போஸ்டர் செய்தி

காவிரி நதி நீர் விவகாரம்: ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி

Spread the love

சென்னை, ஜூலை 20

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக சட்டசபையில் இன்று காரசார விவாதம் நடைபெற்றது. நடுவர்மன்ற இறுதி தீர்ப்புக்கு பின்னர் 2 மாத மத்திய ஆட்சியில் தி.மு.க. என்ன செய்தது என்று மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

சட்டசபையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறும்போது, காவிரி தமிழகத்தின் உயிர்நாடி பிரச்சினை ஆகும். காவிரியை நம்பித்தான் மெகா கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. காவிரி ஆணையத்துக்கு நிரந்தர தலைவரை நியமிக்காமல் மத்திய அரசு தவிர்த்து வருகிறது.

தற்போது 66 டிஎம்சி தண்ணீரை தேக்கும் வகையில், மேகதாதுவில் அணை கட்ட கர்னாடகா வேகமாக ஈடுபட்டு வருகிறது. உச்சநீதிமன்றம் மற்றும் நடுவர் மன்றத்தை மீறும் செயலை தடுத்து நிறுத்த வேண்டும். இது தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று பேசினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், இது பற்றி அவையில் பலமுறை பேசப்பட்டு விட்டது. நிரந்தர தலைவர் அமைப்பது தொடர்பாக வழக்கு நடைபெற்று வருகிறது. மேகதாது அணை குறித்தும், வழக்குகள் நடைபெற்று வருகின்றன. காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும் என்று கடிதம் எழுதப்பட்டுள்ளது. பிரதமரையும், புதிதாக பொறுப்பேற்ற நீர்வளத்துறை அமைச்சரையும் சந்தித்து முறையிடப்பட்டிருக்கிறது. மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. அங்கு அணை கட்டினால் தமிழகம் பாலைவனமாகிவிடும். எனவே மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளோம் என்றார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மத்திய அரசிடம் அதிக அதிகாரம் குவிந்துள்ளது. மத்தியில் 17 ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்தபோது, காவிரி நதிநீர் விஷயத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள். எதிர்க்கட்சி தலைவர் தற்போது இலவச ஆலோசனை வழங்குகிறார் என்றார்.

கூச்சல் குழப்பம்

அப்போது தி.மு.க. உறுப்பினர்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர்.

அதை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் பேசும்போது, தங்களது ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் தொடர்பாக குறிப்பிட்டார்.

அதை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, காவிரி பிரச்சினை பற்றி பேசி கொண்டிருக்கிறோம். எதிர்க்கட்சி தலைவர் பேசும்போது, அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தோம். மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, கிடைத்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்த தவறிவீட்டீர்கள். நீங்கள் பயன்படுத்தியிருந்தால், நிரந்தர தீர்வை பெற்றிருக்கலாம். ஆனால் நீதிமன்ற தீர்ப்புகளை பெற்றுதான் உரிமைகளை நிலைநாட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

உங்களுக்கு கிடைத்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்தவில்லை. 2007 ம் ஆண்டு நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு கிடைத்த பின்னர் 2 மாத காலம் மத்திய ஆட்சியில் இருந்தீர்கள். அப்போது நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் பிரச்சினைக்கு வேலையில்லாமல் போய் இருக்கும். ஆனால் தவறு செய்தவர்கள் நீங்கள் தான் என்றார்.

அப்போதும் தி.மு.க. உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சபாநாயகர் தனபால் கூறும்போது, தலைவர்கள் விவாதித்து கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் எழுந்து நின்று பேசினால், எப்படி சரியாக இருக்கும். விவாதத்தில் அமைச்சர்கள் பதில் தர வேண்டும் என்றார்.

அப்போது அமைச்சர் டி.ஜெயகுமார் குறுக்கிட்டு, முதல்வரும் நான் கூறிய கருத்தைதான் தெரிவித்திருக்கிறார். 17 ஆண்டு கால மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது என்ன செய்தீர்கள். நீங்கள் செயல்பட்டு இருந்தால், ஜீவாதார பிரச்சினை நீங்கியிருக்கும் என்றார்.

பின்னர் துரைமுருகன் எழுந்து பேசுகையில், காவிரி நடுவர்மன்றம் வேண்டும் என்று தீர்மானம் போட்டதே கருணாநிதி ஆட்சி தான் என்றார்.

அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்கையில், எதிர்க்கட்சி தலைவர் சத்தமாக பேசினால் உண்மையாகிவிடும் என நினைக்கிறார். விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சினையான காவிரி நதிநீர் விஷயத்தில் 2007ம் ஆண்டு இறுதி தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் 2 மாத காலம் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது அதை பயன்படுத்தி இருந்தால், வழக்கு தொடராமல் தடுத்திருக்க முடியும். அம்மா தான், நடுவர் மன்ற தீர்ப்பு தொடர்பாக நீதிமன்றத்தை நாடி உரிமையை பெற்று தந்தார்.

சட்டப்போராட்டம் நடத்தி தமிழக உரிமையை நிலைநாட்டினார். ஆனால் நீங்கள் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தாமல் தவறவிட்டீர்கள். அதிகாரம் என்பது ஒரு முறை தான் கிடைக்கும். அதை நீங்கள் தவறவிட்டீர்கள். காவிரி நதிநீர் பிரச்சினையில் வாழப்பாடி ராமமூர்த்தி மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள் என்றார்.

அப்போது எதிர்க்கட்சி தலைவர் துரைமுருகன் பேசும்போது, இறுதி தீர்ப்பில் குறைபாடு இருந்தால், அது தொடர்பாக முறையிட வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருந்தது. 2 மாதத்தில் என்ன செய்ய முடியும் என்றார்.

அதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத்தலைவர் சமாளிக்க பார்க்கிறார். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருந்தால், விவசாயிகளுக்கு நன்மை கிடைத்திருக்கும். போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என்றார்.

அதை தொடர்ந்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், காவிரி நதிநீதி தொடர்பாக பலமுறை இங்கு பேசி விவாதம் நடைபெற்றுள்ளது. எது உண்மை என்று நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும். இதுபற்றி நீங்கள் பேசிக்கொண்டிருந்தால், எங்களிடமிருந்து பதில் வந்து கொண்டே இருக்கும். காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *