சென்னை, பிப். 5–
சென்னையில் நடைபெற்ற காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கமிஷனர் அருண் உத்தரவிட்டார்.
சென்னை பெருநகர காவல்துறையினரின் பணி சிறக்க அவர்தம் குறைகளை போக்கி, காவலர் குடும்ப நலனுக்கு அதிகாரிகள் உதவிடும் வகையில், சென்னை பெருநகர காவல்துறை கமிஷனர் ஆ.அருண் உத்தரவின்பேரில் வேப்பேரி, காவல் ஆணையாளர் அலுவலக கலந்தாய்வு கூடத்தில் நடைபெற்ற ‘‘காவலர்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில் கமிஷனர் ஆ.அருண், சென்னை பெருநகர காவல், சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து காவல் நிலையங்கள், ஆயுதப்படை மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து மொத்தம் 210 குறைதீர் மனுக்களை பெற்றார்.
இம்முகாமில் பணிமாறுதல், தண்டனை களைதல், காவலர் குடியிருப்பு கோருதல், ஊதியம் குறைபாடு களைதல் உள்ளிட்ட மனுக்களை பெற்று, இம்மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு கமிஷனர் அருண் உத்தரவிட்டார்.
இம்முகாமில், சென்னை பெருநகர காவல், கூடுதல் ஆணையாளர்கள் கபில்குமார் சி சரட்கர் (தலைமையிடம்), கே.எஸ்.நரேந்திரன் நாயர் (வடக்கு), காவல் இணை ஆணையாளர் (தலைமையிடம்) சரோஜ்குமார் தாகூர், காவல் துணை ஆணையாளர்கள் எஸ்.மேகலினா ஐடன் (நலன்), கே.அதிவீரபாண்டியன் (நிர்வாகம்), காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.