடர்ந்து 12வது நாளாக பாகிஸ்தான் அத்துமீறலில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய ராணுவத்தினர் தகுந்த பதிலடி கொடுத்தனர்.
பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், தற்போது தெற்கு காஷ்மீர் பகுதியில் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் போலீசார் மற்றும் இந்திய ராணுவத்தினர் கூட்டாக இணைந்து, பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்.
அதேபோல், நேற்று பூஞ்ச் மாவட்டத்தின் சுரன்கோட் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடம் கண்டுபிடித்து அழிக்கப்பட்டது. அந்த இடத்தில் 5 வெடிகுண்டுகளும், 2 ரேடியோ செட்களும், 3 போர்வைகளும் கண்டெடுக்கப்பட்டது.
இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து 12வது நாளாக அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தினர். நேற்று இரவு குப்வாரா, பாரமுல்லா, பூஞ்ச், ரஜவுரி, மெந்தர், நவுசாரா, சுந்தர்பானி மற்றும் அக்னூர் ஆகிய 8 பகுதிகளில், பாகிஸ்தான் ராணுவத்தினர் கடுமையான துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இதற்கு இந்திய ராணுவத்தினர் தகுந்த பதிலடி கொடுத்தனர்.