செய்திகள்

காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பூங்காக்களை திறந்து வைக்க சென்னை மாநகராட்சி உத்தரவு

சென்னை, மே 3–

சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 500க்கும் மேற்பட்ட பூங்காக்களை பராமரித்து, காலை 5 மணி முதல் இரவு 9 மணி திறந்து வைத்திருக்க வேண்டும் என்று மாநகராட்சியின் பூங்கா துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி பூங்காக்கள் திறப்பு நேரம் தொடர்பான தகவலை கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த மாநில தகவல் ஆணையம் பகல் நேரத்தில் பூங்காக்களை மூடி வைப்பது சரியானது இல்லை என கருத்து தெரிவித்தது.

இது தொடர்பாக மாநில தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவில், ‘‘மக்கள் பணி நிமித்தமாக இருசக்கர வாகனங்கள் மற்றும் நடந்து செல்லும்போது கோடை வெயிலின் தாக்கத்தால் ஓய்வு எடுத்துக்கொள்ள இடம் இல்லாமல் சிரமப்படுகின்ற நிலையில் பொது மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட பூங்காக்கள் மூடி இருப்பது சரியானது அல்ல. எனவே பூங்காக்கள் எப்போது திறக்கப்பட வேண்டும், எப்போது மூட வேண்டும் என்ற மாநகராட்சியின் உத்தரவை சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையாக பூங்கா துறை கண்காணிப்பு பொறியாளர் அனுப்பிவைக்க வேண்டும். இதன் நகலை ஆணையத்திற்கும், மனுதாரருக்கு அனுப்பி வைக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின் அடிப்படையில் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பூங்காக்களும் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்து வைத்திருக்க வேண்டும் என்று அனைத்து மண்டலங்களுக்கும் மாநகராட்சி பூங்கா துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.