தர்மராஜ் தான் நின்றிருக்கும் பேருந்து நிலையத்திற்கும் அவன் நண்பனைச் சந்திக்க செல்லும் கார்த்திக் இருக்கும் இடத்திற்கும் சுமார் 10 கிலோமீட்டர் இருக்கலாம்.
ஆனால் சென்னை நகர நெருக்கடியில் அந்த 10 கிலோமீட்டர் தூரத்தை கடக்க 100 கிலோமீட்டர் அவகாசம் தேவைப்படுகிறது.
வாகன நெரிசல். தார் சாலைகளில் ரயில் சேவைக்கான வேலை என்று எங்கு பார்த்தாலும் சந்தடிகள் நிரம்பி வழிகின்றன. அவன் சந்தடிகளைக களைந்து பேருந்து நிலையம் வருவதற்குள் கொஞ்ச நேரம் எடுத்துக் கொண்டது.
அதற்குள் அவன் செல்போனிற்கு ஒரு அழைப்பும் வர அதை பேசிக்கொண்டு இருந்தான்.
அதனால் வந்த ஒரு வாகனத்தில் அவனால் ஏற முடியவில்லை.
சரி அது போகட்டும் அடுத்த பேருந்தில் பயணப்படலாம் என்று நின்று கொண்டிருந்தான் தர்மராஜ்.
ஆனால் பேருந்து வந்த பாடு இல்லை .செல்போனிற்கு வந்த அழைப்பு ஒன்றும் அவ்வளவு முக்கியமானதாக இல்லை.
அவன் நினைத்திருந்தால் அந்த அழைப்பை நிராகரித்து விட்டு சென்ற பேருந்தில் ஏறி இருக்கலாம். அந்தப் பேருந்தை விட்டதனால் அவன் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேருந்து நிலையத்தில் நிற்க வேண்டியதாயிற்று .
அதற்குள் இரண்டு மூன்று முறை கார்த்திக் போன் செய்திருப்பான்.
கார்த்திக் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடறேன். எனக்காக வெயிட் பண்ணு .இங்க நிறைய டிராபிக்கா இருக்கு என்று பழியைப் போக்குவரத்து மீது போட்டான்.
அது சரி தர்மராஜ் நீ எங்கிட்ட விளக்கம் சொல்லலாம் .நான் உன்னை கூட்டிட்டு போற ஆளுட்ட இந்த விளக்கம் எல்லாம் சொல்ல முடியாது .உன்ன பத்து மணிக்கு வரச் சொன்னேன் .ஆனா நீ 11 மணி ஆகுது இன்னும் வரல; அவங்க என்ன நினைப்பாங்க. வாய்ப்பு அப்படிங்கிறது ரொம்ப தாமதமாக கிடைக்கும் . அத சரியா பயன்படுத்திக்கணும். ஏற்கனவே உனக்கு வந்த வாய்ப்ப பயன்படுத்தல. அப்பயும் நீ தாமதமாக தான் வந்தாய். ‘இல்லன்னா அஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே உன்னுடைய நிலைமை உயர்ந்து இருக்கும்.
ஆனா பாரு. இன்னும் அதே இடத்தில தான் இருக்க என்று நண்பன் தர்மராஜைக் கடிந்து கொண்டான் கார்த்திக்.
அவன் பேசியதற்கு எதுவும் மறுவார்த்தை பேசாமல் இருந்தான் தர்மராஜ்.
கார்த்திக் பேசியதில் நிறைய உண்மை இருக்கிறது என்று தர்மராஜிற்கு தெரியும்.
இந்த பிளாட்பாரம், இந்த நடை , வறுமை எல்லாம் சென்ற பேருந்து போல வந்த வாய்ப்பை தவறவிட்டது தான்.
அந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி இருந்தால் நாம் இந்நேரம் இந்த உலகிற்கு தெரிந்த மனிதர்களின் பட்டியல் நாமும் ஒருவனாக இருந்திருப்போம். ஆனால் இப்போது நம்மை நாமே அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டிய அவல நிலை.
இப்போதும் நண்பன் சொன்ன குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியவில்லை .
ஐந்து வருடக் கனவை ஐந்து நிமிடம் சாப்பிட்டு விட்டது. இனி இது மாதிரியான தவறுகளைச் செய்யக்கூடாது என்று நினைத்த தர்மராஜ் தன் கையில் இருக்கும் பணத்தை எடுத்து பார்த்தான்.
கார்த்திக் இருக்கும் இடத்திற்கு போவதற்கு அரசாங்கப் பேருந்து என்றால் பத்து ரூபாய்க்குள் தான் இருக்கும் .
ஆனால் 200 ரூபாய் ஆட்டோவிற்கு கொடுத்து பட்டனெ ஏறிப் பறந்தான்
கார்த்திக் சொன்ன நேரத்திற்கும் தர்மராஜ் சென்ற நேரத்திற்கும் கொஞ்சம் இடைவெளி இருந்தாலும் அந்த இடைவெளி கூட தர்மராஜுக்கு சாதகமாகத்தான் இருந்தது .
பரவாயில்ல தர்மராஜ் . இப்பதான் நாம சந்திக்க போற நபரும் வந்தார் சரியான நேரத்துக்கு வந்த குட் என்று தர்மராஜிற்கு கைகொடுத்து அந்த பெரிய மனிதரைப் பார்க்க அழைத்துச் சென்றான் கார்த்திக்.
உனக்கு இனிமே தொட்டதெல்லாம் துலங்கும் . கவலைப்படாதே என்ற வார்த்தையை உதிர்த்து கொண்டே சென்றான் கார்த்திக் .
அந்த வார்த்தையைக் கேட்டு தர்மராஜன் கண்களில் நீர் திரண்டது .
ஸாரி இனிமே தாமதம் என்ற வார்த்தைக்கு என் கிட்ட இடம் இருக்காது .எந்த நிகழ்வாக இருந்தாலும் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னாடி நான் இருப்பேன் .இது சத்தியம் என்று கார்த்திக்கின் கையில் அடித்தான் தர்மராஜ் .
அவன் எட்டு வைக்கும் நடையில் எதிர்காலம் பிரகாசமாகத் தெரிந்தது.