செய்திகள்

கால்வாய்க்குள் கார் பாய்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

பெங்களூரு, நவ. 8–

கால்வாய்க்குள் கார் பாய்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியானார்கள்.

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் திப்ட்டூர் அருகே உள்ள நோன்வினகரே கிராமம் குங்கரள்ளி பகுதியை சேர்ந்தவர்கள் சந்திரப்பா (61), கிருஷ்ணப்பா (60), தனஞ்சயா (55), பாபு மற்றும் ஜெயண்ணா ஆகிய 5 பேரும் மைசூரில் உள்ள உறவினர் வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சிக்காக காரில் புறப்பட்டனர்.

விருந்து நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு 5 பேரும் மீண்டும் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். நேற்றிரவு அவர்கள் மண்டியா மாவட்டம் பாண்டவபுரா தாலுகா பணக்கட்டா அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க காரை திருப்பினர்.

அப்போது நிலை தடுமாறிய கார் சாலையோரம் இருந்த விஸ்வேஸ்வரய்யா கால்வாய்க்குள் பாய்ந்தது. கால்வாயில் தண்ணீர் அதிகளவில் ஓடியதால் கார் தண்ணீரில் மூழ்கி காரில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

இதுபற்றி தெரிய வந்ததும் பாண்டவபுரா போலீசார், மண்டியா மாவட்ட கலெக்டர் குமார், போலீஸ் சூப்பிரண்டு யத்தீஸ் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

கால்வாயில் அதிகளவில் தண்ணீர் சென்றதால் ராட்சத கிரேன்கள் வரவழைக்கப்பட்டு தண்ணீருக்குள் மூழ்கிய காரை கயிறு கட்டி மீட்டனர். பின்னர் தண்ணீரில் மூழ்கி பலியான 5 பேர் உடல்களையும் கடும் போராட்டத்துக்கு பின்பு மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து பாண்டவபுரா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *