லக்னோ, ஆக. 17–
உத்தரப் பிரதேசம் கான்பூர் அருகே சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலின் 20 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் அருகே இன்று அதிகாலை 2.30 மணியளவில் வாரணாசி – சபர்மதி இடையேயான சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் (19168) பீம்சேன் என்னுமிடத்தில் தடம்புரண்டது. அதிகாலை வேளையில் ரெயில் பயணிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. இதில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்று ரெயில்வே உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர். இருப்பினும் இந்த விபத்தால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கான்பூர் –மும்பை இடையேயான ரயில் போக்குவரத்துக்கு இதுவே முக்கிய தடம் என்பதால் அப்பகுதியில் பெரிய பாதிப்பு ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த பொருள் மீது சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலின் என்ஜின் மோதியுள்ளது. தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. உளவுத் துறையும், உத்தர பிரதேச மாநில போலீசாரும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர் என்று கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச நிவாரண ஆணையர் ஜி.எஸ்.நவீன் குமார் கூறுகையில்,
விபத்து நடந்த இடத்தில் இருந்து கான்பூர் ரெயில் நிலையத்திற்கு பயணிகளை ஏற்றிச் செல்ல பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இவைத்தவிர, 8 பெட்டிகள் கொண்ட மெமு ரெயில் விபத்து நடந்த இடத்திலிருந்து பயணிகளை கான்பூருக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்த விபத்தால் அந்த வழியாக செல்லும் 7 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 3 ரெயில்கள் வேறு மார்க்கத்தில் செல்லும்படி திருப்பிவிடப்பட்டுள்ளன. இதற்கிடையே விபத்து குறித்து தகவலறிய வீராங்கனா லக்ஷ்மிபாய் ஜான்சி ரெயில்வே சந்திப்பு, ஓராய் மற்றும் பாண்டா ரெயில் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.