சென்னை, ஜன. 12–
அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், வங்க தேசத்தைச் சேர்ந்த நோயாளி ஒருவரின் கணுக்காலில் கிரிக்கெட் பந்து அளவில் இருந்த கட்டியை ஆபரேஷன் மூலம் வெற்றிகரமாக முழுவதுமாக அகற்றியுள்ளனர். காலை எடுப்பதற்கு பதிலாக அந்த கட்டியை மட்டும் அகற்றி அப்பல்லோ மருத்துவமனையின் எலும்பு, ரத்தநாள மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளது.
டெஸ்மோபிளாஸ்டிக் பைப்ரோமா என்பது மிக அரிய வகை கட்டியாகும். மற்ற கட்டிகளை விட வேறுபாடானது, இது மிக மெதுவாகவே வளரும். தாடை எலும்பு மற்றும் கணுக்கால்களில் தான் இது அதிகமாக வளரும். இதற்கு முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் அது எலும்பைச் சிதைத்து விடும். மேலும் முறையான சிகிச்சை எடுக்காவிட்டால் அது மீண்டும் மீண்டும் வளரும் தன்மை உடையது.
ரிஃபாத் இக்பால் என்ற வங்கதேசத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞர் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு இடது காலில் வீக்கத்துடன் நடக்க முடியாத நிலையில் அழைத்து வரப்பட்டார். டெஸ்மோபிளாஸ்டிக் பைப்ரோமா பாதிக்கப்பட்ட ரிஃபாத் இக்பால் இந்தியாவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு ஏற்கெனவே சென்று சிகிச்சை எடுத்துள்ளார். அங்கெல்லாம் காலை அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர். அந்த கட்டி மிக சிக்கலான நிலையில் இருப்பது எக்ஸ் ரே மூலம் தெரிய வந்தது. சென்னை அப்பல்லோ மருத்துவனையின் மூத்த எலும்பியல் நிபுணர் டாக்டர் கோசிகன், பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர்கள் டாக்டர் கண்ணன் பிரேமா, டாக்டர் சஷி பூஷண், நோய் கண்டறியும் நிபுணர் டாக்டர் அசோக் பரமேஸ்வரன் ஆகியோர் அவருக்கு சிறந்த சிகிச்சை அளித்து அவரது கால்களை காத்துள்ளனர்.