செய்திகள்

காவிரியில் இருந்து கர்நாடகம் தமிழகத்துக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விட வேண்டும்

காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை

புதுடெல்லி, அக்.12-

காவிரியில் இருந்து கர்நாடகம், தமிழகத்துக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை செய்துள்ளது.

தமிழ்நாட்டுக்கும், கர்நாடகத்துக்கும் இடையே காவிரி நீர் பங்கீட்டு விவகாரம் பிரச்சினையாகி உள்ள நிலையில், காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 88-வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட 4 மாநில அதிகாரிகளும் அந்தந்த மாநிலங்களில் இருந்து கலந்து கொண்டனர்.

கூட்டம் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது. வழக்கம்போல கூட்டத்தின் தொடக்கத்தில் நீரியல் தரவுகள் சேகரிக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து தண்ணீர் வழங்கல் பற்றி விவாதிக்கப்பட்டது.

இந்த விவாதத்தின்போது அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி வீதம் (மொத்தம் 20.75 டி.எம்.சி.) தண்ணீரை திறந்து விடுமாறு கர்நாடக அரசை வலியுறுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

ஆனால் கர்நாடக அரசு அதிகாரிகள் இதற்கு மறுப்பு தெரிவித்தனர். கர்நாடகத்தின் 4 அணைகளுக்கும் தண்ணீர் வரத்து, கடந்த 10ந் தேதி நிலவரப்படி 51 சதவீதம் குறைவாக இருப்பதாக தெரிவித்த அவர்கள், கர்நாடக அணைகளை உத்தரவாதத்துடன் நம்பியிருக்க முடியாது என்றும் கூறினர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட ஒழுங்காற்றுக்குழு அதிகாரிகள், வருகிற 16-ந் தேதி காலை 8 மணி முதல் 31-ந் தேதி வரை வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் தண்ணீரை திறந்து விட வேண்டும் என முடிவு செய்து அதனை கர்நாடக அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.

இதனை காவிரி மேலாண்மை ஆணையத்துக்கும் பரிந்துரைத்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *