சிறுகதை

காது கேட்கும் கருவி – ராஜா செல்லமுத்து

காமராசு அவர் மனைவி அம்புசத்திற்கும் எப்போதும் ஏழாம் பொருத்தமாகத்தான் இருக்கும். காரணம். அன்புஜம் சொல்வது எதுவும் காமராசுவின் காதில் விழாது.

எத்தனையோ முறை கத்தி பார்த்தாள் அன்பாக சொல்லிப் பார்த்தாள். ஆனால் காமராஜ் தனக்கு காது கேட்கும் கருவி வேண்டவே வேண்டாம் என்று ஆரம்பித்தார்.

இயல்பு எதுவோ அதுவே வாழ்க்கை .இயற்கையை மீறி நான் எதுவும் செய்யப் போவதில்லை என்று மனைவி அன்புஜத்திடம் கூறினார்.

அது சரிங்க. நீங்க நானும் மட்டும் வீட்ல இருந்தா பரவாயில்ல .வீட்டுக்கு 10 பேர் வந்து போறாங்க ; அவங்க பேசுறது எதுவும் உங்க காதில் விழுற தில்ல. அவங்க உங்களப் பார்க்கும்போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு . அதனால நீங்க ஒரு ஒரு இயரிங் மெஷின் வாங்கி வச்சு தான் ஆகணும் என்று அடம் பிடித்தாலும் மனைவியின் கோரிக்கையை அறவே நிராகரித்தார் காமராசு.

அன்றாடம் இவர்களின் வாழ்க்கை எதார்த்தத்தை மீறி எரிச்சலை தான் உண்டு பண்ணியது .

இருவர் மட்டுமே இருக்கும் வீட்டில் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதும் சைகை செய்வது கொள்வதுமாகவே காலம் கடந்தன.

80 வயதில் தாண்டிய காமராசுக்கு காது கேட்டால் என்ன கேட்க விட்டால் என்ன என்று உறவினர்களும் ஒதுங்கிக் கொண்டார்கள்.

20 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் காது கேட்கும் கருவியை வாங்கி வைத்து என்ன ஆகப்போகிறது? என்று அந்த பக்கமே செல்லாமல் இருந்தார் காமராசு . செலவை பற்றிச் சிந்திக்காத அன்புஜம் மற்றவர்கள் முன் கணவன் படும் அவதி அவமானம் வெட்கம் இதையெல்லாம் கண்டு தினம் புழுங்கினாள்.

இதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாத காமராசு இதுதான் வாழ்க்கை என்று அப்படியே விட்டுவிட்டார் .

காமராசு வீட்டிற்கு ஒரு முறை உறவினரான மாணிக்கம் வந்தார். கணவனின் நிலையை மாணிக்கத்திடம் எடுத்துக் கூறினாள் அன்புஜம்.

மாணிக்கமும் தன் பங்கிற்கு காமராசுவிடம் எவ்வளவாே சொல்லிப் பார்த்தார் .

அவ்வளவு பணம் செலவழித்து தனக்கு காது கேட்க தேவையில்லை என்று ஒதுக்கி விட்டார் காமராசு.

ஆனால் காமராசுவை தனக்கு தெரிந்த மருத்துவரிடம் கொண்டு போய் காண்பித்தார் மாணிக்கம்; அவருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு காது கேட்கும் கருவியும் வழங்கப்பட்டது. அந்த காது கேட்கும் கருவியை தன் காதில் வைத்ததும் புதிதாக பிறந்ததாக உணர்ந்தார் ,காமராசு

இந்தப் பிரபஞ்சத்தின் சத்தங்களை சிறிது காலம் நுகராதவரின் காதுகள் காது கேட்கும் கருவியை வைத்ததும் இரண்டு காதுகளும் இயற்கையோடு பேச ஆரம்பித்தன. அத்தனை சத்தங்களை உள்வாங்கிய காதுகளுக்கு அது இதமாக இருந்தது.

அன்று முதல் எல்லாம் புதிதாக தெரிந்தன.

சின்ன சத்தம் கூட அவருக்கு பேரிசைச்சலாக இருந்தது.

முதன்முதலாய் பிறக்கும் குழந்தைக்கு காது எப்படி கேட்குமோ ?அந்த அளவு தான் காமராசுக்கு கேட்டது.

ஒரு வயோதிக தன்மையுள்ள ஆண்மகனின் காதுகள் இவ்வளவு டெசிபல் வரை தாங்கும் என்ற குறைகளை உடைத்து அவரது காதுக்குள் சின்ன சத்தம் கூட பூகம்பமாக பிறந்தன

இவ்வளவு சத்தமா கேக்குது நமக்கு இது சரிப்பட்டு வராது என்று அந்த காது கேட்கும் கருவியைபிடுங்கி கீழே வைத்தார் காமராசு.

காது கேட்கும் கருவியில் சத்தத்தை கூட்டலாம். குறைக்கலாம் .அந்த பட்டன் இதில் இருக்கிறது என்று சொல்லிப் பார்த்தாள் அம்புஜம்

காமராசு அதைக் கேட்கவில்லை; இது எனக்கு சரிப்பட்டு வராது . நான் எப்போதும் போல இருந்துக்கிறேன். இந்த காதுக்கு கேக்குற கருவி எல்லாம் எனக்கு வேண்டாம் என்று விடாப்படியாக அடம்பிடித்தார் காமராசு .

வயோதிகரிடம் வம்பு வளர்க்க வேண்டாம் என்று விட்டுவிட்டார் அம்புஜம்.

நாட்கள் நகர்ந்தன .எப்போதும் போல மௌனமே சாட்சியாக இந்தப் பிரபஞ்சத்தின் சத்தங்கள் எதுவும் விழாமல் ரொம்பவே சுத்தமாக இருந்தார் காமராசு.

எது வேண்டுமென்றாலும் பேப்பர் பேனாவை எடுத்து எழுதிக் கொடுப்பதும் இவர் கேட்ட கேள்விகளுக்கு அம்புஜம் பதில் எழுதி கொடுப்பதுமாக இருந்தார்கள்.

நாட்கள் ,மாதங்கள், உருண்டன வயோதிகத்தின் காரணமாய் காமராசு ஒரு பனி பெய்த மாதத்தில் இறந்து போனார் .

இறப்புக்கு வந்திருந்த மாணிக்கம் அன்று இரவு எதுவும் கேட்கவில்லை.

சில நாட்கள் கழித்து காமராசு வீட்டுக்கு சென்ற மாணிக்கம் மனைவி அன்புஜத்திடம் கேட்டார்’

அந்த காது கேட்கிற மிஷின் சும்மா தான் இருக்கு அத கொடுத்தீங்கன்னா, அது தேவைப்படுறவங்களுக்கு கொடுக்கலாமே ?என்று மெல்ல பேசினார் .

பொலபொலவென்று அழுதாள் அம்புஜம். அவர் விட்டுப் போனதில் ரொம்ப முக்கியமா இந்த காது கேட்கற மெஷின் தான் இருக்கு. இத நான் வச்சிக்கிறேன். இத பார்க்கும் போதெல்லாம் அவர் ஞாபகம் வருது.இது என்கிட்ட இருக்கட்டும் என்று சொன்னாள்.

அவள் பேசியதை உணர்ந்த மாணிக்கம் இல்ல வேண்டாம் . அது உங்ககிட்டயே இருக்கட்டும் என்று சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார் .

மாணிக்கத்தின் காதுகளில் காமராசுவின் பேச்சுகள் அவர் காதில் விழுந்து கொண்டிருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *