கும்பகோணம், நவ. 19–
கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக, திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசின் செயல்பாடு சிறப்பாக இருந்தது என, அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் பாராட்டு தெரிவித்தார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ளம் பதித்த பகுதிகளைப் பார்வையிடச் செல்வதற்கு முன், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, இரட்டை இலை சின்னம் இல்லாமல் எடப்பாடி பழனிச்சாமியால் எதுவும் செய்ய இயலாது. அவரது சொந்த ஊரில் கூட உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் வெற்றி பெற முடியாத நிலையே உள்ளது. நாங்கள் புதிதாகக் கட்சியை தொடங்கி தேர்தலைச் சந்தித்ததை போல், எடப்பாடியால் சந்திக்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.
திமுக செயல்பாடு சிறப்பு
எடப்பாடி பழனிச்சாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தையே கட்சியை விட்டு நீக்கியவர். அம்மாவின் உண்மை விசுவாசிகள் ஓரணியில் திரண்டால் தான் எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற முடியும் என தெரிவித்தார்.
கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக, திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. அவரது குடும்பத்திற்கு வழங்கிய இழப்பீடு, அரசு வேலை, வீடு என அரசு அறிவித்தது வரவேற்கத்தக்கது என தினகரன் தெரிவித்தார். இதனால் நான் திமுக கூட்டணிக்குச் செல்வேன் என எதிர்பார்க்காதீர்கள் எனவும் தெரிவித்தார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் தினகரன் தெரிவித்தார்.