செய்திகள்

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு 18 ஆயிரம் பேர் விண்ணப்பம்

Spread the love

சென்னை, ஜூன் 19–

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு 18,438 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பு (பி.வி.எஸ்சி. – ஏ.ஹெச்) மற்றும் நான்கு ஆண்டுகள் கொண்ட உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்), பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்), கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்) ஆகியன உள்ளன.

கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புகளுக்கு 360 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 54 இடங்கள் (15 சதவீதம்) போக மீதமுள்ள 306 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. பி.டெக் படிப்புகளுக்கு மொத்தம் 100 இடங்கள் இருக்கிறது. இதில் உணவுத் தொழில்நுட்ப படிப்பில் 40 இடங்களில் 6 இடங்கள் (15 சதவீதம்) இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பி.வி.எஸ்சி.–ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு 2019–20 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு www.tanuvas.ac.in மற்றும் www2.tanuvas.ac.in என்ற இணையதளங்கள் மூலம் விண்ணப்பிப்பது கடந்த மாதம் 8-ம் தேதி தொடங்கியது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கெடு நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் முடிவடைந்தது.

இதுவரை பி.வி.எஸ்சி. – ஏ.ஹெச் படிப்புக்கு 15,666 விண்ணப்பங்கள் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு 2,772 விண்ணப்பங் கள் என மொத்தம் 18,438 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பி.வி.எஸ்சி. – ஏ.ஹெச் படிப்புக்கு 3,559 பேரும், பி.டெக் படிப்புகளுக்கு 354 பேரும் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர்.

இந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் ஜூன் கடைசி வாரத்தில் வெளியிடப்பட உள்ளது. மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை இரண்டாவது வாரத்தில் தொடங்க உள்ளது என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *