நூறு பேருக்கு மேல் வேலை செய்யும் ஓர் அரசாங்க அலுவலகத்தில் யார் யாரையும் கண்டு கொள்ள மாட்டார்கள். இவர்களை எல்லாம் மரியாதை செய்து நமக்கு என்ன ஆகப்போகிறது? என்கிற இறுமாப்பு ஒவ்வொரு அரசு ஊழியர்களுக்கும் இருக்கும்.
ஏனென்றால் ஒரு முறை அரசு வேலையில் சேர்ந்து விட்டால் ஓய்வு பெறும் வயது வரை யாரும் நம்மை அசைக்க முடியாது என்ற மமதை இருக்கும் .அதனால் அந்த அரசாங்க அலுவலகத்தில் ஒருவரை ஒருவர் மரியாதை நிமித்தமாக பேசிக் கொள்வது பார்த்துக் கொள்வது என்பது சம்பிரதாயத்துக்காகத் தான் இருக்கும்.அது உண்மையாக இருக்காது .அந்த நிறுவனத்தில் கடைநிலை ஊழியரான கந்தன் 30 வருடங்களுக்கு மேல் வேலை செய்து கொண்டிருந்தார். இன்னும் இரண்டு வருடங்கள் பணியை நிறைவு செய்தால் அவர் ஓய்வு வரும் வயது வந்துவிடும். அந்த அலுவலகத்தில் கூட்டுவது, பெருக்குவது, கழிவறைகளைச் சுத்தம் செய்வது தான் கந்தனுக்கிட்ட வேலை என்பதால் அவரை அவ்வளவாக அந்த அலுவலக ஊழியர்கள் மரியாதை கொடுக்க மாட்டார்கள். தான் செய்யும் வேலை இழிவானது போல அதுதான் யாரும் நம்முடன் பேச மாட்டேன் என்கிறார்கள் என்று கந்தனும் நினைத்துக் கொள்வார்.
தன்னுடைய கல்வி, தன்னுடைய பதவி இதைப் பொறுத்துத் தான் மனிதர்கள் நம்மை மதிப்பார்கள் நாம் பார்க்கும் வேலை கீழ்நிலை வேலை போல அதுதான் யாரும் நம்மை மதிக்கவில்லை என்று நிறைய நேரங்கள் நினைத்து நொந்து இருக்கிறார் கந்தன்.
ஆனால் இப்போதெல்லாம் அதைப் பற்றி அவர் கவலைப்படுவதில்லை . வேலை உண்டு வெட்டி உண்டு என்றிருப்பார்.
உயர் அதிகாரிகள் என்றும் உடன்பணிபுரிபவர்கள் என்று கந்தன் வணக்கம் சொன்னால் கூட அவர்கள் திருப்பி அவருக்கு வணக்கம் செலுத்தியதாக தெரிவதில்லை .
ஆனால் அதை எல்லாம் கண்டு கொள்ள மாட்டார் கந்தன் இப்படியாக நாட்கள் உருண்டோடியது.
ஒரு நாள் அந்த அலுவலகத்தில் இருந்த உயர் அதிகாரி மாறி வேறு பதவிக்குச் சென்றார். அந்த இடத்திற்கு புதிதாக ஒரு உயரதிகாரி வருகிறார் என்ற தகவல் அந்த அலுவலகத்திற்குள் பரவியது.
வருகிறவர் எப்படி இருப்பாரோ? என்ன மாதிரி குணமோ? தமிழ் நாடோ ? வேறு நாடாே? எந்த மாநிலத்திலிருந்து வருகிறாரோ ?என்று அந்த அலுவலக ஊழியர்கள் எல்லாம் வலி மேல் விழி வைத்துக் காத்திருந்தார்கள் .
அந்த உயர் அதிகாரி பதவி ஏற்கும் நாள் வந்தது வழக்கம் போல கந்தன் அன்றும் அந்த அலுவலகத்தைக் கூட்டிப் பெருக்கி சுத்தமாக வைத்திருந்தார். அலுவலக ஊழியர்கள் எல்லாம் வரும் உயர் அதிகாரிக்கு மரியாதை செலுத்துவதற்காக சிவப்புக் கம்பளம் விரித்து பூக்கள் மாலைகள் சகிதம் நின்று இருந்தார்கள்.
கப்பல் மாதிரியான கார் ஒன்று உள்ளே நுழைந்தது. காரை நோக்கி அத்தனை ஊழியர்களும் ஓடினார்கள் .காரின் கதவைச் சிலர் திறந்தார்கள் .ஆனால் காருக்குள் இருந்து யாரும் வெளிவரவில்லை. அதிகாரி பின்னால் வருகிறார் என்று சொல்லிய கார் ஓட்டுநர் காரை ஒதுக்குப்புறமாக நிறுத்தினார்.
எதற்காக காரில் வராமல் இன்னொரு வாகனத்தில் வருகிறார் என்று ஊழியர்கள் எல்லாம் நினைத்துக் கொண்டிருந்தார்கள். அதன் பின்னால் ஒரு கார் வந்தது. அதிலும் அந்த உயர் அதிகாரி வரவில்லை .
பின் ஆட்டோ வந்தது அதிலும் அந்த ஒரு உயர் அதிகாரி வரவில்லை. யார் இவர் எதற்காக இப்படி செய்கிறார் ? என்று அலுத்துப்போன அரசாங்க ஊழியர்கள் அந்த இடத்தில் நிற்க வேண்டுமா? நிற்கக் கூடாதா ? என்று பேசிக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்திற்கு எல்லாம் கந்தனுடன் பேசிக்கொண்டு ஒருவர் அலுவலகத்திற்குள் நுழைந்தார்.
யார் இது ? கடைநிலை ஊழியர் கழிவறை கழுவும் கந்தனிடம் தோள் போட்டு பேசிக்கொண்டு வருவது ? என்று அலுவலக ஊழியர்கள் எல்லாம் ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள்.
அந்த மனிதர் அலுவலக ஊழியர்கள் எல்லாம் அவரை எதுவும் கண்டு கொள்ளாமல் இருந்தனர். கந்தனை உள்ளே அழைத்துச் சென்ற அந்த மனிதர் உயர் அதிகாரிக்கு ஒதுக்கப்பட்ட அந்த அறையில் போய் அமர்ந்தார் .
அதற்குள் கந்தனுடன் வந்தவர் தான் உயர் அதிகாரி என்பதை அறிந்து கொண்ட ஊழியர்கள் அடித்துப் பிடித்து உயரதிகாரி அமர்ந்திருக்கும் அறைக்கு ஓடினார்கள்.
அவர்களை எல்லாம் ஏற இறங்கப் பார்த்த அந்த உயர் அதிகாரி அவர்கள் கொண்டு வந்த பூக்கள் மாலையை வாங்காமல் கந்தனை அருகில் வைத்து தாேளில் கை போட்டபடியே பேசினார்.
வணக்கம். நான் தான் இந்த அலுவலகத்திற்கு வந்திருக்கிற உயர் அதிகாரி. என்னோட பேரு கந்த வடிவேல். நீங்க எல்லாம் பந்தா, பகட்டு, ஜோடனை இதுக்குத்தான் மரியாதை கொடுப்பீங்க. அதனாலதான் நான் எந்த கார்லயும் வரல. நடந்தே வந்தேன். இவர் யார்னு தெரியுதா ?கண்டிப்பாக தெரிஞ்சிருக்கும் .இந்த அலுவலகத்தில் 30 வருஷமா வேலை பார்த்துட்டிருக்கிற கடைநிலை ஊழியர் கந்தன். இவரை என்னைக்காவது நீங்க மரியாதை கொடுத்து இருக்கீங்களா? அவர் எத்தனை பேருக்கு வணக்கம் சொல்லி இருக்கார். அவருக்கு திருப்பி யாராவது வணக்கம் சொல்லி இருக்கிறீர்களா? மாட்டீங்க .ஏன்னா அவர் பார்த்துக்கிட்டு இருக்கிற பதவி. அவர் செய்கிற வேலை உங்களுக்கு எல்லாம் அருவருப்பா தெரியுது. நீங்க இவர ஒரு மனுஷனாவே மதிக்கல. அவர் செய்கிற வேலையை வச்சுத்தான் மரியாதை கொடுத்திருக்கிங்க. இது தப்பு. இந்த கந்தன் கடைநிலை ஊழியனுக்கு பிறந்தவன் தான் இந்த கந்த வடிவேல். இவர் என்னாேட அப்பா என்று உயரதிகாரி சொன்னபோது அத்தனை பேரும் வாயடைத்து நின்றார்கள்.மனிதர்களை மனிதர்களா மதிங்க. அதுதான் நல்லது. ஒருத்தனுடைய வேலை. அவன் கிட்ட இருக்கிற பணத்த நீங்கள் மதிக்க வேண்டாம் குணத்தை மதிங்க.
இந்த கடைநிலை ஊழியர் கந்தன் சுத்தம் செஞ்ச கழிவறை பணத்தில தான் இந்த அலுவலகத்துக்கு உயரதிகாரியா வந்து இருக்கேன் என்று கந்தனை நிற்க வைத்து நெடுஞ்சண்டையாக கந்தன் காலில் விழுந்தார் அவரது மகன் கந்த வடிவேல்.
இதைப் பார்த்த அனைவருக்கும் விலா எலும்பு ஒடிந்தது போலானது.
கந்தன் வழக்கம் போல தன்னுடைய வேலையைச் செய்ய ஆரம்பித்தார். கந்தவடிவேலை விட இப்போது அந்த அலுவலக ஊழியர்கள் கந்தனுக்கு மரியாதை தர ஆரம்பித்தார்கள்.
ஏனென்றால் கந்தனின் மகன் உயர் பதவியில் இருக்கிறாரே? இது கந்தனுக்கான மரியாதை அல்ல. கந்தவடிவேலைப பெற்ற தகப்பன் என்பதற்கான மரியாதை.
மனிதர்கள் எப்போதும் அப்படித்தான்.