செய்திகள்

காற்று மாசுபாடு எதிரொலி: டெல்லியில் தொடக்கப்பள்ளிகளுக்கு காலவரையின்றி விடுமுறை அறிவிப்பு

உ.பி.நொய்டாவில் 8ஆம் தேதி வரை ஆன்லைன் வகுப்புகள்

டெல்லி, நவ. 4–

கடுமையான காற்று மாசு காரணமாக, டெல்லி முதலமைச்சர் கேஜ்ரிவால், தொடக்கப்பள்ளிகளுக்கு காலவரையின்றி விடுமுறை அறிவித்துள்ள நிலையில், உத்தரபிரதேசத்தின் நொய்டாவில் 8 ந்தேதி வரையில் ஆன்லைன் வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு தீபாவளி பண்டிகையின்போது உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக மாறியது. காற்று மாசை தவிர்க்க காற்று சுத்திகரிப்பு கோபுரம் என பல முயற்சிகளை அரசு செய்து வந்தபோதிலும், தற்போது காற்றின் தரம் குறியீடு “மிகவும் மோசம்” என்ற நிலையில் உள்ளது.

இதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தொடக்கப்பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறையை அறிவித்து, முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

உ.பி.யிலும் பாதிப்பு

டெல்லிக்கு அடுத்தபடியாக மேற்கு உத்தர பிரதேசத்தின் சில பகுதிகளில் அடர்ந்த புகை மூட்டம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் நேற்று நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் காற்றின் தரக் குறியீடு கடுமையான அளவை எட்டியது.

இதனால் காற்று மாசுபாடு காரணமாக நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வரும் செவ்வாய்க்கிழமை வரை ஆன்லைனில் வகுப்புகள் நடத்துமாறு கவுதம் புத் நகரின் மாவட்ட பள்ளி கண்காணிப்பாளர் தர்மவீர் சிங் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முடிந்தவரை ஆன்லைனில் வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்டும், அனைத்துப் பள்ளிகளிலும் விளையாட்டு அல்லது கூட்டங்கள் போன்றவை நடத்த தடை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *