போஸ்டர் செய்தி

காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்துக்கு உத்தரவிடவேண்டும்

Spread the love

புதுடெல்லி,ஜூன்.25–

காவிரி மேலாண்மை வாரியம் டெல்லியில் மீண்டும் இன்று கூடியது. கர்நாடகம் தண்ணீர் திறக்காதது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்துக்கு உத்தரவிடவேண்டும் என்று தமிழகம் வலியுறுத்தியது.

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் கடந்த மாதம் 28-ம் தேதி கூடியது. அப்போது 9.19 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு கர்நாடகம் திறந்து விட வேண்டும் ஆணையம் உத்தரவிட்டது. கர்நாடகம் தனது அணைகளில் தண்ணீர் இல்லை என்றும், குடிநீருக்கே திண்டாடுகிறோம் என்றும் கர்நாடக அமைச்சர்கள் மாறிமாறி பேட்டி அளித்து வருகின்றனர்.இந்த நிலையில், கர்நாடகா காவிரியில் தண்ணீர் திறந்து விடாதது குறித்து ஆலோசிக்க இன்று காவிரி மேலாண்மை வாரியம் கூடியது. காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசேன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி தண்ணீர் தரவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தண்ணீர் விட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி ஜூன் மாதத் தவணையாக 9.19 டிஎம்சி நீரை வழங்க ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் 2 டிஎம்சி நீர் மட்டுமே வழங்கிய கர்நாடகா, பருவ மழையையும், அணைகளில் நீர் இருப்பையும் காரணம் காட்டி வழக்கம்போல் கையை விரித்தது. மேலும் மேகதாதுவில் அணை கட்டும் பணி​யில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் டெல்லி சேவா பவனில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 4-வது கூட்டம் ஆணைய தலைவர் மசூத் உசைன் தலைமையில் தொடங்கியது.

தமிழகம் தரப்பில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பிரபாகர், காவிரி தொழில்நுட்ப குழு உறுப்பினர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கர்நாடகா தரப்பில் நீர்வளத்துறை செயலாளர், தலைமை பொறியாளர் ஆகியோர் பங்கேற்றனர் .

தமிழகத்தை சேர்ந்த அதிகாரிகள் தங்களது நிலைபாட்டை வலியுறுத்தி பேசினர். அவர்கள் கூறும்போது, காவிரி படுகையில் எந்த விதமான கட்டுமானங்களையும் மேற்கொள்ள கர்நாடகாவிற்கு அனுமதி வழங்கக்கூடாது. மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சிக்கு தமிழகம் கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறது. மேகதாது அணை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தி வழக்கு நிலுவையில் உள்ளது, எனவே வருங்காலங்களில் இந்த கூட்டத்தில் அதுபற்றி பேசக்கூடாது.

ஜூன் மாதத்தில் கர்நாடகா திறக்க வேண்டிய 9.91 டிஎம்சி தண்ணீர் இதுவரை திறக்கப்படவில்லை. எனவே 9.91 டிஎம்சி தண்ணீரை இந்த மாத இறுதிக்குள் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடவேண்டும். காவிரியில் இருந்த நீர் திறக்கப்படுவதை கண்காணிக்க தகுதி வாய்ந்த பொறியாளர்களை நியமிக்க வேண்டும். ஜூலை மாதத்தில் திறக்க வேண்டிய 31.24 டிஎம்சி தண்ணீரையும் கர்நாடகா திறக்க உத்தரவிடவேண்டும். காவிரி நீர் முறைப்படுத்தும் கூட்டத்தை இனி வரும் காலங்களில் பெங்களூருவில் மட்டுமே நடத்த வேண்டும். காவிரியில் உடனடியாக திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *