* வழிகாட்டி இயக்கம் * 5000 சிறிய பாசன குளங்கள்
சென்னை, டிச 5–
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில், மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக தமிழ்நாடு இருக்கிறது. மாநில மற்றும் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கங்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கவும், அரசின் அனைத்துப் பணிகளும் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் குறிக்கோள்களுடன் இணைந்து அமைவதை உறுதிசெய்வதும் நிர்வாகக் குழுவின் கடமை. என்னுடைய தலைமையிலான இந்தக் குழு தான், இந்தியாவிலேயே காலநிலை மாற்றத்திற்காக அமைக்கப்பட்ட முதல் நிர்வாகக் குழு. அந்த வகையில், தமிழ்நாடு, இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக அமைந்திருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்தோடு கூறினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான நிர்வாக குழுவின் 2வது கூட்டத்தில் ஆற்றிய உரை வருமாறு:–
* தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் –
* தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் –
* பசுமைத் தமிழ்நாடு இயக்கம் –
* தமிழ்நாடு ஈரநில இயக்கம் –
* தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் ? ஆகிய இயக்கங்கள் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இதுபோன்ற இயக்கங்கள், திட்டமிடுதல்கள் வேறு எந்த மாநிலத்திலும் எடுக்கப்படவில்லை.
2070ம் ஆண்டுக்குள், ‘நெட் ஜீரோ எமிஷன்’ எட்டுவதற்கான வழிகாட்டியாக இந்த காலநிலை மாற்ற இயக்கம் திகழ்கிறது. இதற்கு உறுதுணையாக உருவாக்கப்பட்டுள்ள ‘பசுமைத் தமிழ்நாடு இயக்கம்’ மூலம், ‘Biodiversity’-யை முன்னிறுத்தவும் ‘Carbon Sink’-ஐ அதிகரிக்கவும், ஏற்கெனவே 8.3 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டிருக்கிறது.
நம் மாநிலத்திற்கு இயற்கை அரணாக விளங்கக்கூடியது, மிக நீண்ட நெடிய கடற்கரை! அதை வலுப்படுத்துகின்ற வகையில், ‘தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம்’ உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த இயக்கத்தின் மூலமாக, ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவுக்கு ‘அலையாத்திக் காடுகள்’, ‘கடல் புற்கள்’ மற்றும் பிற Critical Habitats (பல முக்கியத்துவம் வாய்ந்த கடல் வாழிடங்கள்) உருவாக்குதல் மற்றும் மீட்டெடுத்தல் போன்ற முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சூழல் அமைப்புகள், Carbon Zinc-களாகவும், கடல் அரிப்பிலிருந்து கடற்கரைகளைப் பாதுகாப்பதாகவும் அமையும்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் 3வது மாநிலம்
தமிழ்நாடு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில், இந்தியாவிலேயே 3வது மாநிலமாக இருக்கிறது. காற்றாலை மூலம், ஆண்டுக்கு 11 ஆயிரத்து 900 மில்லியன் யூனிட் மின்சாரமும் கிடைக்கிறது.
2030ம் ஆண்டுக்குள், தமிழ்நாட்டினுடைய 50 விழுக்காடு ஆற்றல், ‘புதுப்பிக்கத்தக்க ஆற்றல்’ மூலம் பெறுவதை குறிக்கோளாக கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் காலநிலைத் திட்டத்தில் முக்கியத் தூணாக விளங்குவது, ‘ஊரக நீர்ப் பாதுகாப்பு’.
2024–2025ம் ஆண்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் 500 கோடி ரூபாய் முதலீட்டில், 5000 சிறிய நீர்ப்பாசன குளங்கள் அமைக்கப்பட இருக்கிறது. 2,477 நகர்ப்புற
நீர் நிலைகளை சீரமைக்க…
2,477 நகர்ப்புற நீர் நிலைகளை மறுசீரமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பணிகள், நீரின் அளவையும் தரத்தையும் அதிகரித்து நகர்ப்புறங்களின் நிலைத்தன்மையை வலுப்படுத்தியிருக்கிறது.
ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியோடு, காவிரி கழிமுக பகுதியில், பருவநிலை மாறுதல் தழுவல் திட்டம், கடற்கரை மாவட்டங்களை புயல்களிலிருந்து பாதுகாத்தல், காலநிலை மாறுபாடுகளினால் ஏற்படும் வெள்ள அபாயங்களை தணித்தல், பாசன வசதியை மேம்படுத்துதல், கடல்நீர் உட்புகுவதை தடுத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் முதல் பகுதியாக, அடப்பாறு, ஹரிச்சந்திரா நதி, வெள்ளையாறு, பாண்டவையாறு, வளவனாறு, வேதாராண்ய கால்வாய் ஆகிய 6 ஆறுகள் மற்றும் 13 நீரேற்று நிலையங்களின் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, வெண்ணாறு, பாமினியாறு, கோரையாறு, மனங்கொண்டனாறு, மரக்கா கோரையாறு, கடுவையாறு ஆகிய 6 ஆறுகள் மற்றும் 6 நீரேற்று நிலையங்களை மேம்படுத்துவதற்காக, முதல்நிலை திட்ட அறிக்கை ஆயிரத்து 825 கோடி ரூபாய் மதிப்பில் தயார் செய்யப்பட்டு, இந்திய அரசின் பொருளாதார விவகாரத் துறைக்கு, கடனுதவி வேண்டி சமர்ப்பிக்கப்பட்டு, ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது.
இவை அனைத்துமே, இயற்கையைப் பாதுகாப்பதில் நம் மாநிலம் முன்னணியில் இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.
காற்று மாசுபாடு:
சுகாதார சவால்
‘காற்று மாசுபாடு’ சமீபகாலமாக ஒரு தீவிரமான சுகாதார சவாலாக மாறியிருக்கிறது’ என்று ஐ.நா. சொல்லியிருக்கிறது. நம்முடைய இந்தியத் தலைநகர் டெல்லியில் அதனுடைய பாதிப்புகளைப் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு திட்டங்களைத் தீட்டவேண்டும்.
உறுப்பினர்களுக்கு இங்கு நான் ஒன்றைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். தமிழ்நாடு அரசை பொறுத்தவரைக்கும், பொருளாதார மேம்பாட்டையும், சுற்றுச்சூழல் பொறுப்புணர்வையும் இரு கண்களாக நினைத்து தொடர்ந்து செயலாற்றி வருகிறோம். அதற்காகதான், நீர்நிலைகள் மறுசீரமைப்பு, Climate-Resilient Cities உருவாக்குவது, Biodiversity-யைப் பாதுகாக்குகிறது என்று முன்னெடுப்புகளை எடுக்கிறோம். நம்முடைய வழித்தோன்றல்களாக இந்த பூமியில் வாழப்போகின்ற குழந்தைகள் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு பசுமையான இயற்கைக்கு கேடுகள் விளைவிக்காத உலகத்தை வழங்க நம்முடைய வாழ்நாளில் திட்டங்களை முன்னெடுத்தோம்; அதில் வெற்றிப் பெற்றோம் என்று வரலாறு சொல்லவேண்டும். அதுதான் காலத்துக்கும் நமக்கான பெருமை.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
தங்கம் தென்னரசு,
முருகானந்தம்
இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான நிர்வாக குழுவின் உறுப்பினர்கள், அரசுத் துறையின் செயலாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பங்கேற்றனர்.