சென்னை, ஜூன் 24–-
வாகனங்களில் பயணிகளை அழைத்து வரும் டிரைவர்கள் தூங்குவதற்காக தங்கும் விடுதிகளில் தனி ஓய்வுக்கூடம் அமைக்கப்படவேண்டும் என்று தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு அறிவுறுத்தியுள்ளார்.
வீட்டு வசதி மற்றும் நகப்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அபூர்வாவிற்கு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-–
ஓட்டல், தங்கும் விடுதிகள் போன்ற தொழில்கள் தற்போது நல்ல வளர்ச்சி அடைந்து வருகின்றன. தற்போதுள்ள சூழ்நிலைகளால் ஏற்படும் மன அழுத்தத்தை போக்குவதற்காக மக்கள் விடுமுறை நாட்களில் இதுபோன்ற இடங்களை அதிகமாக நாடுகின்றனர்.
இதற்காக பலர் தங்களின் கார் போன்ற சொந்த வாகனங்களில் டிரைவர்களை பணியமர்த்திக்கொண்டு பயணிக்கின்றனர். ஆனால் விடுதிகளில் அவர்கள் சொகுசு அறைகளை எடுத்துக்கொண்டு டிரைவர்களை அப்படியே விட்டுவிடுகின்றனர்.
எனவே அவர்கள் அந்த விடுதியின் வராண்டாவிலோ அல்லது காரிலோ மிகுந்த அசவுகரியங்களுடன் இரவில் தங்க வேண்டியதுள்ளது. அசவுகரியங்களால் டிரைவரால் நன்றாக தூங்க முடியாமல் போய்விடுகிறது.
மறுநாளில் வாகனத்தை செலுத்தும்போது விபத்து ஏற்படுவதற்கு அது ஒரு காரணமாய் அமைந்து விடுகிறது. எனவே விடுதிகள், ஓட்டல்கள், லாட்ஜ்களில் டிரைவர்கள் தங்குவதற்காக ஓய்வுக்கூடங்களை கண்டிப்பாக அமைக்கவேண்டும். சாதாரண தொகையை மட்டும் அதற்காக வசூலித்துக்கொள்ளலாம். வாகன நிறுத்த கட்டணத்துடன் அதை இணைக்கலாம்.
எனவே பெருநகரங்கள், சுற்றுலா பகுதிகளில் உள்ள ஓட்டல், லாட்ஜ்கள் கட்டுமானத்திற்கான திட்ட அனுமதியின்போது இதை வலியுறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். டிரைவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவும்போது விபத்துகளை தவிர்க்கலாம். இதுதொடர்பான நடவடிக்கைகளை நீங்கள் எடுத்தால், அது சாலை பாதுகாப்பாக அமைந்து நல்ல வரவேற்பைப் பெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.