கிராமப்புறங்களைப் போல் இல்லாமல் நகரங்களில் தனித்தனியாக வீடுகள் இருக்காது.
ஒரே வீட்டில் தனித்தனி குடும்பங்கள் குடி வைத்திருப் பார்கள். அது வாடகையாக இருக்கலாம் அல்லது லீசுக்காக இருக்கலாம். அது ஒரு காம்பவுண்டு வீடாகவே இருக்கும்.
முன்பின் தெரியாதவர்கள் வெளியூர்க்காரர்கள், வேற மொழி பேசுவார்கள் என்று அத்தனை பேர்களும் அந்த காம்பவுண்டு வீட்டுக்குள் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
ஒரு சிலர் இணக்கமாக இருப்பார்கள். ஒரு சிலர் முகம் கொடுத்து கூட பேசாமல் போய்விடுவார்கள்.
எதிர் வீடு , பக்கத்து வீடு என்று அருகில் இருக்கும் வீட்டில் இருப்பவர்கள் கூட அறிமுகம் இல்லாமல் இருப்பார்கள் .காம்பவுண்ட் வீடுகளில்
அப்படி நகரத்தில் கொட்டிக் கிடக்கும் காம்பவுண்ட் வீடுகளில் ராஜேந்திரன் விலாஸ் என்ற காம்பவுண்டு வீடு இருந்தது .
அதில் 50 க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்தன. ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வார்கள் ஒரு சிலர் பேசிக்கொள்ள மாட்டார்கள் . அந்த காம்பவுண்ட் வீடு ஒரு குட்டி இந்தியாவாக இருக்கும்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம் என்று பல மொழிகள் பேசுபவர்கள் அங்கே இருப்பார்கள்.காம்பவுண்ட் வீட்டின் ஓனர் அந்த வீட்டில் நடக்கும் அத்தனை சண்டை சச்சரவுகளையும் நல்லது கெட்டதுகளையும் தூக்கி சுமப்பவர் ராஜேந்திரன். தமிழர் அவர்.
அவருக்கு மொழி, மதம் எல்லாம் கிடையாது. மாதாமாதம் வாடகை மட்டும் சரியாக வந்தால் போதும் என்று சாெல்வார்.
ஒரு முறை தெலுங்கு பேசும் ஒரு குடும்பத்தினருக்கும் தமிழ் பேசும் குடும்பத்தினருக்கும் சண்டை வந்தது.
இருவரும் புரியாத மொழியில் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.
மொழி புரியாவிட்டாலும் சண்டைதான் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது ராஜேந்திரனுக்குத் தெரிந்தது.
இருவரையும் சமாதானப்படுத்தினார்.சண்டை போட்டவர்கள் சமாதானமாகவே இல்லை .
வாசல் பெருக்குவது, தண்ணீர் தொட்டி, நடக்கும் பாதை, துணி காயப் போடுவது.என்று எல்லாவற்றிலும் சண்டை போட்டுக் கொண்டுதான் இருந்தார்கள்.இதையெல்லாம் யார் செய்வார்கள் என்று ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டதால் இந்த சண்டை வந்திருக்கிறது என்று ராஜேந்திரன் உணர்ந்தார்
அவர் எவ்வளவாே சொல்லிப் பார்த்தார். வேண்டாம் விட்டுவிடுங்கள் .யாருக்கு முடிகிறதோ அவர்கள் வேலை செய்யலாம் என்றார் .அவர்கள் சமாதானமாகவில்லை..
இனிமேல் உங்களுக்கும் எங்களுக்கும் பேச்சு இல்லை. பக்கத்து வீடாக இருந்தாலும் நீங்கள் யாரும் வரக்கூடாது என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள். இருவரும் அப்படியே ஆகட்டும் என்று ஒப்புதல் கொடுத்தார்கள்.
ராஜேந்திரனும் இரு வீட்டார் ஒருவருக்கொரு பேசக்கூடாது ஒருவருக்கு ஒரு பலி சுமத்தக் கூடாது என்று இருவருக்கும் ஒப்பந்தம் செய்து வைத்தார்.
பிரச்சனையை முடித்துவிட்டு அவரவர் வீட்டுக்கு இருவரும் கிளம்பினார்கள்.
அப்போது காம்பவுண்டில் இருந்த முற்றத்தில் இருவர் வீட்டுக் குழந்தைகளும் ஒன்றாக விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
அவர்களைப் பிடித்து இழுத்து பிரித்து வருவதற்கு இரண்டு குடும்பத்திற்கும் போதும் போதும் என்றாகி விட்டது.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ராஜேந்திரன்
பாத்தீங்களா ? பெரியவங்க நீங்க சண்ட போட்டுட்டு போயிட்டீங்க. ஆனா குழந்தைங்க ஒற்றுமையாத் தான் இருக்காங்க. நீங்க சண்டை போட்டு பிரிஞ்சாலும் இந்த குழந்தைங்க ஒண்ணாத் தான் விளையாடுவாங்க. இந்த காம்பவுண்ட் மொழி, இனம் மதம் கடந்து ஒரு இந்தியா மாதிரி தான் எப்போதும் இருக்கும்னு நினைக்கிறேன். நீங்களும் சீக்கிரம் சேர்ந்துருவீங்கன்னு நம்பிக்கை இருக்கு. போயிட்டு வாங்க என்று இரண்டு குடும்பத்தை அனுப்பினார் ராஜேந்திரன்.
குழந்தைகள் மட்டும் ஒருவருக்கொருவர் கண்கசங்கிய படியே சென்றார்கள்.
சீக்கிரம் இவர்கள் சேர்ந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை ராஜேந்திரனுக்கு இருந்தது.