நாடும் நடப்பும்

கார்பன் உமிழ்வு ஆண்டிற்கு மில்லின் டன் : மாசு தூசு கட்டுப்பாட்டில் சீனாவின் மெத்தனம்


ஆர். முத்துக்குமார்


உலகெங்கும் சுற்றுலா பொருளாதாரம் ஸ்தம்பித்திருக்கும் நிலையில் விண்வெளியில் 4 சுற்றுலா பயணிகள் வெளிவட்டப் பாதை வரை சென்று பத்திரமாக பூமி திரும்பியதை கண்டோம். பிரபல பணக்காரர் எலன்மஸ்க் நடத்தும் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் தான் இந்த அபூர்வ சாதனையை செய்தது. சமீபமாக கொரோனா பெரும் தொற்று காரணமாக உலகெங்கும் முழு ஊரடங்கை ஏற்படுத்தியதால் மிகவும் பாதிக்கப்பட்டது சுற்றுலாத் துறையாகும். விமான சேவைகள், ரெயில், சாலை போக்குவரத்துக்கள் தடை பெற்றதாலும் பெரும் தொற்று பீதி தனியாத நிலை தொடர்வதால் எல்லை கடந்து வெளியூர் செல்வது துவங்கவில்லை.

இந்நிலையில் பெரும் பணம் செலவழித்து சில மணி நேரங்கள் விண்வெளியில் பறப்பது அவசியமா? என்ற கேள்வி எழுகிறது.

அதே போன்று இங்கிலாந்து இளவரசர் வில்லியம் நம் பூமியை மேம்படுத்துவதை விட்டுவிட்டு இப்படி வெளி கிரகத்தில் இடம் தேடிச் செல்லும் முயற்சிகள் தேவையா? என்றும் ஒரு சமீபத்து பேட்டியில் கேட்டுள்ளார்.

இன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஓர் அபாயம் கொரோனா பெரும் தொற்றை விட பன் மடங்கு வீரியம் கொண்டது; பல நூறு ஆண்டுகளாகவே நம் புவியில் பல்வேறு சீர்கேடுகளையும் ஏற்படுத்தி வருகிறது. அது தான் நமது காற்று மண்டலத்தை சீரழிப்பது!

சுற்றுச்சூழல் சீரழிவு பற்றிய விழிப்புணவு இன்றைய தலைமுறைக்கு நிரம்பவே ஞானம் வந்து விட்டது. ஆனால் பல்வேறு பேராசைகள் காரணமாக உரிய தீர்வை நோக்கி நாம் நகராமல் இருக்கின்றோம். பருவநிலை மாற்றம் காரணமாக இமயமலைப் பகுதியில் பனி உருகுதல் அதிகரிக்க நீர் நிலை பொங்கி வழியத் துவங்கி விட்டது. இமய மலை பிரதேசத்தில் அதீத மழை, சென்னையிலும் பேய் மழை ஏற்படுத்திய பெரும் வெள்ளச் சேதம், கேரளாவில் சூறாவளி மழை காரணமாக காட்டாற்று வெள்ளப் பெருக்கு, பெங்களூரில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரிப்பு என பல்வேறு இயற்கை மாற்றங்களின் பின்னணியில் இயற்கை அழிவு ஏற்படுத்தும் சோதனை சமாச்சாரங்களை புரிந்து கொண்டாலும் அதை தடுத்து நிறுத்த நாம் தயாராகவே இல்லை!

கார்பன் உமிழ்வு தான் இயற்கை நாசத்திற்கு முக்கியமான காரணம் என்பதை உலகமே அறியும். ஆனால் கார்பன் உமிழ்வு அதிகரிப்பு வளர்ச்சி உலக நாடுகளில் சீனாவில் தான் வருடா வருடம் அதிகரித்து வருகிறது.

வாகனம், தொழிற்சாலைகள் உமிழும் கார்பன் உமிழ் காற்று மண்டலத்தை சர்வ நாசம் செய்கிறது. மரங்கள் உள்ளிட்ட பசுமை வளங்கள் காற்று மண்டல கார்பன் அமிலத்தை உட்கொண்டு விடுவதால் இயற்கைச் சமநிலை ஓரளவு சீராகி விடுகிறது.

ஆக பசுமைப் போர்வை அதிகரித்தால் தான் நமது காற்று மண்டலமும் மனிதன் சுவாசித்து உயிர் வாழ ஏற்றதாக இருக்கும்! ஆனால் இன்று உலகிலேயே மிகப்பெரிய பசுமைக் காடு அமேசான்காடு. ஆண்டுக்கு ஆண்டு அங்கு ஏற்படும் திடீர் தீயால் அது கருகிக் கொண்டிருக்கிறது.

மறுபுறம் மாசு தூசை அதிகரிக்கும் பட்டியலில் சீனா முதலிடத்திலும் இதர நாடுகள் மொத்தமாக இரண்டாவது இடத்திலும் அல்லவா இருக்கிறது!

கரிம உமிழ்வுப் பட்டியலில் சீனா 10.5 மில்லியன் கிலோ டன்னாக இருக்கிறது. இரண்டாம் இடத்தில் அமெரிக்கா 5.5 கிலோ டன், மூன்றாவது இடத்தில் இந்தியா 2.5 மில்லியன் கிலோ டன், 4வது இடத்தில் ரஷ்யாவும் ஜப்பானும் 1.7 மில்லியன் கிலோ டன்னாகவும் 1.2 மில்லியன் கிலோ டன்.

அதாவது சீனாவின் 10.5 மில்லியன் கிலோ டன்னும் இதர 5 நாடுகளும் சேர்ந்தே 11 மில்லியன் கிலோ டன்னாக இருக்கிறது!

ஆக சீனா முன்மாதிரியாக இருந்து மாசு தூசு விவகாரத்தில் நடவடிக்கைகள் எடுத்தால் தான் பிற நாடுகள் ஏதேனும் நல்ல திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தினால் பயன் இருக்கும்.

இது ஒருபுறம் இருக்க எல்லா நாடுகளுக்குமே கார்பன் உமிழ்வை குறைப்பது சிரமமாக இருக்கிறது. அது சீனாவுக்கும் மிகப்பெரிய சவாலாகத் தான் இருக்கிறது.

இந்த சிக்கல்களுக்கு இடையே தான் கரியமில உமிழ்வு குறைப்பு பற்றிய உலகத் தலைவர்கள் பங்கு கொண்ட கால நிலை மாநாடு பல்வேறு சிக்கல்கள் பற்றி பேச்சுகள் நடத்தினர்.

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தை அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த டிரம்ப் 2015ல் உதறினார். உலக நாடுகள் எடுத்துக் கூறியும் அதை ஏற்றுக் கொள்ளாது இருக்க அமெரிக்கா கூறி வரும் தகவல் என்ன தெரியுமா? நிதி வசதி இல்லை என்று கூறிவிட்டார் டிரம்ப்!

சீனாவின் தொழில்துறை வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுவது அமெரிக்காவாகும். அமெரிக்கா சீனாவிலிருந்து இனி தயாரிப்பு கிடையாது என்று கூறி விட்டால் நிலை மாறி விடலாம்! அப்படி ஒரு நிலைப்பாட்டை அமெரிக்காவால் எடுக்க முடியாது தவிக்கக் காரணம் நவீன தயாரிப்பு முறைகளும் அதைச் செய்து தரும் வேகமும் தான் கூடவே தரமும் மிக உன்னத இடத்தில் இருக்கிறது. அதையும் சரிவரக் கடைப்பிடித்ததாலும் விலைகளும் குறைவாக இருப்பதாலும் சீனாவின் வல்லரசுக் கனவு மெய்ப்பட இருக்கிறது.

இப்படிப்பட்ட சிக்கல்களுக்கு நமது தலைமுறைகள் நல்ல தீர்வு காண முடியாது போய் விட்டால் 2030க்குப் பிறகு சந்திக்க இருக்கும் பின் விளைவுகள் அபாயகரமானதாகவே இருக்கும் என்ற அச்சக் கண்ணோட்டத்துடன் பார்ப்பவர்கள் விண்வெளி ஆய்வுகள் நல் மாற்று திட்டம் காண வாய்ப்புகள் வரும் என்று கூறுகிறார்கள்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *