செய்திகள்

காஷ்மீரில் லஷ்கர் -–இ –-தொய்பா பயங்கரவாதி கைது; 5 கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல்

ஸ்ரீநகர், ஆக.8–

ஜம்மு -காஷ்மீரில் ஸ்ரீநகர் போலீசார் மற்றும் இந்திய ராணுவத்தின் 2 ஆர்.ஆர். படை பிரிவினர் இணைந்து கூட்டு வேட்டை நடத்தினார்கள். இதில் நாட்டில் தடை செய்யப்பட்ட லஷ்கர் -இ -தொய்பா இயக்கத்தின் ஹைபிரிட் பயங்கரவாதியை இந்திய ராணுவம் கைது செய்துள்ளது. பெயர் ஆர்ஷித் அகமது.

இவர் சங்கம் புத்காம் பகுதியை சேர்ந்தவர். இவரிடம் இருந்து 5 கை துப்பாக்கிகள், 5 தோட்டா உறைகள், 50 தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 2 கையெறி குண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக ஷால்தெங் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஹைபிரிட் பயங்கரவாதிகள் பட்டியலில் இருப்பதில்லை. அவர்களை பயங்கரவாத குழுவினர் ஒன்று அல்லது 2 முறை மட்டுமே தாக்குதல் நடத்த பயன்படுத்திக்கொள்வார்கள்.

கடந்த 2021–-ம் ஆண்டில் காஷ்மீரில் பொதுமக்கள், போலீசார், அரசியல் கட்சி தொண்டர்கள் மற்றும் சிறுபான்மை சமூக மக்கள் என பலரை இலக்காக கொண்டு 20-–க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதல்களில் இதுபோன்ற ஹைபிரிட் வகை பயங்கரவாதிகளே ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

ஏற்கனவே 4 பேர் கைது

கடந்த மே மாதம் 1–-ந் தேதி குல்காம் போலீசாருடன் இணைந்து காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்திய அதிரடி வேட்டையில் தடை செய்யப்பட்ட லஷ்கர் -இ -தொய்பா இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி யாமின் யூசப்பட் கைது செய்யப்பட்டார். அவர் பாகிஸ்தான் நாட்டை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் பயங்கரவாதிகள் மற்றும் உள்ளூர் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபட பணியமர்த்தப்பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இதேபோன்று கடந்த மே 10–-ந் தேதி லஷ்கர்- இ -தொய்பா இயக்கத்தின் ஹைபிரிட் பயங்கரவாதிகள் 4 பேரை போலீசார் கைது செய்து ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். இந்த ஹைபிரிட் பயங்கரவாதிகளை அடையாளம் காண்பதும், பயங்கரவாத குழுவினர் அவர்களை பயன்படுத்துவதை தடுத்து நிறுத்துவதும் பெரும் சவாலான பணியாக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.