செய்திகள்

கால்நடைப் பூங்காவில் சிறப்பு அம்சங்கள்

Spread the love

* இந்த கால்நடைப் பூங்கா சுமார் 1,100 ஏக்கர் நிலப்பரப்பில் அமைய உள்ளது.

* இந்த பூங்கா 3 பிரிவாக அமையும். முதல் பிரிவில் நவீன வசதிகள் கொண்ட கால்நடை மருத்துவமனை, நவீன பண்ணை முறைகளை விவசாயிகளுக்கு எடுத்துக் காட்டும் வகையிலான கறவை மாட்டுப் பண்ணை ஆகியவை அமைக்கப்படும். இதுதவிர, காங்கேயம், உம்பளாச்சேரி, ஆலம்பாடி, புலிக்குளம், பர்கூர் ஆகிய உள்நாட்டு மாட்டு இனங்களின் பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்கப் பண்ணையும், ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை, கன்னி போன்ற நாட்டு நாய் இனங்களின் இனப்பெருக்கப் பிரிவுகளையும் உள்ளடங்கிய கால்நடைப் பண்ணையாக உருவாக்கப்படும்.

* அதே போல, மேச்சேரி, ராமநாதபுரம் வெள்ளை, சென்னை சிவப்பு, கீழக்கரிசல், வேம்பூர், திருச்சி கருப்பு, கோயம்புத்தூர், கச்சைக்கட்டி கருப்பு, செவ்வாடு மற்றும் நீலகிரி போன்ற உள்நாட்டு செம்மறி ஆட்டினங்கள் மற்றும் கன்னி ஆடு, கொடி ஆடு மற்றும் சேலம் கருப்பு போன்ற வெள்ளாட்டினங்களின் இனப்பெருக்கப் பிரிவுகளையும் உள்ளடக்கிய பண்ணையாகவும் உருவாக்கப்படும்.

* வெண்பன்றிகள் வளர்ப்பினை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து வசதிகளுடன் கூடிய உலகத் தரம் வாய்ந்த வெண்பன்றிப் பண்ணை அமைக்கப்பட உள்ளது.

* பூங்காவின் இரண்டாம் பிரிவில் பால், இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றை பாதுகாத்து பதப்படுத்துதல், அவற்றில் இருந்து உப பொருட்கள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்துவதற்கான வசதிகள் உருவாக்கப்படும்.

* இங்கு அமையவிருக்கும் மீன் வள மாதிரி வளாகத்தில் 2.94 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காற்று புகுத்திகளை பயன்படுத்தியும், நீரினை மறுசுழற்சி செய்தும், 2 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பிலான மீன்குஞ்சு வளர்ப்பு நிலையம் அமைக்கப்பட்டு, அதன் மூலம் ஆண்டுக்கு 20 லட்சம் தரமான மீன் குஞ்சுகள் மீன் வளர்ப்போருக்கு வழங்கப்பட உள்ளது.

* பூங்காவின் மூன்றாம் பிரிவில் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை உற்பத்தி பொருட்கள் தொழில்நுட்பம் ஆகியவற்றில் உயர் கல்வி, ஆராய்ச்சி, விவசாயிகளுக்கான பயிற்சி மையம், தொழில் முனைவோர் பயிலரங்கம் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய வளாகம் அமைக்கப்படும்.

* இதே வளாகத்தில் ஒரு கால்நடை மருத்துவக் கல்லூரி 82.17 கோடி ரூபாய் செலவில் அமைக்கவிருக்கிறோம். இதன் மூலம் 80 கால்நடை மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் கூடுதலாக கிடைக்கும்.

* இந்த நவீன பூங்காவில், தமிழ்நாட்டில் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற அனைத்து மாணவர்களும் பயிற்சி மேற்கொள்ளவும், உலக நாடுகளில் உள்ள கால்நடை மருத்துவம் படிக்கின்ற மாணவர்களும் இங்கே வந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவும் நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

* மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில் முனைவோர் மற்றும் நுகர்வோர் பயன்பெறும் வகையில் அனைத்து அடிப்படை வசதிகள் கொண்ட வளாகமாக இது அமையும்.

* தமிழகத்தில் நிலவி வரும் தட்பவெப்ப நிலைக்கு ஈடு கொடுத்து நோய் எதிர்ப்பு திறனுள்ள, குறைந்த பராமரிப்பு செலவில் அதிக பால் கொடுக்கக் கூடிய வகையிலான கலப்பின மற்றும் நாட்டின பசுக்களை உருவாக்குவதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும்.

* இங்கு 500 கலப்பின பசுக்கள் கொண்ட உலகத்தரம் வாய்ந்த அதிநவீன கால்நடைப் பண்ணை ஒன்று உருவாக்கப்படும். இதில் 25,000 லிட்டர் பாலை பதப்படுத்தும் திறன் உள்ள, 12 வகையான பால் உபபொருட்கள் தயாரிக்கும் தானியங்கி அதி நவீன தொழிற்சாலையும், 50 மெட்ரிக் டன் உற்பத்தித் திறன் கொண்ட அதிநவீன கால்நடை தீவன மற்றும் தாது உப்புக் கலவைத் தொழிற்சாலையும் அமைய உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *