சிறுகதை

காமாட்சியம்மன் ஜவுளிக்கடை | ராஜா செல்லமுத்து

அன்று …. வெள்ளிக்கிழமை.

காமாட்சியம்மன் கோயிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

சமூக இடைவெளி சற்று குறைவாகவே இருந்தது.

கடவுள் பக்தி பக்தர்களுக்கு மேலோங்கியிருந்தது. முகக் கவசம் அணியச் சொல்லி கோயிலுக்குள் செல்பவர்களை ரொம்பவே பயமுறுத்திக் கொண்டிருந்தார் காவலாளி.

‘‘இவங்களோட பெரிய தொந்தரவு எவ்வளவுதான் சொல்றது. முகக் கவசம் போடுங்க. போடுங்கன்னு. யார் அந்த பின்பற்றுவதே இல்லை’’ என்று கொஞ்சம் கோபமாகப் பேசினார் காவலாளி.

பக்தர்கள் காமாட்சி அம்மனை பார்க்கும் பரவசத்தில் சமூக இடைவெளியை மறந்திருந்தார்கள் …

பக்தர்கள் செல்லும் பாதையில் வட்டமிட்டு இருந்தாலும் வட்டத்தை மீறி ஆட்கள் நடந்து கொண்டிருந்தார்கள். கடவுள் நம்மை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில் நோயைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை அவர்கள்.

காமாட்சியம்மன் கோயிலுக்கு அருகில் இருக்கும் காமாட்சியம்மன் ஜவுளிக்கடையை நோட்டமிட்டான் பிரவீன்.

அவன் காலையில் வரும் போது, அந்தக் கடையின் வாசலில் நின்று கொண்டிருந்த பெண் அவன் மாலையில் கோயிலுக்கு வரும் போதும் அந்தப் பெண் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தாள்.

அந்தப் பெண்ணுக்கு அருகே ஒருவர் சேரில் அமர்ந்திருந்தார்.

ஒரு மனிதனை நிற்க வைத்து விட்டு நாம் அமர்ந்து கொண்டிருக்கிறோம் என்ற சின்னச் சலனம் கூட அவருக்கு இருந்ததாக தெரியவில்லை.

அந்தப் பெண் கால்கடுக்க நின்று கொண்டிருந்தார் . அவள் அப்படி நின்று இருப்பது ஜவுளிக் கடைக்கு வருபவர்களை வரவேற்கத் தான் என்பது அந்த ஜவுளி கடைக்கு தெரியும். ஆனால் அந்த ஜவுளி கடைக்கு யாரும் வந்ததாகத் தெரியவில்லை. ஜவுளிக்கடை காற்றாடிக் கிடந்தது .

மக்கள் வரும் வரைக்கும் உட்கார வைக்கலாமே? என்ற பிரவின் மனதுக்குள் நினைத்தான். ஆனால் அந்த ஜவுளி கடைக்காரர்கள் ஏனோ, அந்த பெண்ணை நிற்க வைத்தே செய்திருந்தார்கள். அந்தப் பெண்ணுக்கு என்ன கஷ்டமோ தெரியவில்லை? கால்கடுக்க நிற்கும் வரவேற்பு காவலாளி போல அந்த ஜவுளிக் கடையின் வாசலில் நின்று கொண்டு இருந்தாள்.இந்த காட்சியைப் பார்த்த பிறகு மனது வலித்தது.

என்ன மனுசங்க இவங்க, ஈரமில்லாமல் இருக்காங்களே? ஒரு பொண்ணு இவ்வளவு கஷ்டப்பட்டு நிக்குது. அதை பொருட்படுத்தாமல் இன்னொருத்தர் உட்கார்ந்து இருக்காரு என்ற பிரவீன் காமாட்சியம்மன் கோயிலுக்கு போகும் வாசலில் நின்றுகொண்டு காமாட்சி அம்மன் சாமி அவன் மனதில் வந்ததோ என்னவோ ஆனால் காமாட்சியம்மன் ஜவுளிக்கடையில் நின்று கொண்டிருக்கும் பெண் தான் அவனுக்கு அம்மனாக காட்சி தந்தார்.

அவன் மனம் முழுதும் அந்தப் பெண் நின்று கொண்டிருக்கும் அவஸ்தையில் தெரிந்தது.

மனுஷ வாழ்க்கை ரொம்ப மோசம் ஆனது.. இந்த வாழ்க்கையில எவ்வளவு சுயமரியாதையை இழக்க வேண்டியுள்ளது.

பாவம் இந்த பொண்ணுக்கு என்ன கஷ்டமோ என்று அவன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தாலும் அவன் எண்ணம் முழுதும் அந்தப் பெண்ணையே சுற்றிக் கொண்டிருந்தது.

அந்தப் பெண் ஒரு இடத்தில் நிற்காமல் நிற்கமுடியாமல் காலை அப்படியும் இப்படியும் என்று நகர்த்தி வைத்துக் கொண்டு உடம்பை ஒருவாராக உடைத்துக்கொண்டு மென்று கொண்டிருந்தாள். அந்த காட்சியைப் பார்த்த பிறகு அவளால் நீண்டநேரம் நிற்க முடியவில்லை என்பது மட்டும் தெளிவாக அவனுக்குத் தெரிந்தது… அவள் அருகில் அமர்ந்திருக்கும் மனித மிருகமோ அவளைச் சிறிது நேரம் கூட ஓய்வு எடுக்க அனுமதிக்க வில்லை. பிரவீன் கோவிலுக்குள் நுழைந்தான்….

காமாட்சி அம்மனைத் தரிசித்தான்.

ஆனால் அவன் தரிசித்தது அவனுக்காக இல்லை; ஜவுளிக்கடையில் கால்கடுக்க நின்று கொண்டிருக்கும் அந்தப் பெண்ணுக்காக…..

கடவுளே அந்தப் பெண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கையைக் கொடு காலையிலிருந்து நான் பார்க்கிறேன். அந்தப் பொண்ணு நின்னுகிட்டு தான் இருக்காங்க. ஏதாவது உக்கார மாதிரி அந்த பெண்ணுக்கு ஒரு வாழ்க்கை கொடுத்தால் நல்லது என்று சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்தான்.

அப்போது அந்தப் பெண் நின்று கொண்டுதான் இருந்தாள். அந்தப் பெண் பிரவீனுக்கு யாரும் இல்லை. உறவு எதுவுமில்லை; அவன் ஒரு வழிப்போக்கன்; அவன் காமாட்சியம்மன் கோவிலுக்கு வந்த பக்தர் மட்டும் தான்.

ஆனால் அந்தப் பெண் நின்று கொண்டே இருப்பது அவன் மனதில் காயத்தை ஏற்படுத்தியது. அவ்வளவுதான்.

ஒரு மனிதன்… அந்த மனிதன்… அவன்… அந்தப் பெண்ணின் அருகே அமர்ந்திருந்த மனிதன்…. இன்னும் அதே இடத்தில் அமர்ந்து கொண்டுதான் இருந்தான். அந்த….ப் பெண்ணின் பிஞ்சுப் பாதங்களை கொஞ்சம் கூட பொருட்படுத்த வில்லை .

நின்று கொண்டிருக்கும் அந்தப் பெண்ணை பார்த்துக் கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

அந்தப் பெண் அமர்ந்து வேலை செய்ய வேண்டும்; அந்தப் பெண் பெண்ணுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று காமாட்சியம்மன் கோவிலில் கோரிக்கை வைத்து சாமிகும்பிட்டு விட்டு வந்தான்.

விரைவில் அதை நிறைவேற்றுவதும் நிறைவேற்றாமல் போவதும் காமாட்சியம்மன் கையில்தான் இருக்கிறது.

அந்தப் பெண்ணைப் பரிவுடன் பார்த்துக் கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் பிரவீன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *