செய்திகள்

காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: 11 இடங்களில் என்ஐஏ சோதனை

ஸ்ரீநகர், அக். 20–

காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் இன்று 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், 11 இடங்களில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது.

தெற்கு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் உள்ள சுகன் குக்கிராமத்தின் டிராகட் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில், இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வரும் நிலையில், இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

என்ஐஏ அதிகாரிகள் சோதனை

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில், 11 இடங்களில் தேசிய புலனாய்வு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவம் அதிகரித்துள்ளது. உள்ளூர் மக்களுடன் பதுங்கி இருந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதாகவும், தீவிரவாத செயல்களுக்கு சிலர் நிதியுதவி அளிப்பதாகவும் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, தீவிரவாத செயலுக்கு உதவுவோரை என்ஐஏ அதிகாரிகள் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், இன்று பாரபுல்லா, புல்வாமா, அவந்திபோரா, சோப்போர் மற்றும் குல்காம் உள்ளிட்ட 11 இடங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக நடந்த சோதனையின் போது, காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் கிலானியின் பேரன், தீவிரவாதிகளுக்கு நிதி உதவி அளித்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர், அரசு அதிகாரி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *