சிறுகதை

காலம் – தருமபுரி சி.சுரேஷ்

காலம் பொன் போன்றது – இந்த பழமொழி யாவரும் அறிந்தது.

இருந்தாலும் என்ன செய்ய; காலத்தின் கட்டாயம் வீட்டுக்குள்ளே இருக்க வேண்டியதாயிற்று

தொடர்ந்து வெளியே சென்று யாவரும் அவரவர்களுடைய பணிகளை செய்ய முடியாத சூழ்நிலைகளுக்கு உள்ளாக்கப்பட்டு கிடக்கிறோம் என மனதிற்குள் வசீகரன் எண்ணிக்கொண்டிருந்தான்

அவன் எண்ணத்தை கலைக்கும் படியாக அவன் மனைவி கீதா அங்கே வந்தாள் “என்னங்க மோட்டு வளையத்தை பார்த்து எதையோ தீவிரமாக சிந்திச்சிட்டு இருக்கீங்க”

அவள் பக்கம் திரும்பி “ஒன்னும் இல்லை” என்றான்.

அவள் விடுவதாக இல்லை “இல்ல எதையோ யோசிச்சிட்டு இருந்தீங்க”

அவள் பிடிவாதத்தை விடமாட்டாள் என்பது வசீகரனுக்கு தெரியும்.

ஆகவே அவன் மனதை திறந்தான் “ஒன்னும் இல்ல. இந்த கொரோனா வைரஸ் வந்ததிலிருந்து மக்களால் எதுவும் அவங்க வேலையைச் செய்ய முடியல. அதான் யோசனை பண்ணிட்டு இருந்தேன்”

“அதுக்கு நாம என்னங்க செய்ய முடியும். நம்ம கையில என்ன இருக்கு”

“ஆமா நாம எவ்வளவுதான் திட்டம் போட்டாலும் சில நேரங்களில் எல்லாமே இப்படிப்பட்ட சூழலில் நடக்காம போயிடுது”

“ஆமாங்க வாழ்க்கையில நாம என்னதான் திட்டம் போட்டாலும் கடைசியில் கடவுள் கையில் விடுவதுதான் நல்லது”

“ஆமா கீதா நாம எப்பவுமே சாதகமான சூழ்நிலையையே எதிர்பார்க்கிறோம். சில பாதகமான சூழ்நிலையிலும் கூட நம்மை நமக்குள்ளே என்ன திறமைகள் இருக்குது; அதை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு இது அப்படின்னு யோசிக்கிறது இல்லை”

“எப்படி சொல்றீங்க”

“நம்ம பையன் கோபு பாரு. தினமும் ஓவியங்கள் வரைந்து அசத்துறான். புதுசு புதுசா முகமூடி செஞ்சு காட்டுகிறான், தனக்கு தெரிஞ்சதெல்லாம் எழுதி பாட்டு பாடி காட்டுற அவனுக்குள்ள பொதிந்து கிடக்கிற அத்தனை திறமைகளையும் வெளிக் கொண்டு வரான்”

“அவன் வேற என்னங்க பண்ணுவான். எவ்வளவு நேரம் தான் டிவி பார்ப்பான்.

அதேநேரம் அவங்க பள்ளிக்கூட டீச்சரும் வாட்ஸ்அப் குரூப் ஒன்னு ஆரம்பிச்சு. அதுல இவன் பேரை சேர்த்து இருக்காங்க. தினமும் ஹோம் ஒர்க் கொடுக்கறாங்க”

“நல்லதுதானே இல்லாட்டி படிப்பையே மறந்துடுவாங்க இல்லையா”

பரவாயில்ல பிள்ளைங்க எப்படியோ போகட்டும்னு அப்படியே விடாம தினமும் இழுத்து பிடிக்கிறாங்க. ஆசிரியர்கள் இதுவும் ஒரு வகையில் நல்லதுதான்”

வசீகரனும் ஆசிரியராக பணியாற்றி வருகிறவன். புலம்பினான் “என்னுடைய பள்ளிப் பிள்ளைகளைப் பார்த்து எத்தனை நாளாச்சு. சக ஆசிரியர்களை பார்த்து நலம் விசாரித்து நிறைய நாட்கள் ஆயிற்று முகமுகமாய்”

“என்னங்க செய்யறது; நம்ம முகத்தையே நாம பார்க்க முடியாதபடிக்கு அப்படி ஒரு நோய் வந்து கிடக்குது; மருந்தும் இன்னும் கண்டு பிடிக்கல. கடவுள்தான் காப்பாத்தனும். சரிங்க. நான் வீட்டில் ஆக வேண்டிய வேலையை பாக்குறேன்”

“சரி நான் உனக்கு ஏதாவது உதவி செய்யட்டுமா”

“வேண்டாங்க. சமையல்கட்டில் உங்களுக்கு ஒத்து வராது”

“வேற வேலை ஏதாவது இருக்கா”

“நம்ம வீட்டு ஃபேன்களைத் தொடச்சு ரொம்ப நாளாச்சு. அலமாரியில் புத்தகங்கள் எல்லாம் ஒழுங்காக அடுக்கி வையுங்க. கொஞ்சம் வீட்ட ஒட்டடை அடிங்க” என்றாள்.

வேலை நாட்களில் வசீகரன் இப்படிப்பட்ட வேலை எல்லாம் செய்ததில்லை. இப்பொழுது அவனால் சும்மா இருக்க முடியவில்லை.

வீட்டில் எவ்வளவு நேரம் செல்போனில் இருந்து தெரிந்தவர்களுக்கும் உறவினர்களுக்கும் பேசிக்கொண்டே இருக்க முடியும். ஆகவே வீட்டு வேலை செய்ய மும்முரமானான்.

வேலை நாட்களில் வாங்கிப் படிக்க முடியாத புத்தகங்கள் எல்லாம் இப்பொழுது படிக்க ஆரம்பித்து விட்டான்.

புத்தக சுரங்கத்துக்குள் நுழைந்து அறிவுச் செல்வங்களை எடுத்து இருதயத்தில் வைத்துக் காத்துக் கொண்டான்.

மீண்டும் பள்ளி திறக்கப்படும் பொழுது தான் படித்துச் சேகரித்த அறிவுச் செல்வங்களை மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும் என வைத்திருந்தான்.

வசீகரனுக்குள் ஒரு யோசனை ஏற்பட்டது. ஏன் நாமும் ஒரு வாட்ஸ்அப் குரூப் ஆரம்பித்து என் வகுப்பு பிள்ளைகளை எல்லாம் அதில் இணைத்து தினம் அவர்களுடைய படிப்பு களை நற்செயல்களை வாட்ஸ் மூலமாக விசாரிப்பதும் வீட்டுப் பாடங்களை கொடுத்து அவர்களை செய்ய வைப்பதும் நலமாக இருக்கும் எனச் சிந்தித்தான்.

மறுபக்கம் இப்படியாக யோசித்தான். ஒரு வேளை இந்தக் காரியம் பிள்ளைகளுக்கு பிடிக்காமலும் போகலாம் அல்லவா?

சரி பாவற்காய் கசப்பாகத்தான் இருக்கும்; அதற்காக அதை விட்டு விடவா முடியும். பிள்ளைகள் நலன் முக்கியம் அதற்கான காரியங்களையும் செய்ய ஆரம்பித்தான்.

இப்பொழுதெல்லாம் வசீகரன் வீட்டிலே பிசியாகிவிட்டார்.

தொடர்ந்து புத்தகங்களை வாசிக்கிறார். மாணவர்களுடைய நிலையை அறிந்து கொள்கிறார் வாட்ஸ்அப் மூலமாக

மாணவர்களின் ஹோம் ஒர்க் காரியங்களை பார்க்கிறார்.

மனைவிக்கு ஒரு நல்ல கணவனாக பக்கத்திலிருந்து அன்புகாட்டி உதவி செய்கிறார்.

தன் பையனுடன் நேரத்தை செலவிட்டு பாசத்தைப் பொழிகிறார்.

தொலைக்காட்சியில் தொல்லை தராத நல்ல நிகழ்வுகளை கண்டு கழிக்கிறார்.

பாதகமான நேரங்களிலும் சாதகமான காரியங்களை சிந்திக்க பழகிக் கொண்டார் வசீகரன்.

வாட்ஸ் அப்பில் கண்டதை பார்ப்பதை விட்டுவிட்டு இப்பொழுது தன் வகுப்பு மாணவர்கள் செய்த ஹோம் ஒர்க்களை சரி செய்து கொண்டிருக்கிறார்.

இந்நாட்களை வீணாய் விரையம் ஆக்கிவிடக்கூடாது.

காலம் பொன் போன்றது என்பதில் கண்ணாய் இருந்தார் வசீகரன்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *