சென்னை, அக் 25
சென்னையில் ஏ ஆர் சந்தானகிருஷ்ணன் தலைமையில் வெற்றிகரமாக இயங்கி வரும் ரசிக ரஞ்சனி சபா அறக்கட்டளையின் சார்பில் நாடகம்- சின்னத்திரை- சினிமா மூன்றிலும் சுமார் 60 ஆண்டு காலம் பழுத்த அனுபவம் பெற்று இருக்கும் நடிகர் காத்தாடி ராமமூர்த்தியின் அரிய சேவையை பாராட்டி, அவருக்கு “சனாதன ரத்னா” விருதை “துக்ளக்” பத்திரிக்கை ஆசிரியர் எஸ் குரு மூர்த்தி வழங்கி கௌரவித்தார். அதோடு ரூ. 1.25 லட்சம் ரொக்கப் பரிசு, பாராட்டுப் பத்திரம் வழங்கினார்.
இதேபோல கர்நாடக இசைக் கலைஞர் என் விஜய சிவாவுக்கு கலா ரத்னா (ரூ. ஒரு லட்சம்), நாட்டியக் கலைஞர் முனைவர் லட்சுமி ராமசுவாமிக்கு நிருத்ய கலர ரத்னா (ரூ. ஒரு லட்சம்), கர்நாடக இசையறிஞர் களக்காடு முனைவர் கே ஆர் சீதாலட்சுமிக்கு கலா சேவா ரத்னா (ரூ.50,000), இசை மற்றும் நாட்டிய நிகழ்வில் சிறந்த ஒலி–ஒளிக் கலைஞர் கே. முருகனுக்கு கலா சேவா ரத்னா (ரூ. 50,000), வயலின் கலைஞர் எல்.ராமகிருஷ்ணனுக்கு யுவ கலா ரத்னா (ரூ. 25,000), வளர்ந்து வரும் பரதநாட்டியக் கலைஞர் கே.ஆர். மனஸ்வினிக்கு யுவ கலா ரத்னா (ரூ. 25,000)- விருதுகளையும், பாராட்டுப் பத்திரங்களையும் வழங்கி வாழ்த்தி குருமூர்த்தி சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சிக்கு ஏ ஆர் சந்தானகிருஷ்ணன் தலைமை வகித்து வரவேற்புரையாற்றினார். டைரக்டர் அருணா பிரபா ரங்கநாதன், விருது பெற்ற 7 கலைஞர்களின் விவரக் குறிப்பை வாசித்து வாழ்த்து கூறினார். முடிவில் இன்னொரு டைரக்டர் ஆர் நாகராஜன் நன்றி கூறினார்.
விசேஷமாக வடிவமைத்து தயாரித்த பொன்னாடையை அனைவருக்கும் குருமூர்த்தி போர்த்தினார். விருது பெற்றவர்களில் காத்தாடி ராமமூர்த்தி, விஜயசிவா, லட்சுமி ராமசாமி ஏற்புரையாற்றி, நன்றி தெரிவித்தார்கள். நிகழ்ச்சியை அழகு தமிழில் சுவைபட தொகுத்து வழங்கினார் ‘கலைமாமணி’ சிவி சந்திரமோகன்.
சபா நிர்வாகிகளில் ஒருவரான செல்லா, பரதநாட்டியக் கலைஞர்கள் பத்மா சுப்பிரமணியம்- சித்ரா விஸ்வேஸ்வரன், ஸ்ரீ கலாபரத், பாரதிய வித்யா பவன் நிர்வாகிகள் ராமசாமி, வெங்கடாசலம், ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபா கிருஷ்ணமூர்த்தி, பிரம்ம கான சபா ரவி, மகாகவி பாரதியாரின் பேரன் முனைவர் ராஜ்குமார் பாரதி, பிரபல மூத்த நாடக ஆசிரியர் குழந்தை மாலி, டிவி வரதராஜன், பக்தி சரண், நாடக தயாரிப்பாளர் பரத், ‘கேபிடல் கிச்சன்’ குமார் உள்ளிட்ட கலை உலக பிரமுகர்கள் பலரும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.
ஆரம்பத்தில் யுவ கலா பாரதி ஜி ரமேஷ் குழுவினரின் மங்கல இசையும், முடிவில் ஸ்ரீ ராமநாதன் குழுவினரின் சாக்ஸபோன் இசை நிகழ்ச்சியும் நடந்தது.