செய்திகள் முழு தகவல்

காந்தியாருக்கு துணை நின்ற சமூக நல்லிணக்கப் போராளி பீபி அம்துஸ் சலாம்!

நாட்டின் விடுதலைக்குப் பிறகும் அமைதிக்காக பாடிய குயில்கள்!


மா. இளஞ்செழியன்


பீபி அம்துஸ் சலாம்

இந்தியாவின் 75 வது விடுதலை ஆண்டின் நிறைவு நாள் கொண்டாட்டம் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. நாட்டின் விடுதலைக்காக எண்ணற்ற விடுதலைப்போராட்ட வீரர்களும் தலைவர்களும் போராடி, நமக்கு சுதந்திர காற்றை வழங்கி வரலாற்றிலும் இடம்பெற்றுள்ளனர். அவர்களைப் பற்றி பலரும் அறிந்திருக்கிறோம். அதேவேளை, நாட்டின் தளை அறுக்க பாடுபட்ட தலைவர்களுக்கு நெருக்கமாக இருந்தவர்களும் கூட, விடுதலைக்கு பிறகும், நாட்டின் நலன் காக்க பல்வேறு தியாகங்களை செய்துள்ளனர். அவர்களை பற்றிய ஒரு சிறுதொடரே இது.

நல்லிணக்க போராளி அம்துஸ் சலாம்

தேசத்தந்தை காந்தியடிகளின் சீடர்களில் ஒருவரே பீபி அம்துஸ் சலாம் . இந்த வீரப்பெண்மணி பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியலாவில் செல்வச் செழிப்பு மிக்க ஒரு குடும்பத்தில் அப்துல் மஜித் கான் என்பவரின் மகளாக பிறந்தார். நுரையீரல் பலவீனமாக இருந்தபோதிலும் காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் தங்கி நாட்டுக்காக பணியாற்ற விருப்பம் தெரிவித்தார். ஆனால், அவருடைய உடல்நிலையை கருத்தில் கொண்டு ஆசிரம பணிகளை பார்வையிட மட்டும் தேசத்தந்தை காந்தி அனுமதி அளித்தார்.

ஆனால், பீபி அம்துஸ் சலாமின் ஈடுபாடு காரணமாக, தொடர்ந்து ஆசிரமத்திலேயே தங்கவும் காந்தியாருடன் பயணம் செய்யவும் அனுமதித்த காந்தி, தனது மகள் என்று அவரை எங்கும் சொல்லிக்கொண்டார் . ஒருமுறை வல்லபாய் பட்டேலுக்கு, காந்தியார் எழுதிய கடிதத்தில் எனது மகளாக நான் ஏற்றுக்கொண்ட அம்துஸ் சலாமின் இதயம் பொன் போன்றது; ஆனால் உடல் வலிமை வெண்கலம் போன்றது என்று எழுதினார்.

பிரிவினை கலவரங்கள்

இந்திய நாட்டின் விடுதலை நாளான 1947 ஆகஸ்ட் 15 ந் தேதிக்கு முதல்நாளில் பாகிஸ்தான் பிரிவினை நடைபெற்றது. அதனையொட்டி நாடெங்கும் இந்து–முஸ்லீம் கலவரங்கள் வெடித்தது. வங்கத் தலைநகர் கொல்கத்தா, பீகார் போன்ற இடங்களில் ரத்த ஆறு ஓடியது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இந்து–முஸ்லீம் ஒற்றுமைக்காக காலமெல்லாம் போராடிய காந்தியாருக்கு இந்த கலவரம் இதயத்தில் ரத்தத்தை வரவழைத்தது. கலவரங்கள் நடந்து கொலைக்களமாக காட்சி அளித்த பல்வேறு இடங்களுக்கும் நடந்தே சென்று அமைதியை ஏற்படுத்தினார் காந்தியார்.

அப்போது, வங்கத்தின் நவகாளி பகுதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒருவருக்கொருவர் வெட்டிக்கொண்டு இறந்த செய்தி காந்தியாருக்கு கிடைத்தது. எல்லாவற்றையும் விட்டுவிட்டு, நாட்டின் ஆழமான காயங்களைக் குணப்படுத்தும் பயிற்சி பெற்ற சீடர்களின் ஒரு முழுப் படைப்பிரிவுடன் காந்தியின் வரலாற்று சிறப்புமிக்க நவகாளி வருகை தொடங்கியது. நவகாளி என்பது பிரம்மபுத்திராவின் படுகையில் பெரும்பாலும் சதுப்பு நிலமாக இருக்கும் பிராந்தியம். போக்குவரத்தே மிகக் குறைந்த அளவில்தான் அப்போது இருந்தது. அங்கே அமைதி யாத்திரையை காந்தி மேற்கொண்டபோது காந்தியாருக்கு வயது 77. காந்தி தனது அகிம்சைத் தோழர்களுடன் வகுப்புவாத பைத்தியக்காரத்தனத்தைத் தடுக்க உறுதியாக நின்றார். காந்தியார் ஒவ்வொரு பகுதியாக நடந்தே சென்ற இடமெல்லாம் அமைதி ஏற்பட்டது.

வாள் மீட்க 25 நாள் உண்ணா நிலை

அப்போது, மகாத்மாவின் சீடர்களில் ஒருவரான பீபி அம்துஸ் சலாம், காந்தியாருடன் நவகாளியில் இருந்த கிராமம் கிராமமாக நடந்து, அன்புடன் வாழ்வது, வெறுப்பைக் கைவிடுவது, புதிய இந்தியாவைக் கட்டியெழுப்புவது என்று மக்களுக்கு விளக்கி வந்தார். ஒரு நாள் நவகாளியில், பீபி அம்துஸ் சலாம் ஒரு ஊரைக் கடந்து சென்றார். அங்கு துர்கா கோயிலில் இருந்த சிலையின் வாள்கள் வன்முறையின்போது காணாமல் போனது. அந்த வாள்களை மீட்க, பீபி அம்துஸ் சலாம் அதே நேரத்தில் அங்கு உண்ணாவிரதத்தில் அமர்ந்தார்.

அம்துஸ் சலாம் உண்ணாவிரதம் இருக்கிறார் என்ற செய்தி காந்தியை எட்டியது. இந்துக்கள் பூஜையில் பயன்படுத்தும் மூன்று வாள்கள் வன்முறையின்போது திருடப்பட்டதாகவும், அதை மீட்கும் வரை தான் உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன் என்றும் அம்துஸ் சலாம் அறிவித்தார். அவரது உண்ணாவிரதம் 25-வது நாளை எட்டியபோது அங்கு காந்தி வருகிறார். இரண்டு வாள்கள் மீட்கப்பட்டன. மீதமுள்ள வாள் கிடைத்தால்தான் உண்ணாவிரத்தை நிறுத்துவேன் என்று அம்துஸ் பிடிவாதமாக இருந்தார். எனினும், அங்குள்ள முஸ்லிம்களுடன் காந்தி பேசி ஏற்பட்ட சமரசத்தால், காந்தியே நேரில் வந்து பீபி அம்துசலாமின் உண்ணாவிரதத்தை பழச்சாறு கொடுத்து முடித்து வைத்தார்.

பீபி அமத்துஸ் சலாம் உண்ணாவிரதத்தைத் தொடங்கி அனைவரின் நம்பிக்கையையும் பெற்றார். இதுபோன்ற நடவடிக்கைகள், ஒரு முழு சமூகத்தின் நம்பிக்கையை வளர்ப்பதற்கான ஒரு வழியாகும். இதன் விளைவு சுற்றிலும் நடந்த வகுப்புவாத கலவரங்களும் நின்று போனது. ஒவ்வொருவரின் நம்பிக்கையையும் மதிக்க வேண்டும், சமுதாயத்தில் அன்பையும் நம்பிக்கையையும் வளர்த்துக்கொள்ள எவ்வளவு துன்பப்பட வேண்டும் என்பதை பீபி அமத்துஸ் சலாமின் வாழ்க்கை நமக்கு சொல்லிதருகிறது.

மறுவாழ்வு இல்லங்கள்

மேலும் இவர், 1947-48 ஆம் ஆண்டில், பிரிவினையைத் தொடர்ந்து ஏற்பட்ட கைகலப்பின் போது கடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான பெண்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணியில் ஈடுபட்டார். மேலும் அம்துஸ் சலாம் அகதிகள் நல்வாழ்வுக்காக பாகிஸ்தானுக்கு பல பயணங்களை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலா மாவட்டத்திலுள்ள ராஜ்புரா நகரில் கஸ்தூரிபா சேவா மந்திரை நிறுவி அங்கு குடியேறினார். பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பஹவல்பூரில் இருந்து வெளியேறிய இந்துக்களுக்கான மீள்குடியேற்றத்திற்கு பெரும் பணியாற்றினார்.

அகதிகளின் மறுவாழ்வுக்காக இந்திய அரசு பாட்டியாலா மாவட்டத்தின் ராஜ்புராவில் ஒரு நகரை வடிவமைத்தபோது, அகதிகள் முகாம்களில் உள்ள குழந்தைகளின் கல்விக்காகப் பணியாற்றிய இந்துஸ்தானி தலிமி சங்கத்துடன் இணைந்து அங்கும் அம்துஸ் சலாம் பணியில் ஈடுபட்டார். 1980 களில், சிறைச் சீர்திருத்தங்களுக்கான அகில இந்தியக் குழுவில் நிரந்தர அழைப்பாளராக பணியாற்றி வந்த பீபி அம்துஸ் சலாம் 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மரணமடைந்து, இந்து–முஸ்லீம் நல்லிணக்கத்துக்கான தனது பயணத்தை நிறுத்திக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published.