ராஜதுரை, சுகுணா, வதனா, நளினா என்று நான்கு குழந்தைகள் சிவசந்திரன்– மல்லிகா தம்பதியினருக்கு. சுகுணா, வதனாவிற்கு சீக்கிரமே வரன் அமைந்து மணம் முடித்து விட்டார் சிவச்சந்திரன்.
நல்ல வசதியான பெரிய இடமாகவே அமைந்து விட்டது. ராஜதுரைக்கும் நல்ல வேலையில் அமர்ந்தவுடனே மணம் முடித்து விட்டார்.
சித்ரா என்ற பெண்ணை தன் உறவிலேயே மணம் முடித்தார்.
நளினா மட்டும் பிளஸ் 2 வில் நல்ல மார்க்குகள் வாங்கியதால் மெடிக்கல் சீட் கிடைத்தது.
எதிர்பாராத விதமாக சிவச்சந்திரனும் மல்லிகாவும் காலமானார்கள். ஆனாலும் ராஜதுரை தான் தங்கையை படிக்க வைத்தான். படிப்பு முடித்தாலும் மேற்படிப்பும் படிக்க வைத்தான்.
நளினா இப்போது எம்.டி. ஆனாள். ஒரு பெரிய ஆஸ்பிட்டலில் சேர்ந்து வேலை பார்த்தாள். ராஜதுரைக்கும் மேகலா என்ற பெண் குழந்தை இருந்தது.
மேகலாவிற்கு தன் அத்தை நளினா மேல் பாசம் அதிகம். வாழ்க்கை சுமூகமாத் தான் போனது. ராகவன் நளினாவின் வாழ்க்கையில் சந்திக்காத வரை.
நளினா வேலை பார்க்கும் அதே மருத்துவமனையில் சர்ஜன் ஆக சேர்ந்தான் ராகவன். ராகவன் முதலில் கடுகடுவென்று நளினாவுடன் பேசினாலும் போகப்போக இனிமையாகப் பழக ஆரம்பித்தான்.
முதலில் சக டாக்டராகப் பேசினாலும் போகப்போக நட்பு மலர்ந்தது. கொஞ்ச நாட்கள் கழித்து அதுவே காதலாக மாறியது. காதல் சிறிதுசிறிதாக கூடிக் கொண்டே போனது. திடீரென ஒரு நாள் ராகவன் உடனடியாக ஏன் நாம் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று கேட்டான். நளினாவும் இதே எண்ணத்தில் தான் இருந்தாள். திருமணத்திற்கு உடனே சம்மதித்தும் விட்டாள். இருவரும் வெவ்வேறு சாதிப் பிரிவினர் தான். அந்த எண்ணமெல்லாம் ஏற்படவில்லை. நாம் சாதிக்கப் பிறந்தவர்கள் என்று முடிவெடுத்தனர்.
இருவருக்கும் தங்கள் வீட்டில் சொல்லப் பயந்தார்கள். இருவரும் வடபழனி முருகன் கோவிலில் மணம் முடித்துக் கொள்ளலாம். பிறகு ராகவன் தன் மணம் முடிந்ததை சொல்லிக் கொள்ளலாம் என்று பேசாமல் இருந்தான். ராகவன் அம்மா, அப்பா இருவரும் அமெரிக்காவில் இருக்கும் தன் மகள் வீட்டிற்குப் போய்வர முடிவு செய்தனர். 4 மாதம் தங்கிவர தீர்மானித்திருந்தனர். நினைத்து போலவே கிளம்பி போய்விட்டனர்.
ராகவனுக்கு இது நல்ல சந்தர்ப்பமாக அமைந்துவிட்டது. ராகவனும் நளினாவும் ராகவன் வீட்டிலேயே தங்கள் முதலிரவை கொண்டாடினர்.
திருமணத்திற்கு சுகுணாவின் நெருங்கிய இரு தோழியர்கள் வந்திருந்தனர். ராகவன் தன் நண்பர்கள் சிலரை மட்டும் அழைத்து வந்திருந்தான். கோவிலில் மட்டும் திருமணத்தை பதிவு செய்திருந்தனர். 4 மாதம் ஜாலியாக ராகவன் வீட்டிலேயே கழிந்து போனது.
ராகவன் வீடு மிகவும் ஆசாரமான குடும்பம். வீட்டு பூஜை அறையே மிகவும் பக்திமயமாக இருந்தது.
நளினா மட்டும் அவ்வப்போது அண்ணா வீட்டிற்கு போய் வருவாள். ராகவனின் அப்பா, அம்மா வரும் நாள் வரை நளினா ராகவன் வீட்டில் தான் இருந்தாள். பிறகு தன் வீட்டிற்கே வந்து விட்டாள் நளினா. அப்பா பரசுராமர், ராகவன் சொன்ன செய்தியைக் கேட்டு மிகவும் கோபமடைந்தார். அம்மா வைதேகிக்கு ஹார்ட்அட்டாக்கே வந்து விட்டது. செய்வதறியாது திகைத்துப் போனான் ராகவன்.
ராகவன் சுகுணாவுடன் எதுவும் தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில் நளினாவின் அண்ணன் ராஜதுரை ஒரு மாப்பிள்ளையைப் பார்த்து விட்டான். சுகுணாவிடம் சொல்லியும் விட்டான். திகைத்துப் போனாள் நளினா. அவர் தன் அண்ணி சித்ராவை மிகவும் நம்பினாள்.
தான் மணம் செய்துகொண்டது, தான் ராகவன் வீட்டில் தங்கியிருந்தது. 40 நாள் கருவை சுமந்திருப்பது எல்லாவற்றையும் சொல்லிவிட்டாள். சித்ராவுக்கு முதலில் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. நான் அண்ணாவை சமாளித்து கொள்கிறேன் என்று சித்ரா அபயம் அளித்தாள். ஆனாலும் அவளால் ராகவனிடம் எதுவும் தொடர்பு கொள்ளமுடியவில்லை. மிகவும் சோர்வடைந்து விட்டாள்.
திருமணம் செய்துகொண்டு விட்டதால் அண்ணாவாலும் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த விஷயத்தை சுகுணா, வதனாவிடமும் சொல்லிவிட்டான். இரு அக்காக்களும் உடனே வீட்டிற்கு வந்து அவளை திட்டித் தீர்தார்கள். உன்னால் எங்கள் வீட்டில் எங்களுக்கு தலைக்குனிவு ஏற்பட்டு விட்டது எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று அழுது மாய்ந்தார்கள்.
பெரியக்கா இப்போது 40 நாட்கள் தானே ஆகிறது. போய் கருவை கலைத்துவிடு என்றாள். ஆனால் நளினா தன் குழந்தையை அழிப்பதில்லை. அந்தக் குழந்தை என்ன செய்தது. தான் வளர்ப்பதே என் கடமை என்று மறுத்து விட்டாள்.
இன்னொரு அக்கா சொன்னது தான் மிகவும் கொடுமையானது. இப்போது அண்ணா ஏற்பாடு செய்திருக்கும் வரன் நல்ல இடமாக இருக்கிறது. 40 நாள் தானே ஆகியுள்ளது. நீ எதுவும் தெரியாதது போல் அந்த வரனை மணம் செய்து கொள். யார் குழந்தை என்றா தெரியப் போகிறது? உன் கவலையும் தீர்ந்து விடும். பிரச்சனையும் முடிவுக்கு வந்துவிடும் என்று யோசனை சொன்னாள்.
இதைச் சொல்ல உனக்கு வெட்கமாக இல்லையா? நீயும் ஒரு பெண்ணா என்று தன் அக்கா மேல் கோபமாகப் பேசினாள் நளினா.
கல்யாணத்திற்கு வந்த சிநேகிதி விஜயா நடந்ததை கேள்விப்பட்டு மனம் வருந்தினாள். அவளும் ராகவனை எங்குத் தேடியும் கிடைக்கவில்லை.
நளினா நாம் கனடாவிற்குப் போய் விடுவோம். அங்குள்ள ஒரு பெரிய மருத்துவமனையில் எனக்கு வேலை கிடைத்துள்ளது. அங்கு இன்னும் ஒரு காலியிடம் உள்ளதாம். அந்த இடத்தில் வேலையில் உன்னை வேலைக்கு சேர்த்துவிடுகிறேன்.
நளினாவுக்கும் அது நல்ல யோசனையாக தோன்றியது. தன் சிநேகிதியுடன் கனடா புறப்பட்டுச் சென்று விட்டாள். பணியிலும் சேர்ந்து விட்டாள். சில மாதங்கள் கழித்து ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அரவிந்தன் என்று பெயரிட்டாள். கண்ணும் கருத்துமாக குழந்தையை வளர்த்து வந்தாள். வீட்டில் தமிழ் பள்ளியில் ஆங்கிலம் என்று வளர்த்தாள். இப்படியே ஆண்டும் 8 பறந்து விட்டன.
அரவிந்தன் தன் சொந்தபந்தங்களை காண்பிக்க கேட்டபடி ஆவலுடன் இருந்தான். அதற்கேற்றாற்போல் மேகலாவுக்கும் மாப்பிள்ளை அமைந்து திருமணம் நடக்கும் நாளும் நிச்சயம் செய்யப்பட்டது.
அரவிந்தனை அழைத்துக் கொண்டு நளினா தமிழகம் புறப்பட்டு வந்தாள். அவன் சென்னையில் யார் யார் இருப்பார்கள் என்றெல்லாம் ஆவலுடன் விசாரித்தான். வந்தவுடன் தன் மாமன் கைப்பிடித்து பீச், கடைவீதி, வீட்டுத் தோட்டம் என்று சுற்றி வந்தான்.
ராகவன் நிலை:–
அமெரிக்காவிலிருந்து அம்மா பத்மஜா வந்தவுடன் வீட்டுப் பாத்திரங்கள் இடம் மாறி இருப்பது தெரிந்தது. தன் அம்மா, அப்பாவிடம் தன் திருமண விஷயத்தை மெதுவாகச் சொன்னான் ராகவன். அவ்வளவு தான் வீடே ரணகளமாகிவிட்டது. எந்த பிரிவோ, எந்த குலமோ என்று சீறினார் கோபாலாச்சாரியர்.
என்ன செய்வதென்றே புரியவில்லை ராகவனுக்கு. நளினாவை சந்திக்க மிகவும் தயங்கினான். அதையும் மீறி நளினாவின் அண்ணன் வீட்டிற்கும் வந்து அவளைப் பற்றி ஆவலுடன் விசாரித்தான். அவன் நல்லவனாகவே காணப்பட்டான். ஒரு நாள் நளினாவின் வீட்டு விலாசத்தையும் கூறினான் சகோதரன். அதன் பிறகு கிட்டத்தட்ட 25 தபால்கள் எழுதினான். தன் தாயின் மரணத்தையும் எழுதினான். நளினா எதையும் பிரிக்காமலே திருப்பி அனுப்பி விட்டாள். அவன் தொடர்பு அறுந்து விட்டாலும் நளினாவுக்கு மட்டும் ராகவன் நல்லவன் தான் என்று மனம் சொல்லியது.
எதிர்பாராத விதமாக மேகலாவின் மாமனார் வீடு ராகவனுக்கு குடும்ப நண்பர்கள். திருமணத்திற்கு ராகவன் வந்தான். அரவிந்தனின் துருத்துருப்பும் அறிவும் அவனுக்கு அவன் மேல் பிரியம் அதிகமானது. அவனுடைய ஐடி கார்டைப் பார்த்ததும் பேரை தெரிந்துகொண்டான்.
ராகவன் கொடுத்த எந்தப் பொருளையும் ஏற்றுக் கொள்ளவில்லை. ராகவனுக்குத் தன் குழந்தை என்றதும் வாஞ்சையும் அன்பும் அதிகரித்தது. ராகவன் தான் உன்னுடைன் வாழ மிகவும் விரும்புவதாகக் கூறினான். ஆனால் நளினா சிறிதும் அசையவில்லை.3 மாதம் தங்க நினைத்த நளினாவும் ஒரே மாதத்தில் கிளம்பத் தயாரானாள். கடைசியில் கிளம்பும் நாளும் வந்தது. ஏர்போர்ட்டில் இப்பவும் உன் மனம் மாறாதா என்று கெஞ்சினான்.
அப்போது தான் ஒரு காரணத்தை நளினா கூறினாள். ராகவன் உங்கள் மீது எனக்கு கோபம் எதுவும் இல்லை. ஆனால் அரவிந்தனின் நிலையை நினைத்துத்தான் நான் இந்த முடிவை எடுத்தேன். அவனிடமும் உன் அப்பா இறந்து விட்டார் என்று சொல்லித் தான் வளர்த்தேன்.
சற்று வளர்ந்தவுடன் தன் நண்பர்களுடன் அன்புடன் பழகினான். தன் நண்பன் மகிழ்னன் பேசும்போது, தன் அப்பாவைப் பற்றி சொன்னான். வார விடுமுறை நாட்களை எப்படி கழிப்பான் என்று கூறினான். நீச்சல் கிளாஸ், தமிழ் கிளாஸ் போன்ற பயிற்சி கிளாஸிற்கும் அவர் தான் அழைத்துச் செல்வதுடன் இரவு உணவை வெளியே ஏதாவது பிரபல ஓட்டல்களுக்கும் அழைத்துச் செல்வதை மிகவும் ஏக்கமாகச் சொன்னான் அரவிந்தன். என் அப்பா மட்டும் ஏன் இறந்து போனார் என்று மருகினான்.
சில நாட்கள் கழித்து டேவிட் சொன்னதாகச் சொன்னான். என் அப்பா மிகவும் மோசமானவர் என் அம்மாவை மோசமான வார்த்தையில் திட்டுவார், அடிப்பார், பெல்டால் கூட விளாசுவார். என்னையும் திட்டிக் கொண்டே தான் இருப்பார். நல்ல வேளையா நான் என் மேல் அன்புடன் இருப்பதால் நான் தப்பித்தேன். இதைக் கேட்ட அரவிந்தன் எனக்கு அப்பாவே வேண்டாம். இறந்ததால் நமக்கு இந்த துன்பம் எல்லாம் இல்லை என்று கூறினான் தன் அம்மாவிடம்.
மற்றொரு நண்பன் சார்லஸ் சொன்னான் என் அம்மாவும் அடிப்பாள். வேலை வாங்கிக் கொண்டே இருப்பாள். அப்பாவும் தன் பங்கிற்கு சாப்பாடு போடவே யோசிப்பார். அவருக்கும் ஒரு மகள் உண்டு. அவளை மட்டும் அன்புடன் நடத்துவார். என்னை வெறுப்புடனேயே இருவரும் நடத்துவார்கள். நல்லவேளை உனக்கு நல்ல அம்மா இருக்கிறாள். அப்பாவும் இல்லையா? நீ ஒரு மிக அதிர்ஷ்டமான பையன் என்று என்னைப் பார்த்து ஏங்கினான்.
அப்பா என்றால் பொல்லாதவர்களா அம்மா என்று கேட்டான். மகிழ்னனுக்கு மட்டும் நல்ல அப்பா கிடைத்திருக்கிறார் என்று ஏக்கத்துடன் சொன்னான்.
தன் கணவன் ராகவனிடம் சொன்னாள் நளினா:
என்றைக்கு என் அப்பா நல்ல அப்பா என்று அரவிந்தன் மனதிற்கு தெரிகிறதோ அன்று இதோ உன் அப்பா என்று சொல்லி மகிழ்வேன்.
அந்தக் காலம் வரும் வரை காத்திருக்கத்தான் வேண்டும் என்று ராகவனிடம் தன் முடிவை நளினா சொன்னாள்.
ராகவன் மகன் வரும் காலத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.