செய்திகள்

காவல் துறையினருக்கு 10 சதவீத ஊதிய உயர்வு, 8 மணி நேரம் பணி

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை, செப். 11–

காவல் துறையினருக்கு குறைந்தபட்சம் 10 சதவிகிதம் ஊதிய உயர்வு வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கரூரைச் சேர்ந்த மாசிலாமணி என்ற காவலர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில், 24 மணி நேரமும் பணியில் ஈடுபடும் தமிழ்நாடு காவல்துறையினரின் ஊதியத்தை உயர்த்தி தர வேண்டும். காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

காவல்துறை ஆணையம்

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், காவல்துறையில் ஆள் பற்றாக்குறை நிலவுவதால் தற்போது பணியில் உள்ளவர்கள் மன அழுத்தம் மற்றும் மன உளைச்சலுடன் இருப்பதாகக் கூறினர். காவல்துறையினரின் பணி மகத்தானதாகும், இதனை வேறு பணிகளுடன் ஒப்பிட முடியாது எனக் குறிப்பிட்டனர். ஆகவே, அவர்களுக்கு குறைந்தபட்சம் 10 சதவிகிதம் கூடுதல் ஊதியம் வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் வரும் காலங்களில் காவல் துறையினருக்கு 8 மணி நேர வேலை முறையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். 3 ஷிப்ட்டுகளில் காவல் துறையினர் பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதிகள் ஆணையிட்டனர்.

மேலும், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில், மனநல மருத்துவர்கள், உளவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியில் உள்ள காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட காவல் துறையினருக்கான ஆணையத்தை 3 மாதத்திற்குள் அமைக்க வேண்டும் என்றும் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *