ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி
கான்பூர், மே 5–
உத்தரப்பிரதேசத்தில் 5 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உடல்கருகி உயிரிழந்தனர்.
கான்பூரில் உள்ள சமான்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள 5 மாடி கட்டிடத்தின், முதல் 2 தளங்களில் ஷூ தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஷூ தயாரிப்பு நிறுவனத்தில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த தீ மளமளவென மற்ற தளங்களுக்கும் பரவியதால், அப்பகுதியில் கரும்புகை எழுந்தது. உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில், 4வது மாடிக்கும் தீ பரவிய நிலையில், முகமது டேனிஷ், நஷ்னீன் சாபா ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தனர். இவர்களின் 3 மகள்களும் தீ விபத்தில் சிக்கிக் கொண்டனர். இறுதியில் அவர்களும் உயிரிழந்தனர்.
4வது மாடிக்கும் தீ பரவியதால், வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் வெடித்து சிதறியது. இதன் காரணமாகவே, தீ மேலும் பரவியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
தீயை அணைக்கும் பணியில் ஏராளமான தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டன. இன்று அதிகாலை 2 மணியளவில் லக்னோவிலிருந்து மாநில பேரிடர் மீட்புப் படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அந்த கட்டிடத்திற்கு செல்லும் பாதை மிகவும் குறுகிய நிலையில் இருந்ததாலும், அப்பகுதியில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் காரணமாகவும் மீட்புப் பணிகள் தடைபட்டன. கட்டிடத்தைச் சுற்றி 500 மீட்டர் பரப்பளவில் வசிக்கும் மக்கள் மக்கள் உடனடியாக அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
அந்தக் கட்டிடத்தில் மூன்று சகோதரர்களின் குடும்பங்கள் வசித்து வந்தன. இறந்தவரின் சகோதரர்களும் அவர்களது குடும்பங்களும் மூன்றாவது மற்றும் நான்காவது தளங்களில் வசித்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் மூன்றாவது மாடியில் இருந்து நான்கு பேரையும், நான்காவது மாடியில் இருந்து மூன்று பேரையும் ஏணிகளைப் பயன்படுத்தி மீட்டனர். இருப்பினும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வசித்த மேல் தளத்தை அவர்களால் அடைய முடியவில்லை.
தரை தளத்தில் இயங்கும் ஒரு ஷூ யூனிட்டில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. தீ விபத்து காரணமாக ஏற்பட்ட சேதம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.