சென்னை, அக். 25
காவல் அதிகாரிகளின் வருடாந்திர ரகசிய அறிக்கையை தாக்கல் செய்வதற்கு உருவாக்கப்பட்ட தனி செயலியை டி.ஜி.பி. சங்கர் ஜிவால் துவக்கி வைத்தார்.
இது தொடர்பாக டிஜிபி அலுவலகம் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பு கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் ஒவ்வொரு காவல் அதிகாரிக்கும் (பிரிவு ஏ அண்ட் பி அதிகாரிகள்) வருடாந்திர ரகசிய அறிக்கை அல்லது வருடாந்திர செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கையானது இதுவரை காகித வடிவில் தயாரித்து, செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
டிஜிபி சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் இந்த வருடாந்திர ரகசிய அறிக்கையை இணையவழி வாயிலாக செயல்படுத்த தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது, முதலமைச்சர் முழுமையாக ஒப்புதல் அளித்து கடந்த 2022 – 2023 ஆம் ஆண்டு காவல்துறை மானியக் கோரிக்கையின் போது தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் காவல் உதவி ஆய்வாளர்கள் முதல் காவல் கண்காணிப்பாளர்கள் அல்லாத அதிகாரிகள் வரை வருடாந்திர ரகசிய அறிக்கையை SPARROW செயலி மூலம் உருவாக்க ஆணை பிறப்பித்துள்ளார். இந்த திட்டத்திற்கு நிர்வாக மற்றும் நிதி அனுமதி வழங்கி பல்வேறு அரசு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த SPARROW செயலியை டிஜிபி சங்கர்ஜிவால் துவங்கி வைத்தார்.
இந்த வருடாந்திர இரகசிய அறிக்கையை தமிழ்நாடு காவல்துறை மற்றும் தேசிய தகவல் மையம் இணைந்து வடிவமைத்து, உருவாக்கியுள்ளது. இந்த செயலி மூலம் வருடாந்திர இரகசிய மதிப்பீட்டு அறிக்கையை இணையவழி மூலம் உருவாக்குவது மிகவும் பாதுகாப்பானது, மேலும் இந்த அறிக்கைகள் சேதம் ஆகாமலும், அழியாமலும் பாதுகாப்பாக இருக்கும். இதுபோன்றதொரு முயற்சி நாடு முழுவதும் உள்ள ஐபிஎஸ் அல்லாத அதிகாரிகளுக்கு வருடாந்திர ரகசிய அறிக்கையை மின்னணு முறையில் உருவாக்கி செயலாக்குவது காவல்துறையில் இதுவே முதல் முறையாகும்.
இந்த செயலியை அனைத்து மாவட்டத்தில் உள்ள காவல் அதிகாரிகளுக்கும் மற்றும் நிர்வாக அதிகாரிகளுக்கும் திறம்பட செயலாற்ற எளிய முறையில் தானியங்கி மற்றும் கணினி மயமாக்கல் அலுவலக பிரிவு மூலம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வருடாந்திர இரகசிய மதிப்பீட்டு அறிக்கையினை செயலி மூலம் இனிவரும் காலங்களில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என டிஜிபி சங்கர்ஜிவால் அனைத்து காவல் உயர் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.