சிறுகதை

கார்த்திகைக்கும் பட்டாசு! – சிகாகோ சின்னஞ்சிறுகோபு

ராமநாதன் ஆறாவது படிக்கும் சிறுவன் என்பதும் அவனது ஊர் இந்த காலத்திலும் பஸ்கள் கூட வராத குக்கிராமம் என்பதும் நமக்கெல்லாம் தெரிந்த விஷயம்தான்!

தீபாவளியெல்லாம் முடிந்து திருக்கார்த்திகை விழாவும் நெருங்கிக் கொண்டிருந்தது. அது மாலை நேரம். மழை வருவதுபோல அரையிருட்டாக இருந்தது. ராமநாதன் வீட்டு வாசலில் திண்ணையில் உட்கார்ந்திருந்தான். ‘தீபாவளிக்கே எல்லா வெடிகளையும் வெடித்து விட்டோமே, இந்த கார்த்திகைக்கு வெடிககள் எதுவும் மீதி வைக்கவில்லையே’ என்று கொஞ்சம் வருத்தத்துடன் அவன் உட்கார்ந்திருந்தான்.

அப்போது ஒரு பழைய சைக்கிளில் ‘கட…கட…’ வென்று வந்து அவனது வீட்டு வாசலில் இறங்கினார் பரமசிவம் மாமா. அவரது சைக்கிளின் கேரியரில் ஒரு பெரிய பட்டாசு அட்டைப்பெட்டி பார்சல் இருந்தது. அதன்மேல் விநாயகரின் படத்துடன் பத்தாயிரம் வாலா என்று பளிச்சென்று ஆங்கிலத்தில் இருந்தது.

‘தீபாவளிப் போய் இவ்வளவு நாட்கள் ஆகிவிட்டது. பரமசிவம் மாமா என்ன இவ்வளவு பெரிய சரவெடி பார்சலுடன் நம்ம வீட்டுக்கு வறார்? நமக்கு கொடுக்கத்தான் வருகிறாரோ’ என்று சந்தேகத்துடன், கொஞ்சம் சந்தோஷத்துடன் அவரைப் பார்த்தான் ராமநாதன்.

இந்த பரமசிவம் மாமாவை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கலாம். ராமநாதன் வசிக்கும் இந்த கிராமத்திலிருந்து, மூன்று மைல் தூரத்தில் இருக்கும் டவுனில், சன்னதி தெருவில் பழக்கடை வைத்திருக்கிறார் பரமசிவம். அந்த சன்னதி தெருவில் ஏழெட்டுப்பேர் பழக்கடை வைத்திருக்கிறார்கள். அதில் இந்த பரமசிவமும் ஒருவர். ஆனால் நம்ம பரமசிவத்துக்கு கொஞ்சம் சாமர்த்தியம் போதாது. ஏதோ கொஞ்சம் சம்பாதிப்பார். ஆனாலும் எப்போதும் கடனும் உடனுமாகதான் காலத்தை ஓட்டுவார். ஆனாலும் அவரும் சும்மா இருப்பதில்லை. தீபாவளிக்கு பட்டாசு, பொங்கலுக்கு கரும்பு என்று சீசன் வியாபாரமும் செய்வார்!

இந்த பரமசிவம் நம்ம ராமநாதனின் அப்பாவுக்கு ஏதோ தூரத்து சொந்தம். அவர் குடும்பம் ராமநாதனின் அப்பா குடும்பத்திற்கு அந்த காலத்தில் நிறைய உதவிகள் செய்திருக்கிறது. அந்த உரிமையில் சொந்தக்காரர் என்ற முறையில் ஒரு அவசரத் தேவைக்காக ராமநாதனின் அப்பாவிடம் பரமசிவம் ஒரு பத்தாயிரம் ரூபாயை இரண்டு வருடத்திற்கு முன்பு கடனாக வாங்கியிருந்தார். கடன் வாங்கும்போது ஒரு ஆறு மாதத்திற்குள் திருப்பி தருவதாக சொல்லிதான் வாங்கினார்.

அவரின் போதாத நேரம். அதன் பிறகு கொரோனா காலம் வந்து அவருக்கு வியாபாரம், வருமானமெல்லாம் படுமோசமாக போனது. சென்ற வருட தீபாவளியின் போதும் பட்டாசு வியாபாரம் சரியில்லாமல் போனது. இப்படியே அவரால் அந்த பத்தாயிரம் ரூபாயை திருப்பிக் கொடுக்க முடியாமலேயே காலம் ஓடிக் கொண்டிருந்தது.

இந்த வருட தீபாவளிக்கு பட்டாசு வியாபாரத்தில் கிடைக்கும் லாபத்திலிருந்து அந்த பத்தாயிரம் ரூபாயை திருப்பிக் கொடுத்து விடலாம் என்று அவர் நினைத்திருந்தார். இந்த வருடமோ தீபாவளி நேரத்தில் கடும் மழை, வெள்ளம்! பட்டாசு வியாபாரத்தில் போலீஸ்காரர்களின் கெடுப்பிடி வேறு! பாவம், பரமசிவத்தின் பட்டாசுக்கடையில் பாதிக்கு மேல் பட்டாசு விற்காமல் தேங்கி விட்டது. அதனால் இந்த தீபாவளிக்கு பிறகும் அவரால் ராமநாதனின் அப்பாவிடம் வாங்கிய பணத்தை திருப்பி தரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.

தீபாவளிக்கு பிறகு ராமநாதனின் அப்பாவைப் பார்த்து, ‘அந்தப் பணத்தை இன்னும் நாலைந்து மாதத்திற்கு பிறகு தருகிறேன்’ என்று சமாதானம் சொல்லலாம் என்று நினைத்திருந்த பரமசிவம், இன்றுதான் ராமநாதனின் அப்பாவை பார்க்க கிளம்பினார்.

அப்போது தனது கடையின் ஒரு மூலையில் ஒரு பக்கமாக கிடந்த அந்த பத்தாயிரம் வாலா சரவெடி பாக்கெட் அவர் கண்ணில் பட்டது. அது நான்கு வருடத்திற்கு முன்பு ஒரு புது பட்டாசு தயாரிப்பு கம்பெனியிடமிருந்து விலை மலிவாக கொள்முதல் செய்தது. இந்த பத்தாயிரம் வாலா பட்டாசை யாராவது அரசியல் பிரமுகர்கள் வரும்போதோ, அல்லது ஏதாவது பெரிய திருமணத்தின்போதோ ஒன்றுக்கு மூன்றாக விலை வைத்து விற்றுவிடலாம் என்று நினைத்து அப்போது அவர் கொள்முதல் செய்திருந்தார். அது விற்பனையாகமல் அப்படியே கிடந்து விட்டது. நான்கு வருட பழசான இந்த பத்தாயிரம் வாலா பட்டாசை இனி விற்க முடியாது என்பது அவருக்கு புரிந்தது. ‘இதை என்ன செய்வது?’ என்று யோசித்த பரமசிவத்திற்கு ஒரு யோசனைத் தோன்றியது.

‘சிறுவன் ராமநாதனுக்கு பட்டாசென்றால் பிடிக்கும். இப்போது அவனுடைய அப்பாவைப் பார்த்து, கடன் வாங்கிய பணத்திற்கு சமாதானம் சொல்லத்தானே போகிறோம். இந்த பத்தாயிரம் வாலா சரவெடி பாக்கெட்டை ராமநாதனுக்கு பரிசாக கொடுத்து விடலாம்! அது ராமநாதனின் அப்பாவை கொஞ்சம் சமாதானம் படுத்தியது போலவும் இருக்கும்’ என்று நினைத்துதான் அந்த பத்தாயிரம் வாலா பட்டாசுடன் ராமநாதன் வீட்டுக்கு வந்திருந்தார் பரமசிவம்.

“டேய்…ராமநாதா, இதோ பார்! உனக்காக எவ்வளவு பெரிய பட்டாசுசரம் கொண்டு வந்திருக்கிறேன்!” என்றபடி அந்த பெரிய பட்டாசு பாக்கெட்டை சைக்கிள் கேரியரிலிருந்து எடுத்து ராமநாதனிடம் நீட்டினார் பரமசிவம்.

ராமநாதன் கண்கள் ஆச்சரியத்துடன் அகல விரிய அந்த பட்டாசு பாக்கெட்டை இரு கைகளையும் நீட்டி வாங்கினான். கைகள் கனத்தால் தாழ்ந்தது. ‘அடேயப்பா… என்னமா கனக்குது! நாலைந்து கிலோ எடையிருக்கும் போலிருக்கே!’ என்று நினைத்துக் கொண்டான்.

அப்போது வெளியே எட்டிப் பார்த்த ராமநாதனின் அப்பா, “இப்ப எதுக்கு இவ்வளவு பெரிய சரவெடியை கொண்டு வந்து இவனுக்கு கொடுக்கிறிங்க? தீபாவளியில் கடையில் விற்காத வெடியை தூக்கிட்டு வந்துட்டிங்களா? இவனோ பொடியன்! அதோடு தீபாவளியும் எப்பவோ போய்விட்டது! இப்ப எதுக்கு இவனுக்கு பட்டாசு?” என்று படபடத்தார்.

“இது சரவெடிதானே! வருகிற கார்த்திகையன்று தெருவில் போட்டுக் கொளுத்தினால் ஒரு அரைமணி நேரத்திற்குள் பட…பட வென்று வெடித்திடப் போகுது. ராமநாதனும் ரொம்ப சந்தோஷப் படுவான்! இந்த வருடம் மழையினால் பட்டாசு வியாபாரமும் நஷ்டம்….” என்றபடி வீட்டுக்குள் நுழைந்தார் பரமசிவம்.

“சரி…சரி… புலம்பாதிங்க! கொடுக்க வேண்டிய பத்தாயிரத்தை பொறுமையாக கொடுங்க!” என்றார் ராமநாதனின் அப்பா. அவருக்கு அந்த பத்தாயிரம் ரூபாய் பணத்தை பரமசிவத்திடம் ‘அதட்டிக் கேட்கவும் முடியவில்லை. போனால் போகிறது என்று விடவும் முடியவில்லை’.

பரமசிவத்திற்கு ‘அப்பாடா’யென்று கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. இனி இந்த பத்தாயிரம் ரூபாயை பற்றி நாலைந்து மாதத்திற்கு கவலைப்பட வேண்டியதில்லை’யென்று பெருமூச்சு விட்டார். அதன்பிறகு கொஞ்சநேரம் ராமநாதன் அப்பாவிடம் தனது கஷ்டங்களையெல்லாம் புலம்பிவிட்டு, ராமநாதனின் அம்மா கொடுத்த காபியை குடித்துவிட்டு சைக்கிளில் ஏறி சிட்டாக பறந்து விட்டார்.

ராமநாதனுக்கு ஒரே குஷியாக இருந்தது. அவனால் இந்த அற்புத நிகழ்வை நம்பவே முடியவில்லை. ‘இந்த கார்த்திகைக்கு வெடிக்க ஒரு வெடி கூட இல்லையென்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தோம். இப்போது ஒன்றல்ல, இரண்டல்ல, நூறல்ல, ஆயிரமல்ல, பத்தாயிரம் வெடிகள் கிடைத்து விட்டது என்று அவன் சந்தோஷத்தில் குதித்துக் கொண்டிருந்தான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *