சிறுகதை

காரணகாரியம்- ராஜா செல்லமுத்து

பிரதான சாலையில் இருக்கும் ஒரு பிரியாணிக் கடை பரபரப்பாக ஆரம்பிப்பதற்கு முன்பாக கொஞ்சம் இலகுவாக இருந்தது.

டேபிள்கள் தயார் நிலையில் இருந்தன. தண்ணீர் அந்தந்த டேபிள்களில் வைக்கப்பட்டு இருந்தது .கூடவே மெனுக்கார்டும் இருந்தது .

கடிகார முள் ஒரு மணியைத் தொடுவதற்கு இன்னும் சில நொடிகளே இருந்தது

அந்த ஓட்டல்காரர்கள் வாடிக்கையாளர்களை எதிர்நோக்கிய படி அமர்ந்திருந்தார்கள்.

நிரஞ்சன் சரியாக 12. 55 மணிக்கெல்லாம் ஓட்டலுக்குள் நுழைந்தான்.

அப்போது சரிவர ஓட்டலில் ஆள் வரத்து இல்லை .அவன் நுழைந்து கை கழுவும் இடத்தில் கையை கழுவிவிட்டு ஒரு இடத்தில் அமர்ந்தான் .

மெனுக் கார்டை வாங்கிச் சப்பாத்தியும் மிளகு போட்ட சிக்கன் குருமாவும் ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்திருந்தான் .

அவன் ஆர்டர் செய்வதற்குள் ஐந்தாறு பேர் கடைக்குள் நுழைந்தார்கள்.

அந்த சிப்பந்தி நிரஞ்சனுக்கு கண்ணாடி டம்ளரில் தண்ணீர் ஊற்றி நிரப்பினான்.

கண்ணாடித் தம்ளரில் இருந்த தண்ணீர் எடுத்த நிரஞ்சன் குடித்துவிட்டு அதை தன் அருகில் வைத்தான்.

அப்போது வேகமாக ஒருவர் அந்த கடைக்குள் நுழைந்தார். நுழைந்ததும் நேரே கைகழுவும் இடத்திற்கு சென்று அங்கு உள்ள கழிவறைக்கு போய் காரியங்களை முடித்து விட்டு சிறிது நேரத்துக்கெல்லாம் வெளியே வந்தார்.

எதிரே இருக்கும் டேபிளில் அமர்ந்தார். உடனே அவரிடம் வந்த சிப்பந்தி

என்ன சாப்பிடுறீங்க ? என்று கேட்க

வேகமாக மெனுக்கார்டு கேட்டார். அந்த நபர் கார்டை வேகவேகமாக திருப்பியவர், மட்டன் பிரியாணி சிக்கன் கிரேவி என்றார்.

சிப்பந்தி எடுத்து வருவதற்குள் ஏதோ போனில் பேசுவதாக நடித்து மட்டன் பிரியாணி சிக்கன் கிரேவி சாப்பிடல என்று சொல்லிவிட்டு கல்லாவிற்குச் சென்றான்.

உடனே போனில் பேசுவது போல் நடித்து மட்டன் பிரியாணி, சிக்கன் கிரேவி பார்சல் பண்ணுங்க என்றார்.

ஆடர் எடுத்தவன் அவரை ஒரு மாதிரியாகப் பார்த்தான்.

என்ன இந்தாளு சாப்பிடுவதற்கு ஆர்டர் பண்ணாரு. மறுபடியும் இப்போ பார்சல்னு இருக்கிறாரே? சரி என்று பார்சல் கட்டலாம் என்று சிப்பந்தி நினைத்தபோது,

அடுத்த நொடியில் ஏதோ போன் பேசுவது போல நடித்து,

என்ன சாப்பாடு கொண்டு வந்துட்டீங்களா? அடடா சரி கொஞ்ச நேரம் இருங்க என்று சொன்னவர்

சிக்கன் பிரியாணி , சிக்கன் கிரேவி கேன்சல் என்றார்.

கல்லாவில் அமர்ந்திருந்தவருக்கு கடுப்பானது.

ஏன் கேன்சல் பண்றீங்க ? என்று கல்லாவில் இருந்தவர் கேட்க

இல்ல சார் வீட்ல இருந்து சாப்பாடு கொண்டு வந்துட்டாங்க

என்று அவர் சொன்னபோது கல்லாவில் இருந்த அந்த நபர் பார்சலையும் கேன்சல் செய்தார்.

ஏன் என்னாச்சு? என்று அந்த சிப்பந்தி கேட்டபோது சைகையில் சொன்னார், கல்லாவில் இருந்தவர்.

அவர் போன பிறகு அவன் ஒரு மெண்டல். அதுதான் இப்படி நடந்துட்டான் என்று அவர் சொன்னார்.

அந்தக் கடையில் வேலை செய்பவர்கள் ஒருமாதிரியாக அந்த நபரைப் பற்றிப் பேசி சிரித்துக் கொண்டார்கள்

ஆனால் நிரஞ்சனுக்கு மட்டும்தான் தெரியும் .அவர் கழிவறைக்கு போவதற்கு தான் இத்தனை நாடகமாடி இருக்கிறார் என்பது.

ஒரு ஹோட்டலுக்குள் இலவசமாக கழிவறைக்குள் போய் வந்தால் திட்டுவார்கள் என்று நினைத்தவர் பிரியாணி சாப்பிடுவது போலவும் ஆர்டர் எடுப்பது போலவும் நடித்து அங்கிருந்து வெளியேறி விட்டார் என்பது நிரஞ்சனுக்கு மட்டுமே தெரிந்த உண்மையாக இருந்தது.

மனதுக்குள்ளேயே சிரித்துக்கொண்ட நிரஞ்சன் ஆர்டர் செய்த சப்பாத்தியும் குழம்பு வரச் சாப்பிட ஆரம்பித்தான்.

Leave a Reply

Your email address will not be published.