செய்திகள்

காய்கனி, மளிகை, இறைச்சி, மீன் அங்காடிகளில் கொரோனா தடுப்பு: கண்காணிப்புக்குழு, மேலாண்மை குழுவுக்கு கமிஷனர் அறிவுரை

சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில்

காய்கனி, மளிகை, இறைச்சி, மீன் அங்காடிகளில் கொரோனா தடுப்பு:

கண்காணிப்புக்குழு, மேலாண்மை குழுவுக்கு கமிஷனர் அறிவுரை

விதிகள் மீறப்பட்டால் மேல்நடவடிக்கை

 

சென்னை, ஜூலை 15–

சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள காய்கனி, மளிகைக்கடைகள், இறைச்சி மற்றும் மீன் அங்காடிகளில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிப்பதை கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்ட அங்காடி மேலாண்மை குழுக்கள் மற்றும் கண்காணிப்புகுழுக்களுடனான ஆலோசனைக்கூட்டம் ரிப்பன் மாளிகையில் கமிஷனர் கோ.பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசால் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஜூலை மாதம் 31–ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவை மற்றும் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் ஒருசில பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி சில கட்டுப்பாடுகளுடன் காய்கனி அங்காடிகள் மற்றும் தொழிற்சாலைகள் இயங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசால் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக காய்கறிக் கடைகள் மற்றும் மளிகை கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வர இயங்கவும், மீன் அங்காடி, இறைச்சி மற்றும் முட்டை கடைகள் சுகாதார முறையிலும் சமூக இடைவெளியை கடைபிடித்து இயங்க சில தளர்வுகளுடன் 6.7.2020 முதல் (கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர) (19.7.2020 மற்றும் 26.7.2020 முழு ஊரடங்கு நாட்கள் தவிர) ஊரடங்கை நீட்டித்து ஆணையிடப்பட்டது.

காய்கறிக்கடைகள், மளிகைக்கடைகள், மீன் அங்காடி, இறைச்சி மற்றும் இதர கடைகளில் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்தவும், நெறிமுறைப்படுத்தவும் அனைவரும் முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பதும் மற்றும் கிருமி நாசினி கொண்டு அவ்வப்போது கைகளை கழுவுவதும் அவசியமாகிறது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அங்காடிகள் மற்றும் கடைகளில் மக்கள் கூட்டத்தை முறைப்படுத்தவும், கண்காணிக்கவும், மேற்பார்வையிடவும் மாநகராட்சி கோட்ட உதவிப் பொறியாளர் அல்லது இளநிலைப் பொறியாளரை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு, காவல்துறை பணியாளர், மீன்வள உதவி ஆய்வாளர் (மீன் அங்காடியைப் பொறுத்தவரை மட்டும்), சம்பந்தப்பட்ட அங்காடிகளிலிருந்து மூன்று பிரதிநிதிகளை உள்ளடக்கிய 81 அங்காடி மேலாண்மைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், அங்காடி மற்றும் கடைகளை மேற்பார்வையிட சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வட்டாட்சியர், சிறப்பு வட்டாட்சியர் தலைமையில் 32 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

சிசிடிவி பதிவுகள் கண்காணிப்பு…

கண்காணிப்புகுழுக்களுடனான ஆலோசனைக்கூட்டத்தில் கமிஷனர் கோ.பிரகாஷ் பேசும்பொழுது தெரிவித்ததாவது:–

இந்த அங்காடி மேலாண்மைக் குழுவினர் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அங்காடிகளின் செயல்பாட்டினை தினமும் கண்காணித்து, சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பதையும், விற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருப்பதையும், அங்காடியின் நுழைவு வாயிலில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கைகழுவுவதற்கான கிருமி நாசினி வைத்திருப்பதையும்,

அங்காடிகளில் உள்ள கழிவுகள் மற்றும் உபயோகப்படுத்தப்பட்ட முகக்கவசம், கையுறை ஆகியவற்றை முறையாக அப்புறப்படுத்துவதையும், கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு சம்பந்தமான விழிப்புணர்வு அறிவிப்பு பலகை, சுவரொட்டி அமைக்கப்பட்டுள்ளதையும், அங்காடியில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா சம்பந்தப்பட்ட காவல்துறை அலுவலகத்துடன் இணைக்கப்பட்டு பதிவுகள் கண்காணிக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.

முகக்கவசம் அணியாத நபர்களை அங்காடிக்குள் அனுமதிக்கக்கூடாது. அங்காடிகளில் வாடிக்கையாளர்கள் அனைவரும் சமூக இடைவெளியினை கடைபிடிக்க மற்றும் கட்டுப்படுத்த தேவையான எண்ணிக்கையிலான பாதுகாவலர்கள், கைகழுவுவதற்கான கிருமி நாசினி அல்லது சோப்பு கரைசல் ஆகியவற்றை சம்மந்தப்பட்ட அங்காடி மேலாண்மைக் குழுவே ஏற்பாடு செய்யவேண்டும்.

மேலும், அங்காடி மற்றும் கடைகளை மேற்பார்வையிடும் கண்காணிப்புக் குழுவானது கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையின் விதிமுறைகளை கடைப்பிடிப்பதை கண்காணித்து, விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் அது குறித்து அறிக்கை சமர்ப்பித்து மேல்நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

இவ்வாறு கமிஷனர் தெரிவித்துள்ளார்.

கலெக்டர் சீதாலட்சுமி

இக்கூட்டத்தில் சென்னை மாவட்ட கலெக்டர் சீதாலட்சுமி, இணை ஆணையாளர் (சுகாதாரம்) பி.மதுசுதன் ரெட்டி, துணை ஆணையாளர் (வருவாய்) ஜெ.மேகநாத ரெட்டி, துணை ஆணையாளர் (பணிகள்) பி.குமாரவேல் பாண்டியன், வட்டார துணை ஆணையாளர்கள் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஷ், பி.என்.ஸ்ரீதர், வருவாய் அலுவலர், கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், மாநகராட்சி மண்டல அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள், மீன்வளத்துறை அலுவலர்கள், சந்தை மேலாண்மைக் குழு பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *