தமிழக சாதனைகள் தொடர முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி
ஆர். முத்துக்குமார்
இயற்கை பேரழிவு ஏற்படும் போதெல்லாம் தமிழகம் குறிப்பாக சென்னை மாநகர் அச்சத்தில் நடுங்கும் என்பதை பார்த்து வருகிறோம்!
அதித மழை, சுனாமி, சுட்டெரிக்கும் வெயில், குடிநீர் தட்டுப்பாடு என பல்வேறு பேரிடர்களுடன் சமீபத்து கொரோனா பெருந்தொற்று என பல்வேறு பேரிடர்களை இதுவரை லாவகமாகவே தமிழகம் சமாளித்து விட்டது.
இதை ஐநா சபையின் முன்னாள் செயலாளர் எரிக் சோல்ஹெய்ம் சமீபத்தில் ஆச்சரியத்துடன் பாராட்டியிருக்கிறார்.
சர்வதேச மனித உரிமைகள் தின விழா சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் நடந்தது. இந்நிகழ்வில் பேசிய தமிழக காலநிலை மாற்றத்துக்கான ஒருங்கிணைப்பு அதிகாரியும் ஐ.நா. சபை முன்னாள் சார்பு செயலருமான நார்வே நாட்டைச் சேர்ந்த எரிக் சோல்ஹெய்ம் பேசுகையில்,
காலநிலை மாற்றத்துக்கான மாநாட்டை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகத்தில் சிறப்பாக நடத்தியுள்ளார். அதற்காக அவருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். சர்வதேச அளவில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள வலுவான உள்கட்டமைப்பு கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று பாராட்டியுள்ளார்.
சமீபமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் நமது இயற்கை சூழலை சிறப்பாக பாதுகாக்க உறுதியாக இருப்பதை பலமுறை நிரூபித்துள்ளார்.
‘மீண்டும் மஞ்சப்பை’, பசுமைத் தமிழகம் இயக்கம், தமிழக கிரீன் கிளைமட் நிறுவனம் அமைப்பது எல்லாம் ஸ்டாலினின் வரவேற்கப்பட வேண்டிய திட்டங்களாகும்.
மேலும் தமிழகம் சுத்தமான மின்சாரத் தயாரிப்பில் தேசத்திற்கே முன்னோடியாகவும் இருக்கிறது. கடற்கரை பகுதிகளில் தென்தமிழகத்தில் சுழன்று கொண்டிருக்கும் காற்றாலைகள் தமிழகத்தின் பசுமைமயத்திற்கான புதுமுகமாகவே காட்சி தருகிறது. மேலும் கூடங்குளம் அணுமின் நிலையம் தற்சமயம் 2000 மெகாவாட் பசுமைமயான முறையில் ரஷ்யா தந்த விபத்துக்கே வாய்ப்பில்லாத தொழில்நுட்பங்கள் கொண்டு தயாரித்துக் கொண்டிருக்கிறது.
இதை அடுத்த சில ஆண்டுகளில் 6000 மெகா வாட் மின் தயாரிப்பு மையமாக உயர்த்த செயல்திட்டம் அமுல் செய்யப்பட்டு வருகிறது.
நமது தேசியத் தேவை 160 ஜிகா வாட்ஸ் ஆக இருப்பதில் மெல்ல மரபுசாரா மின் உற்பத்தியில் குறிப்பாக சூரியஒளி மின்சார தயாரிப்பு, காற்றாலை மின் உற்பத்தி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தந்து வருகிறோம்.
இதில் கூடங்குளம் அணுமின் உற்பத்தி மிகவும் வரவேக்கப்பட்டு வருகிறது. தற்போது அணுமின் தயாரிப்பில் முன்னணியில் 77 லட்சம் கிகா வாட்ஸ். இரண்டாவது இடத்தில் சீனா 38 லட்சம் கிகாவாட்ஸ் ஆகும்.
இந்தியாவில் 8 அணுமின் நிலையங்கள் இருக்கிறது. அவை தயாரிப்பது 6 கிகா வாட்ஸ் மட்டுமே!
ஆகவே முதல்வர் ஸ்டாலின் கூடங்குளத்தில் 6000 மெகாவாட்ஸ் தயாரிப்பு திறன் இருப்பதை முழுமையாக தயாரிக்க முயற்சிகள் எடுத்தால் அது நாடு தழுவிய மின் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதுடன் பசுமை புரட்சியில் மேலும் நாடே முன்னேற்றம் காணும்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட பல்வேறு திட்டங்களால் தமிழகம் வலுவான உள்கட்டமைப்பைக் கொண்டு காலநிலை மாற்றத்தை சமாளித்து வருகிறது.
எல்லா அலுவலங்களிலும் குளுகுளு ஏசிகள், கணினி அறைகளில் வெப்பம் போன்ற பல்வேறு உபகரணங்கள் மிக அதிகமாகவே உபயோகத்திற்கு வந்து விட்ட இந்த தருணத்தில் சென்ற நூற்றாண்டின் பல்வேறு சட்ட திட்டங்கள் மறுசீராய்வு செய்ததாக வேண்டும்.
மேலும் நவீனயுக தொழில் நுட்பங்கள் பசுமைமய வாழ்விற்கு ஏற்றதாக அமைய உரிய வரையறைகளும் அமுல்படுத்தி ஆக வேண்டும்.
அடுத்த 30 ஆண்டுகளில் வர இருக்கும் எல்லா நடப்புகளுக்கும் முதல் புள்ளி இன்று நாம் போடுவது தான் என்பதை மறந்து விடக்கூடாது.
அடுத்த 30 ஆண்டு கால அதிநவீன வளர்ச்சிகளுக்கான அடித்தளத்தை முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்படுத்துவார் என்பதில் நம்பிக்கை நிறையவே வந்திருக்கிறது.