“பயணிகளின் கனிவான கவனத்திற்கு சென்னை எக்மோரில் இருந்து மதுரை வரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் இன்னும் சற்று நேரத்தில் இரண்டாவது நடைமேடைக்கு வந்து சேரும் என்று பதிவு செய்யப்பட்ட குரல் பதிவு, எக்மோர் ரயில்வே நிலையத்தில் இருந்தவர்களையெல்லாம் துரிதமாகச் செயல்பட வைத்தது.
” இன்னும் கொஞ்ச நேரத்துல டிரெயின் வந்துரும். எல்லா பொருளையும் எடுத்து வையுங்க”
எத்தனை பை கொண்டு வந்தீங்க?
அந்த வாட்டர் பாட்டில எடுத்து உள்ள வை. சாப்பாடு வாங்கிட்டு வரலாமா? இல்ல டிரெயின்ல சாப்பிடலாமா?
” அந்த சூட்கேஸ் எங்க ? இன்னும் கொஞ்ச நேரத்துல டிரெயின் வந்துரும் இப்பவே போய் பிளாட்பாரம்ல நிக்கலாமா”
இப்படி எண்ணற்ற பயணிகள் பேசும் பேச்சுக்கள்அங்கு கேட்டுக் கொண்டிருந்தன.
இந்தியிலும் தமிழிலும் ஒலிபரப்பு செய்யப்படும் அந்த அறிவிப்புக் குரலை தாண்டி நடைமேடை முழுவதும் கேட்டுக் கொண்டிருந்தது,பயணிகளின் பரபரப்புக் குரல். இது அத்தனையும் வேடிக்கை பார்த்த படியே பயணிகள் காத்திருப்போர் அறையில் அமர்ந்திருந்தான் சுதாகர். அவனுக்கு எந்த பரபரப்பும் இல்லை .அமைதியாக எதுவோ எதையோ உற்று நோக்கி கொண்டிருந்தான்.
“சென்னை எக்மோரில் இருந்து மதுரை வரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் இன்னும் சற்று நேரத்தில் இரண்டாவது நடைமேடைக்கு வந்து சேரும் ” என்று மறுபடியும் மறுபடியும் இந்தியிலும் தமிழிலும் அந்த வாசகம் ஒலித்துக் கொண்டே இருந்தது. அதுவரை பொறுத்திருந்த பயணிகள் எல்லாம் தங்கள் உடைமைகளைத் தூக்கிக் கொண்டு பிளாட்பாரத்திற்கு வந்திருக்கிறார்கள். முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள் அவர்கள் பெட்டிகளுக்கு அருகே நின்று கொண்டு தண்டவாளங்களின் அதிர்வை கணித்துக் கொண்டிருந்தார்கள்
” இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துரும் போல. தண்டவாளம் அதிருது ” என்று ஜோசியம் சொன்னது போல் சொன்னார் ஒரு பெரியவர்.
டீ காபி என்று அந்தச் சூழலில் விற்றுக் கொண்டு வந்ததை வாங்கி உறிஞ்சியபடியே நின்று கொண்டிருந்தார்கள் பயணிகள்.
அவர்கள் பார்வை எல்லாம் கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணாத ரயிலைப் பார்த்துக் கொண்டே இருந்தன. தண்டவாளங்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன. எப்போது சக்கரங்கள் தன் மீது பதியும் என்று ஆவலாய் காத்திருந்தன இருப்புப் பாதைகள்.
அப்போதும் சுதாகர் எந்த பரபரப்புமின்றி அமைதியாக உட்கார்ந்திருந்தான். அவனின் பயணம் தான் என்ன? எதற்காக அமர்ந்திருக்கிறான்? என்று அங்கே இருந்தவர்கள் யாரும் பொருட்படுத்தவில்லை. இன்னும் சற்று நேரத்திற்கு இரண்டாவது பிளாட்பாரத்திற்கு வைகை எக்ஸ்பிரஸ் வந்து சேரும் என்ற ஒலிபரப்பு கேட்டுக் கொண்டே இருந்தது.
சிறிது நேரத்திற்கெல்லாம் ஊ என்ற சத்தம் எங்கோ கேட்க, தடக் தடக் தடக் என்ற இசை முழுங்கியபடியே வைகை எக்ஸ்பிரஸ் மிக வேகமாக வந்து கொண்டிருந்தது.தண்டவாளங்கள் அதிர்ந்து குலுங்கின. முன்பதிவு செய்யப்படாத பயணிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார்கள் காவல்துறையினர் .
“வரிசையா நிக்கலைன்னா துரத்தி விட்டுருவேன். வரிசையா போய் நில்லுங்க. எங்க இடம் கிடைக்குதாே அங்க தான் போய் உட்காரனும். முண்டிகிட்டு முண்டிகிட்டு போனா முட்டிக்கு கீழ அடிச்சிடுவேன்” என்று காவல்துறையினர் பயமுறுத்த முன்பதிவு செய்யப்படாதவர்களின் கால்கள் முன்னாடி இருந்தவர்களுக்கு முன்னால் போகாமல் இருந்தன.
சிறிது நேரத்திற்கெல்லாம் தடக்…. தடக் சத்தம் ஓய்ந்து பிளாட்பாரத்தில் நின்றது வைகை எக்ஸ்பிரஸ்.
அப்போதும் சுதாகர் அமைதியாக இருந்தான்.எதற்கு அவன் அப்படி இருக்கிறான்? என்பது மற்றவர்களுக்குத் தெரியவில்லை. சிறிது நேரம் அங்கே நின்றிருந்த வைகை எக்ஸ்பிரஸ் முழுவதும் மனிதர்களால் நிரம்பி வழிந்தது. முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள் முன்பதிவு செய்யப்படாத பயணிகள் என்று மனித உயிர்களை நிரப்பிய அந்த ரயில் புறப்படத் தயாரானது .எந்த சமிக்கையும் இல்லாமல் அப்போதும் அமைதியாக அமர்ந்திருந்தான், சுதாகர். அவன் காத்திருப்போர் அறையில் அமர்ந்திருப்பதைப் பார்த்த ஒரு காவலர்
“ஏன் இவன் இங்கேயே உட்கார்ந்திருக்கான்? இவன எங்கேயோ பாத்தது மாதிரி இருக்கே ?”என்ற சந்தேகப் பொறி தட்டியது .ரயில் புறப்பட தயாரானது அதுவரை அமைதியாக இருந்த சுதாகர் ரயில் புறப்படும் நேரம் பார்த்து குடுகுடுவென ஓடி வந்தாள் ஓடும் ரயிலை பின் தொடர்ந்து ஓடினான்.
” அட பைத்தியக்காரா இவ்வளவு நேரம் உட்கார்ந்து இருந்திட்டு ரயில் போன பிறகு ஓடுகிறானே இவன் என்ன பைத்தியமா? “என்று காவலர்கள் அவனைத் துரத்த அவன் அந்த நடைபாதை வரை ஓடிவிட்டு புஸ் என்று கீழே அமர்ந்தான். அவன் கண் பார்வையிலிருந்து தொலைதூரம் சென்று கொண்டிருந்தது வைகை எக்ஸ்பிரஸ். கண்ணுக்கு எட்டும் தூரம் வரை பார்த்துவிட்டு அமைதியாக வெளியே சென்றான் சுதாகர்.
“எதற்காக ஓடும் ரயிலை துரத்திக் கொண்டு ஓடினான்? என்று பார்த்த அங்கிருந்தவர்களுக்கு அவன் மீது வியப்பும் ஒரு சந்தேகத்தையும் ஏற்படுத்தியது.
மறுநாள் அதே நேரம் அதே வைகை எக்ஸ்பிரஸ் மறுபடியும் காத்திருப்பாேர் அறையில் அமர்ந்திருந்தான் சுதாகர்.
” சென்னையில் இருந்து மதுரை வரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் இன்னும் சற்று நேரத்தில் இரண்டாவது நடைமேடைக்கு வந்து சேரும் ” என்ற அறிவிப்பு இந்தியிலும் தமிழிலும் மறுபடியும் கேட்டுக் கொண்டிருந்தது. அப்போதும் காத்திருப்போர் அறையில் அமர்ந்திருந்தான் சுதாகர்.
அன்றும் முன்பதிவு செய்தவர்கள் முன்பதிவு செய்யாதவர்கள் என்று அத்தனை பேரும் அந்த ரயிலுக்காக காத்திருந்தார்கள். சிறிது நேரத்திற்கெல்லாம் ரயில் வந்தது. அடித்துப் பிடித்துக் கொண்டு ஏறினார்கள். அப்போதும் அன்றும் காத்திருப்போர் அறையில் அமர்ந்திருந்த சுதாகர் ரயில் புறப்பட ரயிலின் பின்னாலே அன்றும் ஓடினான்.
நேற்றுப் பார்த்த அதே காவல்துறையினருக்கு அங்கிருந்தவர்களுக்கு ஒரே வியப்பு
“என்ன இவன் காத்திருப்பார் அமர்ந்திருக்கிறான். ரயிலில் ஏறுவதும் இல்லை. இவனை ஏற்றி விடுவதற்கோ அல்லது இவன் ஏற்றி விடுவதற்கோ எந்த உறவினர்களும் இங்கு வரவில்லை. எதற்காக ரயில் புறப்பட்டவுடன் ரயிலின் பின்னால் ஓடுகிறான்? தெரியவில்லையே? என்ற ஆச்சரியப்பட்டு அவனைப் பிடிக்க முயன்றார்கள் .அவன் ரயில் போகவும் ரயிலை விட வேகமாக ஓடி அந்த இடத்தை விட்டு தப்பித்தான் .
மறுநாள் எப்படியும் வருவான் என்ற சந்தேகத்தில் காவல்துறையினர் அவனுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். அன்று அவன் வரவில்லை. அப்போதுதான் தெரிந்தது வைகை எக்ஸ்பிரஸ் அன்று கேன்சல் செய்யப்பட்டது என்று.
“மிகவும் விவரமான ஆளாக இருக்கிறானே? இன்று அவன் வரவில்லையே? என்று அவனைப் பற்றிக் பேசிக் கொண்டார்கள் காவல்துறையினர்.
மறுநாள் அதேநேரம் அதே வைகை எக்ஸ்பிரஸ் சுதாகர் பிளாட்பார்ம் டிக்கெட் மட்டும் எடுத்துக் கொண்டு அதே காத்திருப்போர் அறையில் வந்து அமர்ந்தான். இப்போது அவனைத் தூரத்தில் என்று கவனித்தார்கள் காவல்துறையினர். அதே வைகை எக்ஸ்பிரஸ் அறிவிப்பு…. ரயில் வந்து நின்றது. பரபரக்கும் ஆட்கள் ரயிலை எதிர்பார்த்துக் காத்துக் கிடந்தார்கள்.வழக்கம் போல ரயில் வந்ததும் பயணிகள் ஏறினார்கள் ரயில் மெல்ல நகர்ந்தது.அதுவரைக் காத்திருப்போர் அறையில் அமைதியாக உட்கார்ந்திருந்த சுதாகர் ரயிலின் பின்னே ஓடினான்.
ஏற்கனவே முன்னும் பின்னும் இவனைப் பிடிப்பதற்காக அமர்த்தப்பட்ட காவல்துறையினர் லபக்கென்று சுதாகரைப் பிடித்தார்கள்
“உனக்கு என்னடா பிரச்சனை? எதுக்காக தினமும் காத்திருப்போர் அறைக்கு வர்ற? அமைதியா உட்கார்ந்திருக்க. ரயில் போகவும், அது பின்னாடியே ஓடுற? உனக்கு என்ன பிரச்சனை?” என்று காவல்துறையினர் கேட்க பதில் சொல்ல முடியாமல் விழித்தான் சுதாகர்
“என்னடா உன் பிரச்சனை சொல்லு? எதுக்காக தினமும் இங்க வந்து காத்திருப்பாேர் அறையில உட்கார்ந்துட்டு ரயில் போகவும் அது பின்னாடி எதுக்காக ஓடுற?. ” என்று மறுபடியும் கேட்க
அவனால் பதில் சொல்ல முடியவில்லை
“எதா இருந்தாலும் சொல்லு உன்னைய ஒன்னும் செய்ய மாட்டோம்” என்று காவலர்கள் கனிவாக கேட்க ,எதுவும் சொல்லாமல் விழித்தான் சுதாகர்.அதற்குள் சில மனிதர்கள் வந்து சேர்ந்தார்கள்
” சார் இவர் பெயர் சுதாகர். கொஞ்சம் மனநிலை சரியில்லாதவர். தினமும் நாங்கதான் இங்க பிளாட்பார்ம் டிக்கெட் எடுத்து கொடுத்துட்டு விட்டுட்டு போயிடுவாேம். அவன் இங்கேயே உக்காந்துட்டு இருப்பான். ரயில்ல போறவங்க வர்றவங்கள பாத்துட்டு, ரயில் போகவும் அது பின்னாடியே கொஞ்ச நேரம் ஓடிட்டு வந்து அப்புறம் வெளியே வந்துருவான்.அப்புறம் எங்க கூட சேந்துக்கிருவான்.
நாங்க அவன ஹாேம்க்கு கூட்டிட்டுப் போயிருவோம் . அதுக்கப்புறம் அன்னைக்கு நாள் முழுக்க நிம்மதியா தூங்குவான். சாப்பிடுவான்.அப்படி என்னைக்காவது ஒரு நாள் வைகை எக்ஸ்பிரஸ் வரலன்னா எங்களுக்கு ரொம்ப பெரிய பாடா இருக்கும் சார் எங்களையெல்லாம் தூங்க விட மாட்டான். கத்திக்கிட்டே இருப்பான் பெரிய பிரச்சனை பண்ணுவான்” என்று அவர்கள் சொன்னதும்
” என்ன காரணத்துக்காக இவர் இப்படி இருக்காருன்னு தெரிஞ்சுக்கலாமா? என்று காவலர்கள் கேட்க
“சார் சுதாகர் சின்ன வயசா இருக்கும் போது, இதே வைகை எக்ஸ்பிரஸ்ல போகும் போது தான் அவங்க பெற்றோர்கள அவன் இழந்திருக்கிறான். ரயில் புறப்படும் நேரம், அவன் தண்ணீர் பாட்டில் வாங்குறதுக்காக வெளியே வந்திருக்கிறாள். அதுக்குள்ள ரயில் போயிருச்சு. ரயிலுக்கு பின்னாடியே ஓடி இருக்கான்..முடியல ரயில் போயிருச்சு. அதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சுன்னு அவனுக்கே தெரியல. அவங்கள பெத்தவங்களும் இறந்து போனது இரண்டு மூன்று ஸ்டேஷனுக்கு அப்புறம் தான் கண்டுபிடிச்சிருக்காங்க. இவனும் பித்து பிடிச்சு இந்த மெட்ராஸ்ல அலஞ்சுகிட்டு இருக்கான் ஏதோ அவன் கொஞ்சம் கொஞ்சமா சொல்ல சொல்ல, அத நாங்க புரிஞ்சுக்கிட்டோடம். அதனால தான் அவன் மனசு கோணக் கூடாதுங்கிறதுக்காக , தினமும் நாங்க வந்து பிளாட்பார்ம் டிக்கெட் எடுத்து கொடுத்துட்டு வெளியே நின்னுக்கிருவாேம். அவன் ரயில் போகவும் அதுக்கு பின்னாடியே ஓடிட்டு திரும்ப எங்ககிட்ட வந்துருவான். நாங்க ஹாேம்க்கு கூட்டிட்டு போயிருவோம். இன்னைக்கு ரயில் போயிருச்சு. ஆள் வரலைன்னு பார்த்தா, நீங்க அவன பிடிச்சுவச்சிருக்கீங்க? இத ஸ்டேஷன் மாஸ்டர் கிட்ட கூட சொல்லி இருக்கம்.அவரும் அனுமதி தந்தார். உங்களுக்கும் இன்பார்ம் பண்ணியிருப்பாருன்னு நினைச்சாேம் என்று சொல்லுவதற்குள் ஸ்டேஷன் மாஸ்டர் வந்து சேர்ந்தார் அவர் சொல்றதெல்லாம் உண்மை . அவர விடுங்க. போகட்டும்.நாம வாழ்ற வாழ்க்கைல எவ்வளவோ நல்லது செய்றோம் .எவ்வளவோ கெட்டதும் செய்றோம். நம்ம வாழ்க்கையில இது ஒன்னாவது நல்லது செஞ்சதா இருக்கட்டுமே; அவன விட்ருங்க. அவன் போகட்டும் ” என்று ஸ்டேஷன் மாஸ்டர் சொல்ல சுதாகரைக் காவலர்கள் விடுவித்தார்கள் .
மறுநாள் அதே காப்பாளர் அறையில் அமர்ந்திருந்தான் சுதாகர். மற்ற பயணிகளுக்கு அவனைப் பற்றி எதுவும் தெரியாது. ஏதோ பயணத்திற்காக தான் அமர்ந்திருக்கிறான் என்று நினைத்துக் கொள்வார்கள்.அதே நேரம் வைகை எக்ஸ்பிரஸ் ஒலிபரப்பு முடிந்த பிறகு, பயணிகள் ஏறி அமர்ந்தார்கள். ரயில் புறப்படத் தயாரானது. ரயில் மெல்லப் புறப்பட்டு தண்டவாளங்களில் ஓடியது.
சுதாகர் அந்த ரயிலை நோக்கி ஓடினான்.
#சிறுகதை #அறைகள் சொல்லும் கதைகள்