மத்திய அரசு தகவல்
புதுடெல்லி, ஜூலை25-
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
தமிழ்நாடு–கர்நாடகா இடையே காவிரி ஆற்றில் தண்ணீரை பங்கிட்டுக்கொள்வது தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது.
இதற்கு நிரந்தர தீர்வு காண காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்று ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. இரு மாநிலங்களுக்கு இடையே காவிரி நீரை பங்கிடுவது தொடர்பாக இந்த ஆணையங்கள் அவ்வப்போது உத்தரவிட்டு வருகிறது.
ஆனால் ஆணையத்தின் உத்தரவை கர்நாடகா கண்டுகொள்வதில்லை. உரிய நீர் திறந்து விடப்படாததால் இந்த ஆண்டு ஜூன் மாதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படவில்லை.
இதற்கிடையே காவிரி ஆற்றின் குறுக்கே ரூ,9 ஆயிரம் கோடியில் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா முயற்சித்து வருகிறது. இதற்கு ஒப்புதல் தருமாறு மத்திய அரசுக்கு கர்நாடகா அனுமதி கேட்டுள்ளது. மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையே மேகதாது அணை தொடர்பாக தேனி மாவட்டம் பெரியகுளம் அழகாபுரியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர், மத்திய நீர்வள ஆணையத்திடம் சில தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டு இருந்தார்.
அதற்கு நீர்வள ஆணையம் பதில் அனுப்பியுள்ளது. அந்த பதிலில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பெங்களூருவில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் மேகதாது அணை திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை குறித்து முன்னாள் பிரதமர் தேவேகவுடாவிடம் இருந்து 15.3.2024 அன்று கடிதம் பெறப்பட்டது. அந்த கடிதத்துக்கு 3.5.2024 அன்று பதில் வழங்கப்பட்டது.
காவிரியின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவை எதிர்த்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் எழுதிய கடிதத்தையும் நீர்வள ஆணையம் பெற்றது. ஆனால் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக மாநில அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் இன்று வரை எந்த ஒப்புதலும் வழங்கவில்லை.
இவ்வாறு நீர்வள ஆணையம் பதில் தெரிவித்துள்ளது.