செய்திகள்

காவேரிப்பட்டணம் அருகே டிராக்டர் மீது ஆம்னி பஸ் மோதி விபத்து

3 மாத பெண் குழந்தை உட்பட 5 பேர் பலி

காவேரிப்பட்டணம், பிப். 23–

காவேரிப்பட்டணம் அருகே இன்று காலை டிராக்டர் மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் 3 மாத பெண் குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தருமபுரி மாவட்டம் நூலகஹள்ளி அருகே உள்ள எம்.சவுளூர் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (50). இன்று அதிகாலையில் இவர் மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த மல்லி (65), சின்னசாமி என்பவரது மகன் முத்து (20), வசந்தி (45), சதீஷ் (21), இவரது மனைவி செல்லம்மாள் (19), இவர்களது 3 மாத பெண் குழந்தை வர்ஷணி, புஷ்பா (35), காசி (60), அருண் (18), காவ்யா, முருகன் உட்பட 12 பேரும் டிராக்டரில், ஆந்திரா மாநிலம் வி.கோட்டாவில் கத்தாழை செடிகளை அறுக்கும் பணிக்காக சென்றுள்ளனர்.

தருமபுரி – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டர் வந்துக் கொண்டிருந்தது. அப்போது, சிவகாசியில் இருந்து பெங்களூரு நோக்கி ஆம்னி பஸ் வந்து கொண்டிருந்தது. பேருந்தை, விருதுநகர் பகுதியை சேர்ந்த கருப்பசாமி (50) என்பவர் ஓட்டி வந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே போத்தபுரம், எர்ரஹள்ளி என்னுமிடத்தில் காலை 7 மணியளவில் டிராக்டர் சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த தனியார் ஆம்னி பேருந்து, டிராக்டரை உரசிபடி வேகமாக மோதியது.

இதில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிராக்டரில் இருந்த 12 பேரும் கீழே தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் டிராக்டர் ஓட்டி வந்த முத்து (20), மல்லி( 65), முனுசாமி(50), வசந்தி(45) மற்றும் 3 மாத பெண் குழந்தை வர்ஷணி ஆகியோர் படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவேரிப்பட்டணம் போலீஸார், பொதுமக்களின் உதவியுடன், படுகாயமடைந்தவர்களை மீட்டு, காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனை, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பின்னர், விபத்துக்குள்ளான டிராக்டர், தனியார் ஆம்னி பேருந்தை ஜேசிபி வாகன உதவியுடன் போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவேரிப்பட்டணம் போலீஸார், விபத்தை ஏற்படுத்திய தனியார் ஆம்னி பேருந்து ஓட்டுநர் கருப்பசாமியை கைது செய்தனர். விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *