சிறுகதை

‘கால்கட்டு’ – ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

எதையும் அலட்சியமாக எடுத்துக் கொள்வான் முருகேசன். பொறுப்பின்மை என்பது அவனிடம் புதைந்து கிடந்தது. யாரையும் லட்சியம் செய்யாமல் அலட்சியமாகவே கடந்து செல்வான். பணம் ,காசு ,பேர் ,புகழ் இதுவெல்லாம் எதற்கு மனித வாழ்க்கையே மரணத்தில் தானே முடிகிறது ? என்று விதண்டாவாதம் பேசுவான்.

அலுவலக நேரங்களில் அடிக்கடி வெளியே செல்வது, ஊர் சுற்றி வேடிக்கை பார்ப்பது என்று அத்தனையும் சாதாரணமாக எடுத்துக் கொள்வான் முருகேசன். இவன் இப்படித்தான் என்று எந்த அகராதியும் அவனை இட்டு நிரப்ப வில்லை .மனம் போன போக்கில் வாழ்ந்தான் .கண்களின் திசை எவ்வளவு தூரம் காண்பிக்கிறதோ அங்கெல்லாம் நடந்து, சராசரி மனிதர்களை விட சற்று வித்தியாசமாகவே இருந்தான். அவன் பார்க்கும் உலகம் வேறு. முருகேசனை மற்றவர்கள் பார்க்கும் உலகம் வேறு என்று இருந்தது. அவனுடைய உலகத்தில் மற்றவர்கள் மடையர்கள். மரியாதை குறைவானவர்கள். மற்றவர்கள் உலகத்தில் முருகேசன் லாயக்கற்றவன். எதுவும் தெரியாதவன். இந்த முரண்பட்ட வாழ்க்கையில் நகர்ந்து கொண்டே இருந்தான் முருகேசன். பொறுப்பு என்பது பொறுப்பில்லாமலே போனது. எது கிடைத்தாலும் சாப்பிடுவது. எங்கு வேண்டுமானாலும் இருப்பது. யாருடனும் சேருவது என்ற எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் வாழ்ந்து வந்தவனுக்கு ஒரு கால் கட்டு போட்டு பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள் முருகேசன் பெற்றோர்.

” அதெல்லாம் வேண்டாம்மா? கல்யாணம்ங்கிறது கழுத்துல நாமளே தூக்கு கயிறு மாட்டிக்கிற மாதிரி. கல்யாணத்த பண்ணிட்டு பிரச்சனைக்கு உள்ள போயி ,என் வாழ்க்கையைக் கெடுக்க விரும்பல. எனக்கு இந்தக் கல்யாணம் வேண்டாம்மா” என்று அழுது கூறினான் முருகேசன். ஒரு மனுசனா இருக்கிறது பாதி வாழ்க்கை. ஒரு மனுஷன் ஒரு பெண்ணோட வாழ்றதுதான் முழு வாழ்க்கை .நீ பாதி மனிதனா இருந்துட்டு சாகனும்னு ஆசைப்படறியா ? நமக்கு வாரிசு வேணும்பா கல்யாணம் பண்ணு”

என்று முருகேசனை விடாப்பிடியாக திருமண பந்தத்திற்குள் நுழைத்தார்கள் பெற்றோர்கள்.

எவ்வளவோ தடுத்து பார்த்தான் முடியவில்லை .கடைசியில் கல்யாணப் பந்தியில் போய் முடிந்தது அவனது திருமண வாழ்க்கை.

அந்த இரவு, அவனுக்கு முதல் இரவாக இருந்தாலும் அந்தக் கருப்பு ராத்திரி அவனுக்குள் ஒரு பெரிய விடியலை விதைத்திருந்தது. அதுவரையில் அவன் உள்ளங்கையில் உருண்டு கொண்டிருந்த உலகம் இப்போது மற்றவர்களின் கையில் இவன் உருண்டு கொண்டிருந்தான்.

“இங்க பாருப்பா முன்ன மாதிரி நீ இருக்கக்கூடாது. கல்யாணம் காச்சின்னு வந்துருச்சு. உன்ன நம்பி ஒரு பொம்பளப்புள்ள வந்து இருக்கா. அவளைக் கடைசி வரைக்கும் கண்கலங்காம பாத்துக்கிறது தான் ஒரு புருஷனோட புத்திசாலித்தனம். வேலை செய்ற இடத்தில ஒழுங்கா வேலை செஞ்சு குடும்பத்தை நடத்த பாரு. அங்க ஒரு காலு இங்கே ஒரு காலுன்னு வச்சிட்டு இருந்தய்ன்னா சரியா வராது “

என்று வேத மந்திரத்தை விட வேலை மந்திரத்தை அவன் காதில் ஓதினார்கள். அவன் பெற்றோர் அவர்கள் சொல்வதைக் கூட சரியாக புரிந்து கொள்ளாத முருகேசன் போகப் போக அவர்களின் வார்த்தையின் அர்த்தத்தை அறிந்து கொண்டான்.

‘ நாம தனியா தனிக்கட்டையா இருந்தபோது, எங்க வேணாலும் போனோம். எங்க வேணாலும் வந்தோம். யாரையும் சட்ட செய்யல. அலுவலகத்துக்கு சரியா வரதில்லை. ஆனா இப்ப ஏதோ நமக்கு நெருடதே .நம்மள நம்பி ஒரு ஜீவன் வந்திருக்கு. அத கண்கலங்கமாக பாத்துக்கிறது நம்மளோட பொறுப்பு. இது இப்பவாவது நம்ம புத்திக்கு எட்டிருச்சே’

என்ற முருகேசன் அலுவலக நேரத்தில் ஆங்காங்கே நிற்பது. அலுவலகத்திற்கு விடுப்பு போடுவது . அலுவலகத்திற்கு வராமல் இருப்பது

என்ற அத்தனை சேட்டைகளையும் மடக்கி வைத்துவிட்டு அலுவலகமே சாட்சியாகக் கிடந்தான்.முன்பெல்லாம் எப்போது வருகிறான்? எப்போது செல்கிறான்? என்பது அவனுக்கே தெரியாது .இப்போது முருகேசன் அலுவலகத்தில் இருக்கிறான். அவன் சரியாக காலையில் வந்து விடுகிறான். மாலை வரை ஏன் சில நேரங்களில் இரவு வரை கூட அலுவலகத்தில் இருந்து விட்டு செல்கிறான். அவ்வளவு பொறுப்பானவன்”

என்று பெயர் எடுத்தான் முருகேசன்.

முன்பெல்லாம் மனிதர்களை மதிக்காதவன். இப்போதெல்லாம் அவர்களைப் பார்த்ததும் எழுந்து நின்று மரியாதை தருகிறான். ஒரு வேலை கொடுத்தால், அதைச் சீக்கிரமாகச் செய்கிறான் .யாரும் கேட்காமலேயே அவர்களுக்கு ஓடி ஓடி உதவி செய்கிறான் .இதைப் பார்த்த மற்ற அலுவலக ஊழியர்கள் அவனின் வித்தியாசத்தை உணர்ந்தார்கள்.

” ஆளு ரொம்பவே மாறிட்டானே? என்ன காரணம் “

என்று அலுவலக நண்பர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள்.

” அது தெரியாதா சங்கதி? இப்போது அவனுக்கு கால் கட்டு போட்டாச்சுல்ல. வேற வழியில்ல. குடும்பத்த பாக்கணும். வாழ்க்கை நடத்தணும் .அதனாலதான் அப்படி மாறிட்டான் போல .

“ஆமாங்க. நீங்க சொல்றது சரிதான். தனி மனுஷனா வாழ்றப்ப நமக்கு எந்த பொறுப்பும் வர்றதில்ல. நம்ம கூட ஒரு பொண்ணு சேரும் போது தான் நமக்கு பொறுப்பு. வாழ்க்கையில ஜெயிக்கணும்ங்கிற எண்ணமும் வருது. முருகேசன் அப்படித்தான் போல. அவனுக்கு இப்ப புத்தி வந்திருக்கு. பொழப்பு வந்திருக்கு. இனி பிழைச்சிக்கிருவான்”

என்று அலுவலக ஊழியர்கள் பேசிக்கொண்டார்கள். இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த இன்னொரு அலுவலக ஊழியர்

“எல்லாம் அப்படித்தாங்க .புதுப் பால் குடிச்சா தித்திப்பா தான் இருக்கும். போகப் போகத்தானே தெரியும் . அது மோர் ஆகுதா? தயிர் ஆகுதான்னு? நானும் இப்படித்தான் முருகேசன மாதிரி கல்யாணமான புதுசுல வேலை வேலைன்னு இருந்தேன். இன்னைக்கு அந்த வேலையே எனக்கு அலுத்துப் போச்சு. ஒரு விதமான சோம்பேறித்தனமும் வந்துருச்சு. இதுல முருகேசன் மட்டும் விதிவிலக்கா என்ன? “

என்று சடை மாடையாகப் பேசினார் அந்த ஊழியர்.

கம்ப்யூட்டர்ல இருந்த ஒருவனிடம்

“தம்பி உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா ?

என்று ஒருவர் கேட்க,

“இல்லங்க “

” இந்த தம்பி எங்கங்க சரியா வேல செய்றது இல்ல .ஆபீஸுக்கும் சரியா வர்றது இல்ல. பொறுப்பு அப்படிங்கிறது கொஞ்சம் கூட இல்ல. இவனைல்லாம் நம்பி எந்த வேலைய கொடுக்கிறதுங்க “

என்று கம்ப்யூட்டரில் வேலை செய்து கொண்டிருந்தவனை ஒருவர் கேட்க,

“அவனுக்கு கல்யாணம் பண்ணி ஒரு கால்கட்டப்போட்டு வையுங்க. எல்லாம் சரியாப் போகும் “

என்று ஒருவர் சொல்ல, முருகேசன் அங்குமிங்கும் திரும்பிக் கூடப் பார்க்காமல் கம்ப்யூட்டரில் கண் பதித்தபடியே இருந்தான்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *