சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வோம்: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை, ஜூலை 13–
காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவின்படி, தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடகம் கைவிரித்து விட்டது. இதனையடுத்து காவிரி விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வோம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகம்–கர்நாடகம் இடையே காவிரி நீரை பங்கிட்டு கொள்வதில் பல ஆண்டுகளாக பிரச்சினை நீடித்து வருகிறது.
காவிரி விவகாரத்தில் தீர்வு காண்பதற்காக காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த இரு குழுக்களும் அவ்வப்போது கூடி காவிரி நீரை பகிர்ந்தளிப்பது பற்றி ஆலோசித்து உத்தரவிட்டு வருகிறது. இந்த நிலையில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 99வது கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில் தமிழகத்திற்கு தினமும் ஒரு டி.எம்.சி காவிரி நீரை 20 நாட்களுக்கு திறக்கும்படி காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.
இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து விவாதிக்க முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது.
இதில் துணை முதலதைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றும் உயர் அதிகாரிகள், மூத்த வக்கீல்கள், சட்ட நிபுணர்கள் கலந்து கொண்டனர்.
இதில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்து இருப்பது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பிறகு முதலமைச்சர் சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் இந்த முறை இயல்பான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஆனால் இதுவரை அணைகளில் 28 சதவீதம் அளவுக்கு நீர் இருப்பு பற்றாக்குறையாக உள்ளது. இதுகுறித்து காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தெளிவாக எடுத்துக்கூறியுள்ளோம். அதனால் இந்த மாத இறுதி வரை எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டாம் என்று கூறினோம். ஆனாலும் அந்த குழு, தினமும் ஒரு டி.எம்.சி. நீர் தமிழகத்திற்கு திறக்கும்படி உத்தரவிட்டுள்ளது.
தற்போது காவிரி அணைகளில் 60 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. இது எங்களுடைய விவசாய பணிகளுக்கு தேவைப்படுகிறது. அதனால் இந்த மாத இறுதி வரை தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது. அதே நேரத்தில் கடந்த 3 நாட்களாக கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறக்கப்பட்டு வருகிறது.
இந்த உத்தரவை எதிா்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளோம். மேலும் தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பது குறித்து ஆலோசிக்க நாளை (ஞாயிற்றுக்கிழமை) அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுவது என்று தீர்மானித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கர்நாடக அரசின் இந்த முடிவு தமிழக விவசாயிகள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் காவிரிநீர் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:-
காவிரியில் தினமும் ஒரு டி.எம்.சி. நீர் இந்த மாதம் (ஜூலை) இறுதி வரை வழங்க வேண்டும் என்று கர்நாடகாவிற்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது.
இந்த ஒழுங்காற்று குழு என்பது தமிழ்நாடு குழு அல்ல. தமிழகம், கர்நாடகம் என 2 மாநிலத்திற்கும் பொதுவான குழு. இது சுப்ரீம் கோர்ட்டால் அமைக்கப்பட்ட குழு.
இந்த குழு கர்நாடக அணைகளில் உள்ள மொத்த நீர் இருப்பை கணக்கெடுத்து கர்நாடகத்தின் தேவைக்கு போக தமிழ்நாட்டுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு டி.எம்.சி. வீதம் தண்ணீர் வழங்க உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கர்நாடக அரசு சொல்வது சிறுபிள்ளைகள் விளையாடுகிறபோது அழுகுணி ஆட்டம் ஆடுவதுபோல் இருக்கிறது. இதே ஒழுங்காற்று குழு தமிழ்நாட்டுக்கு கூட பாதகமாக பலமுறை கருத்து சொல்லி இருக்கிறது.
சுப்ரீம் கோர்ட்டால் உருவாக்கப்பட்ட ஒழுங்காற்று குழுவின் உத்தரவை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று சொல்வது சுப்ரீம் கோர்ட்டின் ஆணையை எதிர்த்து சொல்வது போன்றதாகும். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிர்ப்பு சொல்வது அரசியல் சட்டத்தை மீறும் செயலாகும். சுப்ரீம் கோர்ட் கர்நாடகத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல. இந்தியா முழுமைக்கும் பொதுவானது.
தமிழ்நாட்டுக்கும், சுப்ரீம் கோர்ட் செல்வதற்கு வழி தெரியும். இந்த விவகாரத்தில் பிரச்சினை எழாமல் இருக்க ஒழுங்காற்று குழுவின் உத்தரவை ஏற்று நடைமுறைப்படுத்துவதுதான் அண்டை மாநிலங்களுக்கு இடையே நட்புறவை பலப்படுத்துவதாக இருக்கும். இது தெரியாதவரல்ல கர்நாடக முதலமைச்சர். அதுபோலவே நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கும் இது நன்றாக தெரியும்.
இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் கூறினார்.