சிறுகதை

கால்ரூபாய் காசும் காளை மாடுகளும்! – சின்னஞ்சிறுகோபு

அது 1952-ம் வருடம்.

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது.

சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் வந்தது.

நாடெங்கும் உணவு தட்டுப்பாடு. அப்போது ஆட்சிப் பொறுப்பில் இருந்த காங்கிரஸ் கட்சி, ரேஷனில் கொடுத்து வந்த 12 அவுன்ஸ் அரிசியை 8 அவுன்ஸாக குறைத்தது.

அதோடு, ‘மக்கா சோளம் சாப்பிடுங்கள்’ என்று காங்கிரஸ் கட்சி வடக்கேயிருந்து மக்கா சோளத்தைக் கொண்டு வந்து தமிழகத்தில் அறிமுகப் படுத்தியது.

பெரிய எதிர்கட்சியாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சியோ ‘ஆறு அவுன்ஸ் கட்சி ஒழிக!’ என்று கோஷம் போட்டது.

சாதி, மத, பாலின, சமூக அந்தஸ்து உள்ளிட்ட எந்த பேதமும் இல்லாமல் 21 வயது ஆனவர்கள் எல்லோரும் ஓட்டுப் போடலாம் என்று அறிவித்திருந்தார்கள். அதனால் கீழையூரிலிருந்த நம்ம குப்புசாமிக்கும் ஓட்டுப்போட உரிமை வந்தது.

அந்த அறுபது வயசு குப்புசாமி தாத்தா எழுத படிக்க தெரியாதவர். அவர் மட்டுமாயென்ன! அப்போது இந்திய மக்களில் 88 சதவீதம் எழுத்தறிவு இல்லாதவர்கள்தான்!

பண்ணையார் பரமசிவம் குப்புசாமியை கூப்பிட்டு, “இந்தா, கால் ரூபாய் காசு! நீ போய் புஞ்சையிலே இருக்கிற ஓட்டுச் சாவடியிலே ஓட்டைப் போட்டுவிட்டு வா! நீ காளை மாட்டு சின்னத்திற்குதான் ஓட்டைப்போட வேண்டும். அதற்குதான் இந்த காசு!” என்றார்.

கால் ரூபாய் காசைப் பார்த்ததும் குப்புசாமிக்கு ஏக சந்தோஷம். காசை பத்திரமாக வேட்டியில் முடிந்து இடுப்பில் சொருகிக் கொண்டு, துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு ஓட்டுச் சாவடியை நோக்கி ராஜநடை போட்டு நடந்துகொண்டே போனான் குப்புசாமி.

அந்த கால் ரூபாய் காசுக்கு எத்தனை இட்லிகள் சாப்பிட முடியும் என்று பத்து விரல்களையும் விட்டு எண்ணிப் பார்த்தார். பத்து விரல்களையும் தாண்டி வந்தது இட்லி!

“காளை மாடுகள் தனியே படத்துடன் இருக்கும். கதிர் அரிவாள் படத்துடன் தனியே இருக்கும். நீ படத்தைப் பார்த்து சரியாக காளை மாடுகள் சின்னத்திற்கு ஓட்டைப்போட வேண்டும்!” என்று பண்ணையார் தெளிவாக சொல்லி அனுப்பியிருந்தார்.

அப்போது ஒவ்வொரு கட்சிக்கும் தனித் தனியே பெட்டிகள் இருந்தன. அந்தந்த பெட்டியின் மீது அந்தந்த கட்சிகளின் சின்னங்கள் ஒட்டியிருக்கும்.நாம் எந்த கட்சிக்கு ஓட்டுப்போட வேண்டுமோ, அந்த கட்சியின் சின்னம் ஒட்டியிருக்கும் பெட்டியில் ஓட்டுச் சீட்டைப் போடவேண்டும்!

அதோடு தெளிவாக தெரிந்துக் கொள்வதற்காக ஓட்டுப் பெட்டிகள் இருக்கும் இடத்திற்கு பக்கத்தில், அந்தந்த கட்சியின் பெட்டி அருகே சுவரில், தட்டியில் பெரிதாக அந்தந்த கட்சியின் சின்னத்தை வரைந்து வைத்திருப்பார்கள்!

குப்புசாமி ஓட்டுச்சாவடிக்குள் கொஞ்சம் கூச்சத்துடனேயே சென்றார். அவர் மழைக்கு கூட அந்த பள்ளிக்கூட கட்டிடத்திற்குள் நுழைந்தது இல்லை! அங்கிருந்த அலுவலகர்கள், ஒரு பெரிய நோட்டிலிருந்து அவரது பெயர், தகப்பனார் பெயர், வயது, தெரு, ஊரையெல்லாம் சரிப்பார்த்து விட்டு, ஓட்டுச்சீட்டைக் கொடுத்து, ஓட்டுப்பெட்டிகள் இருந்த அறைக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த அறையில் இரண்டு ஸ்டூல்களில் இரண்டு ஓட்டுப் பெட்டிகள் இருந்தன. ஒரு பெட்டியில் இரட்டை காளைமாடுகள் படம் ஒட்டியிருந்தது. இன்னொரு பெட்டியில் அரிவாள் கதிர் படம் ஒட்டியிருந்தது. ஒரு தெளிவான அடையாளத்திற்காக பெரிய அளவில் காளை மாடுகள் சின்னத்தை ஒரு தட்டியில் வரைந்து சுவரில் கட்டியிருந்தார்கள்.அதற்கு எதிர்புறம் அரிவாள் கதிர் படத்தை இன்னொரு தட்டியில் வரைந்து மாட்டியிருந்தார்கள். அதற்கு கீழே அந்தந்த கட்சியின் ஓட்டுப் பெட்டிகள் இருந்தன.

நம்ம குப்புசாமி கையில் ஓட்டுச் சீட்டுடன் உள்ளே வந்தார்.

எங்கே காளை மாடுகள் சின்னம் என்று பார்த்தார். காளைமாடுகள் படம் வரைந்த தட்டியோ ஒரு நாலு அடி உயரத்தில் அவர் தலைக்கு மேலிருந்தது. ‘ஓஹோ… இந்த காளை மாட்டுக்கு பின்புறம்தான் இந்த ஓட்டுக் காகிதத்தை போடவேண்டும் போலிருக்கு’ என்று நினைத்துக் கொண்டார்.

ஒரு கையில் அந்த ஓட்டுச்சீட்டுடன், இன்னொரு கையால் அந்த காளைமாடுகள் தட்டியை பிடித்துக்கொண்டு இழுத்து, எம்பிக் குதித்து, ,அந்த தட்டிக்கு மேலே ஏறி, அதன் பின்புறம் அந்த சீட்டை தூக்கிப் போட முயன்றார்.

அவ்வளவுதான், அந்த தட்டி கயிற்றை அறுத்துக்கொண்டு, ‘பட பட’வென்ற சத்தத்துடன், குப்புசாமியோடு சேர்ந்து தரையில் சாய்ந்து விழுந்தது. “ஐயோ…அம்மா!” கத்தியபடி கீழே விழுந்தார் குப்புசாமி! அவர் தரையில் கிடந்தார். அவர் மீது அந்த காளை மாடு தட்டிக் கிடந்தது!

அடுத்த நிமிஷமே, அங்கிருந்தவர்கள் ஓடோடி வந்து, அந்த தட்டியை புரட்டித் தள்ளிவிட்டு அவரைத் தூக்கி நிறுத்தியபடி, “என்னய்யா… என்ன செய்தே?” என்று கத்தினார்கள்!

“காளை மாடுகள் சின்னத்திற்கு ஓட்டுப்போட, சுவரிலிருந்த இந்தத் தட்டியைப் பிடித்துக்கொண்டு மேலே ஏறினேன்!” என்று குப்புசாமி பரிதாபமாக முனகினார்!

அங்கிருந்தவர்களில் ஒருவர் தலையில் அடித்துக் கொண்டு, “இதோ இந்த பெட்டியில் போட்டுட்டு போயா!” என்றார்.

யார் அந்த குப்புசாமி என்கிறீர்களா? எங்கள் தாத்தாதான் அந்த குப்புசாமி! இந்த கதையை உங்களுக்கு சொல்லியது யார் என்று கேட்கிறீர்களா? எங்க அம்மாதான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *