செய்திகள்

காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கவும்

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கொடூர வெயில் தாக்கும்

இடி, மின்னலுடன் மழைக்கும் வாய்ப்பு

சென்னை, ஏப். 15–

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கொடூர வெயில் தாக்கம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடை வெயில் உக்கிரம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. மாநில முழுவதும் வெப்ப நிலை அதிகரித்து, 10-க்கும் மேற்பட்ட நகரங்களில் சராசரியாக 106 டிகிரி வரை வெயில் அடித்தது. நேற்று ஈரோட்டில் அதிகப்பட்சமாக 102.92 டிகிரி வெப்பம் பதிவானது. பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தததால், கடந்த 2 நாட்களாக வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்தது.

இந்த நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு அதாவது நாளை (செவ்வாய்க்கிழமை), முதல் வியாழக்கிழமை வரை வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த 3 நாட்களும் கூடுதலாக 5 டிகிரி வெப்பம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே அடுத்த 3 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்குதலை சமாளிக்க காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே அடுத்த மாதம் (மே) 4-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை 24 நாட்களுக்கு அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ளது. இந்த 24 நாட்களும் அதிகபட்ச வெயில் தாக்கம் இருக்கும். எனவே அதற்கு ஏற்ப வெளியூர் பயணங்களை அமைப்பது நல்லது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது கோடை மழையும் ஆங்காங்கே பெய்து வருகிறது.

மன்னார் வளைகுடா பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தென் தமிழகம், வட தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை தென் தமிழகத்திலும், 17–ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

18 மற்றும் 19–ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி இரணியல், திருநெல்வேலி மாஞ்சோலையில் தலா 3 செ.மீ.மழை பதிவாகி உள்ளது.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *