செய்திகள்

காப்புக்காடுகளைச் சுற்றி குவாரிகளா? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை, பிப். 3–

காப்புக்காடுகளைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு குவாரி நடவடிக்கைகள் மேற்கொள்ள விதிக்கப்பட்டிருந்த தடையை தளர்த்தி பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்த வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள தேசிய பூங்காக்கள், சரணாலயங்கள், காப்புகாடுகள் அமைந்துள்ள பகுதிகளை ச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு எந்த குவாரி நடவடிக்கைகளும் மேற்கொள்ளக் கூடாது என 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ்நாடு கனிமவள விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, காப்பு காடுகள் நீக்கப்பட்டு, அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை எதிர்த்து மாற்றத்துக்கான இந்தியா என்ற அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசு பதிலளிக்க உத்தரவு

அந்த மனுவில், காப்புக்காடுகளைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு குவாரி நடவடிக்கைகள் மேற்கொள்ள விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ளதன் மூலம், அப்பகுதிகளில் குவாரி நடவடிக்கைகள் துவங்கப்படலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாமல் வன விலங்குகளுக்கும் ஈடுகட்ட முடியாத பாதிப்பை ஏற்படும் எனவும், குவாரி உரிமையாளர்களின் அழுத்ததுக்கு பணிந்து முந்தைய ஆண்டு பிறப்பித்த அரசாணையை மீண்டும் திருத்தியுள்ளதாக தெரிகிறது என மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எந்த நியாயமான காரணமும் இல்லாமல், காப்புக்காடுகளில் குவாரி நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்திய இந்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், அதை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன் மற்தும் சத்திய நாராயண பிரசாத் அமர்வு, மார்ச் 2 ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *