செய்திகள்

காவலர்கள்–குடும்ப உறுப்பினர்களின் மன அழுத்தத்தை போக்க உளவியல் பயிற்சி: 72 ஆயிரம் பேர் பயன்

Spread the love

சென்னை, ஜூலை 20–

காவலர்கள்–குடும்ப உறுப்பினர்களின் மன அழுத்தத்தை போக்க ரூ.10 கோடியில் செயல்படுத்தப்பட்ட உளவியல் பயிற்சியில் 72 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர் என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவதாத்திற்கு பின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:– பொது இடங்களில் குற்றங்கள் நடப்பதை தடுப்பதற்கும், குற்றவாளிகள் குற்றச் செயல்களில் ஈடுபடும் போது அவர்களின் நடவடிக்கைகளை அறிந்து கைது செய்வதற்கு ஏதுவாகவும், காவல் நிலையங்களில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவும், காவல் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில், இணையதள முறைமை கேமராவுடன் கூடிய உட்சுற்று கண்காணிப்பு தொலைக்காட்சி கேமராக்கள் (சிசிடிவி) பொருத்தப்பட்டுள்ளன.

மாநிலம் முழுவதும் கேமராக்கள் பொருத்த தேவையான முக்கிய இடங்களாக ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 390 அரசு மற்றும் தனியார் கட்டடங்கள் கண்டறியப்பட்டு, அவற்றுள் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 690 கட்டடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் சென்னை மாநகரத்தில் 59 ஆயிரத்து 627 பொது கட்டடங்கள் கண்டறியப்பட்டு, அவற்றுள் 46 ஆயிரத்து 865 கட்டடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஏற்கனவே 747 காவல் நிலையங்களில் உட்சுற்று கண்காணிப்பு தொலைக்காட்சி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது போக, மீதமுள்ள 820 காவல் நிலையங்களிலும், பிற பொது இடங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கேமராக்கள் பொருத்த அரசால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

50 மீட்டர் தூரத்திற்கு ஒரு சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட பின்னர், குற்றவாளிகள் குற்றச் செயல்களில் ஈடுபட தயங்கி வருகின்றனர். அதையும் மீறி, குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் காவல் துறையினரால் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுகின்றனர்.

கேமராக்கள் பொருத்தியதால் குற்றங்கள் குறைவு

கடந்த 2018ம் ஆண்டில் ஜூன் மாதம் முடிய நடந்த சங்கிலி பறிப்பு வழக்குகள் 258 ஆகும். ஆனால், இந்த ஆண்டில் (2019) ஜூன் மாதம் வரை 135 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. அதிலும், 109 வழக்குகளில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் மீட்டு, புகார்தாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. காவல் துறையினரின் விரைவான நடவடிக்கை மற்றும் சிசிடிவி கேமராக்கள் அதிக அளவில் பொருத்தப்பட்டதால், பெருமளவில் சங்கிலி பறிப்பு குறைந்துள்ளது.

மத்திய அரசின் உதவியுடன் மாணவர்களிடையே தலைமைப் பண்பை வளர்க்கவும், நற்குடிமகன்களாக விளங்கவும், உடல் திறனை பேணவும், சமூக நலனில் அக்கறை கொண்ட எதிர்கால குடிமகன்களாக உருவாக்கவும் ஏதுவாக ‘‘மாணவர் காவல் படைத் திட்டம்” என்ற புதிய திட்டத்தை 2016–2017 நிதியாண்டு முதல் துவக்கி மாநில அரசு, செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளாக 11 கோடியே 45 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 1,117 பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம், படிப்படியாக மற்ற மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும்.

மாநில தலைமை காவல் கட்டுப்பாட்டு அறை

பொதுமக்கள், மாநிலத்தில் எப்பகுதியிலிருந்தும் மாநில தலைமை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம். இக்கட்டுப்பாட்டு அறையில் 30.6.2019 வரை 41 லட்சத்து 34 ஆயிரத்து 471 அழைப்புகள் பெறப்பட்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

காவல் துறையில் தொலைத்தொடர்பு வசதியை மேம்படுத்த நவீன தகவல் தொடர்பு உபகரணங்களுடன் கூடிய டிஜிட்டல் மொபைல் ரேடியோ வசதி 49.40 கோடி ரூபாய் செலவில் 10 மாவட்டங்களில் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இவ்வசதி படிப்படியாக பிற மாவட்டங்களுக்கும் ஏற்படுத்தித் தரப்படும்.

நெருக்கடி நேரங்களில், காவல் துறை, தீயணைப்புத் துறை மற்றும் சுகாதாரத் துறை போன்ற துறைகளை பொதுமக்கள் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான உதவியை பெற 15.65 கோடி ரூபாய் செலவில் மாநில தலைமை காவல் கட்டுப்பாட்டு அறையை மாநில நெருக்கடி நேர செயலாற்றும் மையமாக” உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் பொதுமக்கள் 112 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உதவியை பெறலாம்.

சென்னை நகரில், காவல் துறையினர், கைபேசியில் இயங்கக்கூடிய பேஸ்டேகர் என்ற செயலி ஒன்றை உருவாக்கியதன் மூலம் காவலர்கள் குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதே போன்று, சென்னை மாநகரில், அவசர காலத்தில் 100 என்ற எண்ணை டயல் செய்யாமலேயே ‘‘காவலன் எஸ்.ஓ.எஸ்” என்ற அவசர பாதுகாப்புச் செயலியைத் தொடுவதன் மூலமாக அவர்களது இருப்பிட தகவலுடன் மாநில காவல் தலைமைக் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இம்முறையில், பதிவு செய்துள்ள நபர்களுக்கு இருப்பிடத் தகவலுடன் எச்சரிக்கை குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும். ஒருவர் அவசர காலங்களில் இந்த செயலியை பயன்படுத்துவதன் மூலம் உடனடியாக காவல் துறையினர், அவர் உள்ள இடத்திற்கு விரைந்து சென்று தேவையான உதவியை அளிக்க முடிவதால், இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு

காவல் துறையினரின் பல்வேறு பணிகள் மற்றும் அதிலிருந்து வரும் சவால்கள் குறித்து அறிந்த இவ்வரசு, காவல் துறையில் ஏற்படும் காலி பணியிடங்களை அவ்வப்போது நிரப்பி வருகிறது. அந்த வகையில்,

* காவல் துறையில் 30.6.2019 நிலவரப்படி அனைத்து பதவிகளிலும் அனுமதிக்கப்பட்ட இடங்கள் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 769 ஆகும். இதில் பணியில் உள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 75 ஆகும். காலியாக உள்ளது 9 ஆயிரத்து 694 இடங்கள் மட்டுமே ஆகும்.

* அக்காலிப் பணியிடங்களில் தற்போது, 969 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 8,427 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

* காலியாகவுள்ள இடங்களை நிரப்ப 226 தொழில்நுட்ப உதவி ஆய்வாளர்களும், 179 விரல்ரேகை பிரிவு உதவி ஆய்வாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சியில் இருந்து வருகின்றனர்.

* கடந்த 8 ஆண்டுகளில் காவலர் முதல் காவல் துறை இயக்குநர் வரை பல்வேறு பதவிகளில் 64 ஆயிரத்து 510 பேர்களுக்கு பதவி உயர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2011–12 முதல் 2018–2019 வரை, காவல் துறைக்கான மானியக் கோரிக்கையின் போதும் மற்றும் பிற சமயங்களின் போதும் அறிவித்த மொத்த அறிவிப்புகள் 786 ஆகும். அவற்றுள் 616 அறிவிப்புகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. 163 அறிவிப்புகள் பல்வேறு நிலைகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில், 99.1 சதவீத அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மன அழுத்தத்தை போக்க ரூ.10 கோடியில் உளவியல் பயிற்சி

காவல்துறையின் பணிச்சுமை காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தினைப் போக்க சிறப்பு ஏற்பாடாக, காவலர் நிறைவாழ்வுப் பயிற்சி திட்டத்தின் கீழ், பெங்களூருவில் உள்ள நிம்ஹான்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 10 கோடி ரூபாய் செலவில் உளவியல் ரீதியான பயிற்சியை அளிக்கும் திட்டம் நாட்டிலேயே நம் மாநிலத்தில் முதன்முதலாக துவக்கப்பட்டு, இதுவரையில், 35,082 காவலர்களும், 37,352 காவலர்களின் குடும்ப உறுப்பினர்களும் பங்கேற்று பயனடைந்துள்ளனர்.

இப்பயிற்சியை தங்களுடைய மாநிலத்தில் செயல்படுத்த மற்ற மாநில காவல் துறையினரும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய காவல் படையினரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

காவல் துறையினருக்கு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருவதுடன், அவர்களுக்கு பணியின்போது ஏற்படும் மன அழுத்தத்தை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு படிகளும் உயர்த்தி வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு காவல் துறையில் பத்து ஆண்டுகள் எவ்வித தண்டனையுமின்றி பணிபுரிந்து வரும் காவலர் முதல் தலைமைக் காவலர் வரையிலான காவல் ஆளிநர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தமிழ்நாடு முதலமைச்சரின் காவலர் பதக்கம் தகுதி வாய்ந்த அனைவருக்கும் உடனடியாக கிடைக்கும் வகையில், இப்பதக்க எண்ணிக்கையை ஆண்டொன்றுக்கு 1,500லிருந்து 3,000ஆக உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *