நெடுந்தூரப் பயணம் என்றாலும் பக்கத்தில் செல்வதென்றாலும் யாருக்கும் லிப்ட் கொடுக்கக் கூடாது என்ற கொள்கையுடையவன் சென்றாயன்.
“கிராமத்திலிருந்து நகரத்துக்கு வந்ததால் நகரம் படுத்தும் பாடு அவனை என்னென்னவோ செய்தது .அத்தனையும் பொய், பிராடு. பித்தலாட்டம், இவைகள் தான் நகரத்தில் மலிந்து கிடக்கின்றன” என்று நகரத்திற்கு வந்த உடனே அறிந்து கொண்டான். அதனால் அவன் யாரையும் நம்புவதில்லை. நண்பர்களாகவும் ஏற்றுக் கொள்வதில்லை. எல்லாம் முன்னாடி விட்டுப் பின்னாடி பேசும் புறம் பேசும் புல்லர்கள் என்று அவனுக்குத் தெரிந்தது.
அதனால் தன் இரு சக்கர வாகனத்தில் அலுவலகத்திற்குப் போகும் போதும், வரும் போதும் அல்லது வேறு எங்கு செல்லும்போதும் அவன் யாரையும் தன் வாகனத்தில் ஏற்றுவது இல்லை. நிறைய படித்திருக்கும் ஆட்கள் கூட லிப்ட் கேட்டு ஏறிக் கழுத்தில் கத்தியை வைத்து வண்டியைத் திருடுவதும் கையில் இருப்பதைப் பறிமுதல் செய்து போவதும் இப்படி நிறைய நடந்திருக்கின்றன ” என்று அவன் யாரையும் தன் வண்டியில் ஏற்றுவதில்லை.
அது இளைஞனாக இருந்தாலும் சரி கிழவனாக இருந்தாலும் சரி யார் வழி மறித்தாலும் அவர்களுக்கு நோ என்னுடைய வண்டியில் யாரையும் நான் லிப்ட் கொடுத்து ஏற்ற மாட்டேன்” என்று சொல்லிச் சென்று விடுவான். அதைவிட இன்னொன்று வண்டி ஓட்டுபவனை விட பின்னாடி அமர்ந்திருப்பவரும் ஹெல்மெட் போட வேண்டும் என்று இருப்பதால் ஹெல்மெட் போட வேண்டும் டிராபிக் போலீஸ் பிடித்தால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பார்கள் என்று அதைச் சொல்லியே யாரையும் ஏற்ற மறுத்து விடுவான், சென்றாயன். இதனால் அவன் பெரிய தொந்தரவுகளில் இருந்து மீண்டது போல இருந்தது.
” அப்பாடா, இந்த டிராபிக் போலீஸ்காரங்க நம்மள மாதிரி ஆளுகளுக்கு தான் நல்ல விஷயம் செஞ்சிருக்காங்க போல. பின்னாடி உக்காரவங்களும் ஹெல்மெட் போடணும் அப்படிங்கறதுனால யாரையும் வண்டியில நான் ஏத்துறதில்லை .அதைவிட நம்ம லிப்ட் கொடுக்கல அப்படிங்கற குத்தமோ குறையோ யாரும் சொல்ல மாட்டாங்க . இத நாம டிராபிக் போலீசுக்கு தான் நன்றி சொல்லணும்” என்று ரொம்பவே பெருமைப்பட்டுக் கொள்வான் சென்றாயன்.
ஒரு முறை சாலையில் பயணம் செய்து கொண்டிருந்தபோது ,ஒரு பெரியவர் கைநீட்டி “தம்பி ஆஸ்பத்திரி வரைக்கும் போகணும். கொஞ்சம் லிப்ட் குடுக்க முடியுமா ? ” என்று அவர் கேட்க
” இல்லைய்யா, நான் யாரையும் வண்டியில ஏத்துறதில்ல. வண்டியில ஏத்துனா பின்னாடி உக்காரவங்க ஹெல்மெட் போடணும். அதையும் தாண்டி இங்க நிறைய பேர் வண்டியில ஏறிட்டு நிறைய குடைச்சல் கொடுக்கிறாங்க. ஏன் அது கொலை வரைக்கும் கூட போய் முடிஞ்சிடுது .அதனால நான் யாருக்கும் லிப்ட் கொடுக்கறது இல்ல ” என்று தன்பக்கம் உள்ள கருத்தைச் சொன்னான் சென்றாயன்.
“தம்பி, மனுஷனுக்கு மனுஷன் ஒத்தாசையா இருங்க. இல்லன்னா இங்க வாழ முடியாதுப்பா. போற வழி தானே எறக்கி விட்டுட்டு போகலாமே’ என்று அவர் சொல்ல,
“இல்லங்க. அதெல்லாம் முடியாது. என்னோட வண்டியில நான் யாரையும் ஏத்த மாட்டேன். நான் மட்டும் தான் போவேன்” என்று கறாராகச் சொல்லி சென்றான் சென்றாயன்.
“சரி தம்பி நீங்க போயிட்டு வாங்க” என்றும் கொஞ்சம் கடுப்பாகவே சொன்னார் பெரியவர்
“வந்துட்டாங்க தினமும் வந்து லிப்ட் கேட்க வேண்டியது, நம்ம கழுத்தறுக்க வேண்டியது” என்று புலம்பி கொண்டு நகர்ந்தான் சென்ராயன். அலுவலகம் செல்வதற்கு முன்பாக ஏதோ ஒரு பொருள் வாங்க வேண்டும் என்பதற்காகக் கடைக்கு முன்னால் வாகனத்தை நிறுத்தினான். வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்றான். அவன் வாங்க வேண்டிய பொருட்களை எல்லாம் வாங்கிவிட்டு வெளியே வந்து பார்த்தபோது , அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
அவனுடைய இருசக்கர வாகனம் திருடு போயிருந்தது.
” இங்கே தான நிப்பாட்டி போயிருந்தேன். வண்டியக் காணாமே ? ” என்று கதறிக் கதறி அழுதான், ஒன்றும் நடக்கவில்லை. சுற்றி இருப்பவர்களைக் கேட்டான்.
யாருக்கும் தெரியாது என்று சொல்லிவிட்டார்கள். அங்கிருக்கும் சிசிடி கேமராவில் ஆராய்ச்சி செய்த போது யாரோ சிலர் வண்டியை ஓட்டிப் போனது தெரிந்தது.
“யாரா இருக்கும், இந்தப் பட்ட பகல்ல இந்த மாதிரி பைக் திருடிட்டு போறானுங்களே?” என்று புலம்பினான். அருகில் இருந்த ஒரு பெரியவர் “தம்பி, காணாமப் போனது உங்க வண்டியா?
“ஆமா ஐயா ” என்றான் சென்றாயன்.
” யாரோ சில பேரு, எனக்கு இருநூறு ரூபா பணம் கொடுத்து, இந்த லெட்டரையும் உன்கிட்ட கொடுக்க சொன்னாங்க ” என்று அந்தப் பெரியவர் அந்த கடிதத்தை சென்றாயனிடம் கொடுக்க, அதை வாங்கிப் பார்த்தவனுக்கு சுரீர் என்று உரைத்தது.
” அதெல்லாம் லிப்ட் கொடுக்க முடியாதுங்க. தெரிஞ்சதப் பாருங்க பின்னாடி உக்கார்ந்து வாரவங்களுக்கு ஹெல்மெட் வேணும்னு அரசாங்கத்தில் நிறைய பஞ்சாயத்து இருக்கு. எப்பவும் யாருக்கும் நான் லிப்ட் கொடுக்குறதில்ல ” என்று சென்றாயன் கறாராகப் பேசிய வார்த்தைகள் அதில் எழுதப்பட்டிருந்தன.
“வணக்கம் தம்பி. நீங்க எனக்கு வண்டியில லிப்ட் குடுக்கல. அதனால உங்க வண்டி நான் எடுத்துட்டு போறேன். நானும் யாருக்கும் லிப்ட் கொடுக்க மாட்டேன். வண்டியை தேடாதீங்க. நீங்க சொல்றபடி நானும் யாருக்கும் லிப்ட் கொடுக்கப் போறதில்ல தம்பி” என்று அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தது.
” லிப்ட் குடுக்கிறதும் குடுக்காததும் என்னுடைய இஷ்டம். அதுக்காக என்னுடைய வண்டியை எடுத்துட்டு போறது எந்த வகையில நியாயம்டா ” என்று அழுது புலம்பினான் சென்றாயன்.
” தார்ச் சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. வேறு வழியின்றி, கை நீட்டி லிப்ட் கேட்டான்.
அவனுக்கு யாரும் லிப்ட் கொடுக்கவில்லை.
“தம்பி இப்ப லிப்ட் கொடுக்கிறது ரொம்ப கஷ்டம். பின்னாடி உக்கார்ந்து வர்றவங்க ஹெல்மெட் போடணும். அதுமட்டுமில்லாம நிறைய பிரச்சினை கொடுக்கிறாங்க. அதவிட பின்னாடி ஒக்கார ஆளு நல்லவனா? கெட்டவனா ? தெரியாது. அதனால வேற வண்டி பாருப்பா” என்று ஒருவர் சென்றாயனிடம் தெளிவாக சொன்ன போது,
அவனுக்கு உரைத்தது. இதே வார்த்தையைத் தானே நாம நிறைய பேர்கிட்டச் சொல்லிக்கிட்டு இருந்தோம். நம்மகிட்டயே ஒருத்தன் இப்பிடிச் சொல்றானே? என்று திரும்பிப் பார்த்தான், அவன் ஓட்டிப்போன வண்டி திருடு போயிருந்த சென்றாயனின் இரு சக்கர வாகனமாக இருந்தது.
![]()





