சிறுகதை

காலம் பதில் சொல்லும் –ராஜா செல்லமுத்து

நீண்ட நாட்களாக ஒரு நிரந்தரமான வேலை வேண்டும் என்று சக்தி தேடிக் கொண்டிருந்தான். ஆனால் அவன் நினைத்தபடி எதுவும் கிடைக்கவில்லை. மனதில் நிம்மதி இல்லாமல் உடம்பில் வலுவும் இல்லாமல் அவன் எண்ணம் இருந்தது. நிலையான வருமானம், நிரந்தர வேலை இல்லை என்ற கசப்பான உணர்வு அவன் நெஞ்சைத் துளைத்துக் கொண்டிருந்தது.

அவனுடைய நண்பர்கள் எல்லாம் உதட்டில் பேசி உள்ளத்தில் குடி ஏறாமல் இருந்தார்கள். அவனுடைய வாழ்க்கையில் முன்னேறுவதற்கு யாரும் உதவி செய்யவில்லை. மாறாக சாதாரணமாக பேசுவதையே சாதனை என்றார்கள்.

இதனால் மனம் வெறுத்துப் போயிருந்த சக்தி ஒரு பெரியவரிடம் தன் மனதில் இருப்பதை எல்லாம் சொன்னான். அவர் உதவி செய்வதாகச் சொல்லி ஒரு நிறுவனத்தில் பணிபுரிய அவனுக்கு ஒரு சிபாரிசுக் கடிதத்தைக் கொடுத்தனுப்பினார். அந்த கடிதத்தை நம்பிக்கையோடு எடுத்துக் கொண்டு அந்நிறுவனத்திற்கு சென்றான் சக்தி.

அங்கு ஆட்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

அவன் உள்ளே நுழைந்து அந்தக் கடிதத்தைக் கொடுக்கும் நபரைத் தேடினான்.

அவர் முக்கியமான வேலைகளில் இருந்தார். அவனை வெளியே அமரச் சொன்ன காவலாளி.

அவன் சொன்னபடியே வெளியே அமர்ந்திருந்தான். அந்த நபர் சக்தியை உடனே சந்திக்கவில்லை காலதாமதப்படுத்தினார்.

சம்பந்தமில்லாத சில வேலைகளை தன்னருகே வைத்துக் கொண்டு, சக்தியைச் சந்திக்காமல் இருப்பதில் குறியாக இருந்தார்.

சக்தியும் பொறுமையாக அமர்ந்து அவர் எப்போது கூப்பிடுவார் என்று நினைத்துக் கொண்டிருந்தான்.

ஆனால் அவர் சக்தி கூப்பிடுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆனது. அதுவரையில் பொறுமை காத்துக் கொண்டிருந்த சக்தி, தன்னுடைய செல்போனை பார்ப்பதும் தன் கையிலுள்ள கோப்புகளைப் பார்ப்பதுமாக அங்கே நேரத்தை கழித்துக் கொண்டிருந்தான்.

அப்போதுதான் சக்தியைக் கூப்பிட்டார் அந்த நபர்.

சக்தி உள்ளே போய் தன்னுடைய சிபாரிசு கடிதத்தையும் தன்னைப் பற்றியும் சொன்னான்.

அதைப் பற்றிய பெரிய அங்கீகாரமும் மரியாதையும் இல்லாமல் அவனை அலட்சியமாகப் பார்த்துவிட்டு சொல்லி அனுப்புவதாகச் சொன்னார் அந்த நபர்.

அவர் அந்த நிறுவனத்தின் மேலாளரும் இல்லை. அந்த நிறுவனத்திற்கு முதலாளியும் அல்ல. அவரும் அந்த நிறுவனத்தில் வேலை செய்பவர்தான் என்பது சக்திக்கு தெரிந்தது.

ஆனால் ஏன் இவ்வளவு அலட்சியமாக நடந்து கொள்கிறார்? என்பது மட்டும் அவனுக்குப் புரியவில்லை .

காலங்கள் கடந்தன….

அந்த நிறுவனத்திடமிருந்து அழைப்பு வரும் என்று நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் அழைப்பு வரவே இல்லை. அந்த நிறுவனத்தை விட்டுவிட்டு இன்னொரு நிறுவனத்திற்கு வேலைக்கு சேர்ந்தான் சக்தி.

அந்த நிறுவனம் அவன் திறமை அவருடைய ஈடுபாடு, அவனுடைய முயற்சி, உழைப்பு இத்தனையும் பார்த்து அவனை அப்படியே அள்ளிக் கொண்டது. அந்த நிறுவனத்தில் மிகத் திறமையான ஊழியர்களில் ஒருவனான் சக்தி.

மேலாளர் சக்தியிடம் யோசனை கேட்பதும் நிறுவனத்தை உயர்த்துவது பற்றியும் பேசிக் கொண்டிருப்பார்.

நல்ல பண்பு இவைகளெல்லாம் அவன் வேலை செய்யும் நிறுவனத்தில் ஒரு நல்ல பெயர் எடுத்துக் கொடுத்தது. அதனால் தைரியமாக அந்த நிறுவனத்தில் பணி செய்து கொண்டிருந்தான்.

அப்போது, சக்தி வேலை செய்யும் நிறுவனத்திற்கு அந்த நிறுவனத்தின் மேலாளரை சந்திப்பதற்கு ஒருவர் வந்திருக்கிறார் என்று சக்தியின் காதுக்கு எட்டியது.

யார் வந்திருக்கிறார்கள்? என்று பார்ப்பதற்குள் மேலாளர் சக்தி அழைத்தார அவருடன் நிறைய நேரம் பேசிக் கொண்டிருந்தார் மேலாளர்.

காவலாளியும் மேலாளரிடம் உங்களுக்காக ஒருவர் காத்துக் கொண்டிருக்கிறார் என்று சொன்னபோது, காத்திருக்கட்டும். நாங்கள் பேசி முடித்து கூப்பிடுகிறம் என்றார்.

பேச்சு ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் 3 மணி நேரம் என்றானது. அதுவரையில் சக்தியும் மேலாளரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

கம்பெனி குறித்த விவரங்களை சக்தியிடம் கூறிக் கொண்டிருந்தார் மேலாளர். ஒரு வழியாக மதிய உணவு இடைவேளை வரை பாேனது, பேச்சு.

சார் உங்களுக்காக ஒருத்தர் காத்துட்டு இருக்கார். அவரைச் சந்தித்துப் பேசுங்கள் என்று சொல்லிவிட்டு வெளியே வந்தான் சக்தி.

அவர நான் வேணும்னே தான் உட்கார வைத்தேன். இருக்கட்டும் என்றார் மேலாளர்.

எதற்காக இப்படி சொல்கிறார்? யார் அவர்? என்ற ஆவலோடு சக்தி வெளியே வந்து காத்துக் கொண்டிருக்கும் நபரை பார்த்தான்.

பார்த்தவனுக்கு அதிர்ச்சியானது. அங்கே அவர், சக்தி முன்னால் ஒரு நிறுவனத்திற்கு வேலை தேடிப் போனபோது, அவனைப் பல மணி நேரம் காக்க வைத்தவர்தான் இப்போது சக்தி எப்போது வெளியே வருவான். மேலாளரைச் சந்திக்கலாம்? என்று காத்திருக்கிறார் என்று அவனுக்குத் தெரிய வந்தது.

அவன் மனதிற்குள் சந்தோச நதி ஓடியது. காலம் எவ்வளவு வேகமாக சென்று கொண்டிருக்கிறது.

நாம் இவருக்காக ரொம்ப நேரம் காத்துக் கொண்டு இருந்தோம்.

ஆனால் அவர் நம்மை என்ன ஏது என்று கேட்கவில்லை? ஆனால் இன்று நமக்காக அவர் காத்துக் கொண்டிருக்கிறார். இதுதான் காலம் என்ற சக்தி அவரை வணங்கிவிட்டு, ‘சார் உங்கள மேலாளர் கூப்பிடுகிறார் போகலாம்’ என்றான்.

அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு உள்ளே சென்றார் அவர், அவர் மனதில் சக்தியை எங்கேயோ பார்த்திருப்பது போல் இருக்கிறதே? என்று நினைத்தபடியே உள்ளே நுழைந்தார்.

காலம் இவருக்கு நல்ல பதில் தந்திருக்கிறது என்று நினைத்துக் காெண்டு தன் அலுவலக அறையை நோக்கி நடந்தான் சக்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *