சிவகங்கை, ஜூலை.30-
அண்ணா தி.மு.க. ஆட்சி அமைந்ததும் தீபாவளியின்போது பெண்களுக்கு சேலை வழங்கப்படும், காவிரி–குண்டாறு இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அண்ணாசிலை முன்பு திரண்ட தொண்டர்கள், மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக மக்கள் நிம்மதி இன்றி வாழ்ந்து வருகின்றனர். எங்கு பார்த்தாலும் போதைப்பொருள், கட்டப்பஞ்சாயத்து, சட்டம்–ஒழுங்கு சீர்கேடு, கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகின்றன.
தமிழகத்தில் உள்ள இளைஞர்கள், போதையின் பாதையில் சென்று கொண்டிருக்கின்றனர். அந்த அளவிற்கு தமிழகத்தில் போதை கலாசாரம் கொடி கட்டி பறக்கிறது.
சிவகங்கை மாவட்டம் வறட்சியான மாவட்டம். இங்கு மக்கள் விவசாயத்தை நம்பி இருக்கின்றனர். நான் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் இந்த மாவட்டத்தில் ஏராளமான நீர்நிலைகள் குடிபராமரிப்பு செய்யப்பட்டன. இது தவிர தமிழகம் முழுவதும் விவசாய கடன்கள் 2 முறை ரத்து செய்யப்பட்டன.
அண்ணா தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த ஏராளமான திட்டங்களை ரத்து செய்ததுதான் தி.மு.க. அரசின் சாதனையாக உள்ளது.
குறிப்பாக தாலிக்கு தங்கம் வாங்கும் திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்தார். அதன் மூலம் ஏராளமான ஏழை பெண்கள் பயனடைந்தனர் அந்த திட்டத்தையும் தி.மு.க. அரசு ரத்து செய்தது.
மீண்டும் அண்ணா தி.மு.க. ஆட்சிக்கு வரும்போது அந்த திட்டத்தை கொண்டு வருவோம். இது தவிர ஆண்டுதோறும் தீபாவளி அன்று தமிழகத்தில் பெண்களுக்கு சேலைகள் வழங்கப்படும். தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக முதலமைச்சர் குடும்பம் மட்டும்தான் செழிப்பாக இருந்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது மாவட்ட செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன் எம்.எல்.ஏ., அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கோகுலஇந்திரா, மாவட்ட பொறுப்பாளர் சீனிவாசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.கே.உமாதேவன், மாநில இளைஞர் பாசறை துணைச்செயலாளர் துலாவூர் பார்த்தீபன், மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாவட்டசெயலாளர் பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சிவகங்கை
சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் திரண்டு இருந்த தொண்டர்கள், பொதுமக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
தி.மு.க. அரசால் கடந்த 4 ஆண்டுகளில் ஒரு மருத்துவக்கல்லூரியாவது கொண்டுவர முடிந்ததா? நாங்கள் புதிதாக 6 மாவட்டங்கள், ஏராளமான தாலுகாக்கள், 284 ஆரம்ப சுகாதார நிலையங்கள் கொண்டு வந்தோம். சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் 30 அம்மா கிளினிக் கொண்டுவந்தோம். ஆனால் எல்லாவற்றையும் தி.மு.க. இழுத்துமூடிவிட்டது. மீண்டும் அண்ணா தி.மு.க. ஆட்சி அமைந்ததும் அம்மா மினி கிளினிக் திட்டம் மீண்டும செயல்படுத்தப்படும்.
காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்தை 14 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மாநில நிதியில் நான் முதலமைச்சராக இருந்த காலத்தில் நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தேன். இதன் மூலம் ஏராளமான விவசாயிகள் பயன் அடைந்தனர். ஆனால் தற்போது உள்ள தி.மு.க. அரசு கண்மாயில் தண்ணீர் நிரப்ப வழிசெய்யும் இந்த திட்டத்தை முடக்கி, கிடப்பில் போட்டுவிட்டார்கள். இது திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் என 5 மாவட்ட விவசாயிகளின் தாகம் தீர்க்கும் திட்டம். அண்ணா தி.மு.க. ஆட்சி அமைந்ததும் இந்த திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம்.
இந்த மாவட்டத்தில் அப்பாவி அஜித்குமார் எப்படி காவல்துறையால் தாக்கப்பட்டு இறந்தார் என்பது தெரியும். வேலியே பயிரை மேய்வது போல, போலீசே கொன்றால் என்ன செய்வது?
அண்ணா தி.மு.க. ஆட்சியில் சிவகங்கைக்கு என நிறைய திட்டங்கள் நிறைவேற்றி இருக்கிறோம். காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம், குடிமராமத்து, இருவழிச் சாலைகள் அமைத்தோம். மத்திய வங்கிக்கு உயிரூட்டினோம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டினோம். பள்ளிகளை தரம் உயர்த்தினோம், மேம்பாலங்கள், தடுப்பணைகள், கல்லூரி கட்டிடங்கள், ரெயில்வே மேம்பாலம் இப்படி பல திட்டங்கள் கொண்டு வந்தோம். எனவே மக்கள் அண்ணா தி.மு.க.வுக்கு உறுதுணையாக இருந்து தேர்தலில் வெற்றியை தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
![]()





