சென்னை, நவ. 4–
அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகள் விநியோத்தைத் தடுக்கும் நடைமுறைகள் பற்றி கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகள் விநியோகிப்பதைத் தடுக்க, எந்த விதமான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பியிருக்கும் சென்னை உயர் நீதிமன்றம், இது தொடர்பாக கூடுதல் அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
புகார் அளிக்கும் வசதி
மாறிவரும் பருவநிலை மற்றும் மக்கள் மேற்கொள்ளும் பயணங்கள் காரணமாக, புதிய புதிய நோய்கள் பரவி வருவதாக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு உரிய காலக்கெடுவுக்குள் உள்ள புதிய மருந்துகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், காலாவதியான மருந்துகள் குறித்து உயர் அதிகாரிகளுக்கு புகார் அளிக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
ஓய்வூதியம் வழங்கக் கோரி அரசு மருத்துவமனை மருந்து கிடங்கு பொறுபாளார் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.