சிறுகதை

“காலம் வரும்வரை காத்திருந்தாள்!”- கவிஞர் திருமலை. அ

வலையூர் ராமசாமி என்றால் சுத்துப்பட்டு அத்தனை பேருக்கும் தெரியும்; அந்தப் பகுதியில் உள்ள பெரிய விவசாயிகளில் அவரும் ஒருவர்; குறிப்பாக கோவில் விழாக்களுக்கு பணத்தை வாரிக் கொடுப்பார்; இன்று போய் நாளை வா’ என்று சொல்லமாட்டார்; கேட்ட அந்த நிமிடமே நன்கொடை கொடுத்து விடுவார்; இதனால் அந்தப் பகுதி மக்களிடம் மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்தார்;

ஆனால் அவரது குடும்ப வாழ்க்கை அதற்கு நேர்மாறாக இருந்தது; அவரது மனைவி கமலாவும் மகள்கள் ஜெயா, பானு ஆகியோரும் அப்பா மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார்கள்; ஆனால் பூங்கோதை என்ற இன்னொரு பெண்ணுடன் ராமசாமிக்கு தொடர்பு இருப்பதை மட்டும் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை;

பூங்கோதைக்கு கணவர் இருந்தாலும் ராமசாமிக்கே தன் மேனி அழகை கொட்டிக் கொடுத்தாள்; ‘என் கணவரிடம் எதுவும் இல்லை; ஆனால் ராமசாமியிடம் பணமும் அதோடு இல்லற சுகத்தை அனுபவிக்கும் பலமும் இருக்கிறது’ என்று தன் உயிர்த்தோழிகளிடம் பூங்கோதை ரகசியமாகக் கூறிக் கொள்வதுண்டு; எனவே ராமசாமியால் பூங்கோதையை விட்டு விலக முடியவில்லை; ராமசாமி பூங்கோதைக்கு வீடும் கட்டிக் கொடுத்து அவளது மகனுக்கும் மகளுக்கும் திருமணத்தையும் சிறப்பாக நடத்தி வைத்தார்; அதேபோல் தன்னுடைய இரண்டு பெண்களுக்கும் அவர்கள் படிப்புக்கேற்ற மாப்பிள்ளைகளைத் தேர்வு செய்து அவர்கள் விரும்பியபடி திருமணங்களை செய்து வைத்தார்;

எவ்வளவோ மாற்றங்களைச் செய்த ராமசாமியால் தன்னை மாற்றிக் கொள்ள முடிய வில்லை; இப்படியே ஒரு நாள் பல்வேறு சிந்தனைகளை மனதில் சுமந்து கொண்டு தன்னுடைய கிராமத்தில் இருந்து பைக்கில் சிதம்பரம் நகருக்கு சென்று கொண்டிருந்தார்; அப்போது யாரும் எதிர்பாராத வகையில் திருப்பத்தில் ஒலி எழுப்பாமல் வந்த லாரி மீது ராமசாமி சென்ற பைக் பயங்கரமாக மோதியது;

இதில் ராமசாமி தூக்கி வீசப்பட்டார். ‘பைக்’ சுக்கு நூறாக நொறுங்கியது. ஆனால் ராமசாமி அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார்; லேசான காயங்களுடன் இருந்த ராமசாமியை அருகில் இருந்தவர்கள் ஆட்டோவில் ஏற்றி ‘மோகன் சிறப்பு மருத்துவ மனைக்கு’ அனுப்பி வைத்தார்கள்;

தகவல் அறிந்து அவரது மனைவியும் உறவினர்களும் மருத்துவமனையில் கூடிவிட்டனர். கூட்டத்தோடு கூட்டமாக பூங்கோதையும் சோகம் தோய்ந்த முகத்தோடு ராமசாமியின் பார்வைக்காக காத்திருந்தாள். சிறிது நேரத்தில் ஒரு வழியாக கூட்டம் குறைந்தது; ராமசாமியின் பார்வையும் அவள் மீது விழுந்தது; கண்ணிமைக்கும் நேரத்தில் இருவர் முகத்திலும் ஆயிரம் கதைகள் தோன்றி மறைந்தன.

ராமசாமிக்கு சிகிச்சை முடிந்ததும் அவரை வீட்டுக்கு அழைத்து செல்ல டாக்டர் அனுமதி அளித்தார். குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் இருந்து காரில் வீட்டுக்கு அழைத்து சென்றார்கள். ஒரு வார ஓய்வுக்கு பிறகு நல்ல நிலைமைக்கு திரும்பினார் ராமசாமி; அன்று வெள்ளிக் கிழமை என்பதால் தனது அன்றாட காலைக் கடன்களை முடித்து விட்டு சிதம்பரம் நடராஜர் கோவிலில் இருக்கும் ‘ஆதி முனிவரை’ சந்திக்க தனது காரில் கிளம்பினார். காரை டிரைவர் ராதா ஓட்டினார்.

கோவிலுக்கு முன்பாக கார் நின்றதும் ராமசாமி காரை விட்டு இறங்கி, அங்கிருந்த கடைக்காரரிடம் ‘ஆதிமுனிவர்’ பற்றி விசாரித்தார்; முனிவர் அருகில் இருக்கும் குடிசை வீட்டில் இருப்பதாக கடைக்காரர் தகவல் சொன்னார்; உடனே ராமசாமி அங்கு சென்று முனிவரை சந்தித்தார்;

இருவருக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்ததால் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டார்கள்; பிறகு தனக்கு நடந்த விபத்து குறித்து முனிவரிடம் கூறினார் ராமசாமி; உன்னுடைய மனைவியின் தாலி பாக்கியமே? உன்னை விபத்தில் இருந்து காப்பாற்றி இருக்கிறது. நீ அவளுக்கு ஏதாவது துரோகம் செய்து இருந்தால் அவளிடம் மன்னிப்பு கேட்டு விடு; அதன் பிறகு உன் வாழ்க்கையில் எந்த சோதனையும் ஏற்படாது என்று வாழ்த்தி அனுப்பினார் முனிவர்;

வீட்டுக்கு வந்த ராமசாமி தன் மனைவியைப் பார்த்து, எப்படி இவ்வளவு நாள் என்னை எதுவும் கேட்காமல் பொறுமையாக இருந்தாய்? என்றார்.

‘உங்கள் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சி’ என்று இருந்து விட்டேன்;

செய்யும் தவறை உணர்ந்து, திருந்தும் நாள் நிச்சயம் வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அது வரை காத்திருந்தேன் என்றார் கமலா;

உடனே தான் செய்த தவறுகளுக்காக கமலாவிடம் மன்னிப்பு கேட்டார் ராமசாமி; அப்போது கமலா அவருக்கு ஆறுதல் கூறினார்.

அன்றிரவு நீண்ட நேரம் யோசனையில் ஈடுபட்ட ராமசாமி மறுநாள் காலை கட்டுக் கட்டாக ஒரு பையில் பணத்தை வைத்து எடுத்துக் கொண்டு பூங்கோதை வீட்டை நோக்கி நடந்தார்.

வீட்டில் பூங்கோதை மட்டும் இருந்தாள்.ராமசாமியப் பார்த்ததும் புன்னகை பூக்க வரவேற்று வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள். ராமசாமிக்கு காபி போட்டுக் கொடுத்தாள். காபியை குடித்துக் கொண்டே ராமசாமி ,‘‘ நாம் என் மனைவிக்கும் நீ உன் கணவனுக்கும் துரோகம் செய்து விட்டோம். பாவத்தை தெரிந்தே செய்திருக்கிறோம்; இனியும் அந்தத் தவறு தொடரக் கூடாது என்று சொல்லி முடித்தார் ராமசாமி;

நானும் அதைச் சொல்வதற்காகவே உங்களை எதிர் பார்த்துக் காத்திருந்தேன் என்று பதில் சொன்னாள் பூங்கோதை;

அப்போது அவர் கையில் வைத்திருந்த பணப் பையை பூங்கோதையிடம் கொடுத்தார். பணம் வேண்டாங்க என்று சொல்லி திருப்பி கொடுத்தாள் பூங்கோதை; அதை வாங்கிக் கொள்ளாமல், அவளைப் பார்த்து ராமசாமி சொன்னார்; நான் இனி இங்கு வரமுடியாது; ஆனால் உனக்கு எப்போது உதவி தேவைப் பட்டாலும் என்னிடம் நீ போனில் கேள் . அனுப்புகிறேன்;

நான் என் மனைவியிடம் மன்னிப்பு கேட்டு விட்டேன்; அதைப் போல் நீயும் உன் கணவனிடம் மன்னிப்பு கேட்டு விடு; நம்மை மன்னிக்க வேண்டியது அவர்கள் இருவரும்தான்; அவர்கள் மன்னிப்பதும் கடவுள் மன்னிப்பதும் ஒன்றுதான்; கடந்த காலத் தவறுகளை எல்லாம் மறந்து விட்டு, இனி வாழ் நாள் முழுவதும் நல்ல நண்பர்களாக வாழ்ந்து காட்டுவோம் என்றார் ராமசாமி.

அப்போது ராமசாமியின் கைகளைப் பிடித்துக் கொண்டு பூங்கோதை கதறி அழுதாள்.

ராமசாமி அவளை தனது மார்போடு அணைத்துக் கொண்டார். பிறகு அவள் முதுகில் தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறினார். அப்போது அவரது கண்களிலும் கண்ணீர் பெருகி இருந்தது.

சிறிது நேரம் கழித்து, பூங்கோதையிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடை பெற்றார் ராமசாமி. பிறகு தன் வீட்டுக்கு சென்றார். தகவல் தெரிந்து அப்பாவைக் காண வந்த ஜெயாவும் பானுவும் ராமசாமியின் காலில் விழுந்து ஆசி பெற்றார்கள்.

அப்போது ராமசாமியின் கையைப் பிடித்து வீட்டுக்குள் அழைத்துச் சென்றார் மனைவி கமலா. என்ன விஷேசம்? என்று கேட்டார் ராமசாமி; நம்ம ரெண்டு பொண்ணுங்களும் கொடுத்து வெச்சவங்க என்றாள் கமலா; ‌‌

எதுக்கு? என்றார் ராமசாமி. அவங்க ரெண்டு பேரும் ஒரே நேரத்தில் நம்மை தாத்தா பாட்டி ஆக்கிட்டாங்க என்று மகிழ்ச்சி பொங்க கூறினார் கமலா;

அதைக் கேட்டு நிம்மதி பெருமூச்சு விட்டார் ராமசாமி; அப்புறம் என்ன?

மறுநாள் மண்டபத்தில் மைக்செட்; “ராமசாமி வீட்டில் விஷேசம், எல்லோரும் விருந்துக்கு வாங்க!” என்று கத்தியது ஒலிபெருக்கி குழாய்; குவிந்தனர் கிராம மக்கள்; பந்தி நிறைந்தது; அந்த கூட்டத்தில் ஒருவர், “ராமசாமி மட்டும் எப்படி ஒரே மாதிரியா இருக்காருன்னு தெரியலையே? ராமசாமி ராமசாமிதான்யா! ” என்று ஓங்கி குரல் எழுப்பினார்.

அந்தக் குரலைக் கேட்ட ராமசாமி மகிழ்ச்சியில் பந்திக்கு சென்று பம்பரமாய் சுழல ஆரம்பித்தார்.

Leave a Reply

Your email address will not be published.