செய்திகள்

கார் விபத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் உட்பட 7 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

பெங்களூரு, ஆக.31–

கார் விபத்தில் ஓசூர் தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மகன் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். நெஞ்சை உலுக்கும் இந்த விபத்து இன்று அதிகாலை கோரமங்கலா என்னுமிடத்தில் நடந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் பிரகாஷ். இவர் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் இருந்து வருகிறார். இவரது மகன் கருணாசாகர் (வயது 24). நேற்று இரவு கருணாசாகர், நண்பர்கள் 6 பேருடன் ஆடி காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றார். இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை 2 மணியளவில் கோரமங்கலா என்ற இடத்தில் சென்றபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி, நடைபாதையின் மீது கவிழ்ந்து, அருகில் இருந்த கட்டிடத்தில் மோதி நின்றது. விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

காரில் பயணம் செய்த கருணாசாகர், நண்பர்கள் டாக்டர் பிந்து, இஷிடா, டாக்டர் தனுஷா, அக்ஷய் கோயல், உத்சவ், ரோஹித் ஆகிய 7 பேரும் இடிபாட்டில் சிக்கி பலியானார்கள். இதில் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.

இந்த காரை எம்.எல்.ஏ.வின் மகன் ஓட்டியுள்ளார் என்றும், கட்டுப்பாட்டை இழந்த கார் மின் கம்பம் மீது மோதி விபத்திற்குள்ளானது என்றும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மிகவும் விலை உயர்ந்த ஆடி காரில் அதிவேகமாக சென்ற இவர்கள் கட்டுபாட்டை இழந்த கார் நடைபாதையின் மீது ஏறியதால் விபத்து நடந்துள்ளதாக தெரிகிறது. காரில் பயணம் செய்த 7 பேரும் சீட் பெல்ட் அணியாததால் ஏர் பேக் வேலை செய்யவில்லை எனவும் தகவல் கூறியது.

இந்தக் கார் விபத்து நள்ளிரவில் நிகழ்ந்ததால், விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்து ஆடுகொடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.’

அப்பகுதியிலிருந்து சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆராய்ந்ததில், சாலையில் அதிவேகமாக வந்த ஆடி கார், திடிரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த சிசிடிவி காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து துயரம்…

பிரகாஷ் எம்எல்ஏவின் மனைவி கடந்த ஏப்ரல் மாதத்தில் உடல்நலக் குறைவால் இறந்த நிலையில், அவரது மகன் கருணாசாகர் இந்தக் கார் விபத்தில் பலியானார். நான்கு மாதங்களில் பிரகாஷ் வீட்டில் நடந்திருக்கும் 2வது துயரச் சம்பவம் இது.

மு.க.ஸ்டாலின் இரங்கல்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:–

கழகத்தின் ஓசூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஒய்.பிரகாஷின் மகன் கருணாசாகர், பெங்களூரு அருகே நிகழ்ந்த கோரமான சாலைவிபத்தில் சிக்கி உயிரிழந்தது அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

கோர விபத்துக்கு தன் அன்பு மகனைப் பறிகொடுத்திருக்கும் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ்க்கு எப்படி ஆறுதல் கூறுவது எனத் தெரியவில்லை.

அன்பு மகனை இழந்து தவிக்கும் அவருக்கும், அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *